இந்தியாவையும் சீனாவையும் யுத்தத்திற்குள் தள்ளும் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்

இந்தியா ஏறத்தாள தனது 15,100 கிமீ நீளமான எல்லையை ஏழு நாடுகளுடன் (பங்களாதேஷ், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) பங்கிட்டுக் கொள்கின்றது. இதில் இந்தியாவிற்கு, சீனா (3488 கிமீ), பாகிஸ்தான் (3323 கிமீ) ஆகிய இரு நாடுகளுடனுனான எல்லைப்பிணக்கு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இதற்குக் காரணம் இந்தியா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இன்னமும் பல இடங்களில் இரு நாட்டுக்குமிடையிலான எல்லைகள் சரியாக நிர்ணயிக்கப்படாததே. இதனால் இந்தியாவிற்கு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை (Line of Actual Control – LAC) வரையறுக்கப்படவில்லை. அதனால், கடல் மட்டத்திலிருந்து 4200 மீற்றர் உயரமான மிகவும் குளிரான நிலைகளில் இருநாட்டு இராணுவங்களும் முன்னேறுவதும், பின் வாங்குவதுமான சூழ்நிலையுள்ளது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. இறுதியாக 2013, 2017 களில் இந்திய – சீன எல்லையில் பதற்ற நிலைமைகள் தோன்றி மறைந்தன. மீண்டும் இவ்வருடம் மே மாதத்திலிருந்து கிழக்கு லடாக் (Ladakh) பிராந்தியத்தில் இரு நாட்டு இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஜுன் 15ந் திகதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய, சீன இராணுவத்தினர் மீண்டும் மோதிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசியும் நேரடிக் கைகலப்பிலும் ஈடுபட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த மோதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 இந்திய இராணுவத்தினர் பலியானதாக இந்தியத்தரப்பு தெரிவித்துள்ளது.. இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படைக்கு ஏற்பட்ட சேதங்கள் தெரியாது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இராணுவம் இடையேயான மோதலில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் தமது காலனித்துவ நாடான இந்தியாவின் எல்லையை விஸ்தரிக்க எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாகத்தான், இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் எல்லைகளை உருவாக்கும் பணிகள் தொடங்கின. 1914இல் சிம்லாவில் (Shimla) நடந்த சந்திப்பில், திபெத்தின் ஆட்சி அதிகாரத்தை வரையறுக்கவும், இந்தியா – திபெத் – சீனா இடையிலான எல்லையைத் தீர்மானிக்கவும், பிரித்தானியா அரசு முயன்றது. இதில் முத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டாலும், அப்போது மெக்மொஹன் கோடு (McMahon Line) தொடர்பான ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் திபெத்தும் மட்டுமே கையெழுத்திட்டன. அந்தக் கோடுதான் இந்தியா- சீனா இடையில் இமயமலைப் பகுதியில் நீண்டிருக்கும் எல்லை என்று பிரிட்டிஷ் இந்திய அரசு முடிவுசெய்தது. ஆனால் பின்னர், தான் கையெழுத்திடாத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா மறுத்துவிட்டது.

1949 ஆம் ஆண்டில் மாசே துங் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி அமைந்த பின்னர், சீனா பலம் பெற ஆரம்பித்தது. 1947 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, சீனாவுடனான எல்லைப் பிரச்சனயைத் தீர்ப்பதைக்காட்டிலும், ஆசியாவில் சீனாவை விடவும் பலம் பொருந்திய நாடாக திகழ வேண்டுமென்பதிலேயே முனைப்பாக இருந்தது.
மெக்மொஹன் கோட்டை 1914 முதல் சீனா அங்கீகரிக்கவில்லை என்ற போதிலும், 1949 வரை சீனாவின் எந்த அரசும், எல்லைப் பிரச்சினையைக் கையில் எடுக்கவில்லை. 1954 இல் இந்தியாவும் சீனாவும் செய்து கொண்ட பஞ்ச சீலக் கொள்கையின் அடிப்படையில்; திபெத்தின் மீதான சீனாவின் முழுஉரிமையை (sovereignty) இந்தியா முதன்முதலில் அங்கீகரித்தது. இச்சந்தர்ப்பத்திலோ அல்லது இதன் பின்னரோ எல்லைப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கலாம்.

1959 ஆம் ஆண்டில், சீன அரசுக்கெதிராகத் திபெத்தில் நடந்த கிளர்ச்சியின்போது, திபெத்தின் 14வது தலாய் லாமா அடைக்கலம் கோரி இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவிலிருந்து கொண்டு சீனாவை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டார். இது சீனாவை சீற்றமுற வைத்தது. அதற்கு காரணம், ‘ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது’ என்ற பஞ்ச சீலக் கொள்கைகளில் ஒன்றினை இந்தியா மீறிவிட்டதாக, சீனா கருதியிருக்கலாம். இந்தியா தலாய் லாமாவை அரவணைத்தது என்பது தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சனையோடு, இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையிலான புதிய பிரச்சனையைத் தோற்றுவித்தது.

1962 ஆம் ஆண்டு ஒக்ரோபர் – நவம்பரில் நடந்த சீனா – இந்தியா யுத்தத்தின் பின்னணியில் தலாய் லாமா விவகாரமும் இருந்ததென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஒருதலைப்பட்சமான இந்த யுத்தத்தில், இந்தியாவின் கிழக்கு எல்லைப்பகுதிகளில் சீன இராணுவத்தினர் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றி வைத்திருந்து விட்டு, பழைய நிலைக்குத் திரும்பினர். இது இந்தியாவின் பகுதிகளை அத்துமீறிக் கைப்பற்றும் நோக்கம் சீனாவிற்கு துளியளவும் கிடையாது என்பதைக் கோடிட்டுக் காட்டிற்று.

இந்தியாவும் சீனாவும் பலமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பதே நவீன காலத்தில் மறைமுகமான பெரும்போர் தவிர்ப்பு ஒப்பந்தம். இதனால் இரு நாடுகளுக்குமிடையே பெரிய யுத்தம் வராதென பலரும் அடித்துக் கூறுகின்றனர். இதில் கொஞ்சம் உண்மையில்லாமலில்லை. ஆனால் ஒரு தரப்பு இழைக்கும் ஏதோ ஒரு தவறின் மூலமாக யுத்தம் உருவாகலாம்.

சீனாவும் இந்தியாவும் முறையே 144 கோடி, 138 கோடி சனத்தொகையைக் கொண்ட நாடுகள். இதனால் இந்த இரு நாடுகளுக் இடையே மாத்திரம் பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் பட்டசத்தில், இன்னுமொரு அரை நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் மேற்கத்தைய நாடுகளைவிட மிஞ்சலாம். 2018 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டொலர். இதில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 18.84 பில்லியன் டொலர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு தொழில் துறைகள் சீனாவைச் சார்ந்தே செயல்பட்டு வருகின்றன. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இரு நாடுகளினதும் பங்களிப்பே முதன்மை வகிக்கின்றது. இவையெல்லாவற்றையும் கருத்திற்கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாக எல்லைகளில் படைகளைக் குவிக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம், தொடர்ச்சியாக இரு நாடுகளும் உறவுகளைப் பலப்படுத்த வேண்டும்.

-வானவில் இதழ் 114-