இலங்கையின் பூர்வகுடிகள் 

(விஜய்)

இலங்கைப் பௌத்த சிங்களவரினதும் இலங்கைத் தமிழரினதும்; புராதன வரலாற்றைக் கூறும் நூல்களில், இலங்கையின் பூர்வ குடிகள் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக்களை தொகுத்து முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இயக்கர் – நகருக்கு முன் இலங்கையில் வாழ்ந்த மக்கள்

இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர் என மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள தகவல் பலராலும் நன்கறியப்பட்டதொன்றாகும். மகாவம்சத்தில் “புத்தர் வருகை” எனும் முதல் அத்தியாயத்தில், ‘பகவன் புத்தர்’ இலங்கைக்கு மும்முறை மேற்கொண்ட விஜயம் பற்றி விபரிக்கப்பட்டுள்ள பகுதியில் இயக்கர், நாகர் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

இலங்கைக்கு புத்தர் மும்முறை மேற்கொண்ட விஜயமானது, மகாவம்சம் விஜயனது வருகை எனக்குறிப்பிடப்படும் நிகழ்ச்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முற்பட்டது.(1) விஜயனது வருகை கி.மு. 540 களில் நிகழ்ந்தது என்பது பொதுக்கருத்து. எனவே கி.மு. 590 களில் இலங்கைக்கு புத்தர் மும்முறை மேற்கொண்ட விஜயம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனக்கொள்ளவேண்டியுள்ளது.

மகாவம்சத்தின் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இயக்கர்-நாகர் பற்றிய தகவல்களை விவரிப்பதற்கு முன்னதாக, இதற்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் பற்றி மகாவம்சம் கூறும் தகவல்களை விவரிக்க வேண்டியுள்ளது.

மகாவம்சத்தின் பதினைந்தாவது அத்தியாயமான “மகா விகாரை” யின் 51 வது செய்யுளில் இருந்து 55 வது செய்யுள்வரை, தீவின் நண்பரான மஹிந்த தேரர் பின்னால் மகாஸ்தூபம் ஏற்பட்ட இடத்தக்குச் சென்றார் எனவும், அரண்மனைப் பூங்காவுக்குள் இருந்த காகுத தடாகத்தின் மேல்கரையில் சண்பகமலரால் அர்ச்சனை செய்தபோது பூமி அதிர்ந்தது எனவும், காவலன் காரணத்தை கேட்ட போது தேரர் அதற்கான காரணத்தைக் கூறினார் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது. காவலனுக்கு மஹிந்த தேரர் கூறிய காரணங்கள் 56 ஆம் செய்யுளிலிருந்து கூறப்பட்டுள்ளது.

(56) பேரரசனே ! நான்கு புத்தர்களும் விஜயம் செய்த இதே இடம் ஸ்தூபம் கட்டுவதற்கு மிகவும் ஏற்றது. அது ஜீவர்களுக்கு ஆசியும், ஆனந்தமும் அளிப்பதாக இருக்கும்.
(57) இந்த உலக யுகத்தில் முதலாவதாக காகசந்தர் என்பவர் இருந்தார்;. சத்திய முணர்ந்த அவ்வித்தகர், உலகமனைத்திலும் இரக்கம் கொண்ட உத்தமர்.
(58) அப்போது இந்த மகாமேக வனத்துக்கு மகாதிட்டு என்ற பெயர். தலை நகரான அபாய கிழக்கே கடம்ப நதியின் மறுகரையில் இருந்தது.
(59) அபயன் என்பவன் அதன் அரசனாக இருந்தான். அப்போது இத்தீவுக்கு ஓஜதீபம் எனப்பெயர்.
(60) பூதங்களையுடைய சக்தியால் இங்கு மக்களிடையே கொள்ளை நோய் பரவியது. பத்து அபூர்வ சக்திகளையும் பெற்றிருந்த காகசந்தர் இதையறிந்தார்.
(61) இதற்கு முடிவு கட்டி, இங்குள்ள மக்களை மதம் மாற்றித் தர்மத்தைப் பரப்புவதற்காக அவர் இரக்க சிந்தனையால் துண்டப்பட்டு,
(62) நாற்பதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்தார்.
(63) வந்து, தேவகூட மலை மீது நின்று கொண்டரர்…

இலங்கையில் பூர்விக காலத்தில் வாழ்ந்த மக்கள் தொடர்பாக தொடர்பாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள முதல் வரலாற்றுத் தகவல் இதுவே எனலாம். மகாவம்சத்தின் 91 வது செய்யுளிலிருந்து இரண்டவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

91. இரண்டாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் கோநாகமனர். எல்லாம் அறிந்த அவர் உலக மக்களிடம் இரக்கம் கொண்டவர்.
92. அச்சமயம் இந்த மகா மேக வனத்துக்கு மகாநோமா என்று பெயர். தலைநகர் வர்த்தமானா தெற்குப் புறம் இருந்தது.
93. அந்தப் பகுதியை அப்போது அண்ட அரசனுடைய பெயர் சமிதன் என்பதாகும். அப்போது இத் தீவுக்கு வரதீபம் என்று பெயர்.
94. வரதீபத்தில் அப்போது பஞ்சக் கொடுமை நிலவியது. இதை யறிந்த கோநாகமனர் அதற்கு முடிவு கட்டவும்,
95. பின்னர் தமது மார்க்கத்தை இத்தீவில் பரவச் செய்து மக்களை மாற்றுவதற்காகவும் அவர்,
96. இரக்க உணர்வினால் உந்தப்பட்டு முப்பதாயிரம் சீடர்களுடன் ஆகாயமார்க்கமாக வந்து
97. சுமணகூட மலை மீது நின்று கொண்டார்.

125 வது செய்யுளிலிருந்து மூன்றாவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

125 மூன்றாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் காச்யபர். எல்லாம் அறிந்த இவர் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர்.
126. மகா மேக வனத்துக்கு (அப்போது) மகா சாகரம் என்று பெயர்.
127. விசாலா எனப்பட்ட தலைநகரம் மேற்குப் புறம் இருந்தது. அதையாண்ட அரசனுடைய பெயர் ஜெயந்தன் என்பது. அப்போது இத்தீவுக்கு மந்ததீபம் என்று பெயர்.
128. அப்போது அரசன் ஜெயந்தனுக்கும், அவனுடைய தம்பிக்குமிடையே பயங்கரமான போர் மூண்டது.
129. பத்து விசேச சக்திகளைப் பெற்ற காச்யபர், போரினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளை அறிந்து இரக்கம் கொண்டார்.
130. அதற்கு முடிவு கட்டவும், பின்னர் தீவில் ஜீவர்களை மாற்றவும், தமது மார்க்கத்தைப் பரப்பவும்,
131. இரக்கத்தினால் உந்தப்பட்டவராக அவர் இருபதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, சுபகூட மலை மீது நின்று கொண்டார்.
160 வது செய்யுளிலிருந்து நான்காவது புத்தர் வருகை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
160 .இந்த யுகத்தில் நான்காவது புத்தராக கோதமர் அவதரித்தார். முழுமையாக சத்தியத்தை அறிந்த அவர் உலகிடம் இரக்கம் கொண்டவர்.
161 அவர் முதல் முறையாக இங்கு வந்து போது யசஷர்களை இங்கிருந்து விரட்டினார். இரண்டாவது முறையாக மீண்டும் வந்துபோது நாகர்களை அடக்கினார்.
162. கல்யாணியில் நாக மணியகி வேண்டிக் கொண்டதற் கிணங்க மூன்றாவது முறையாக திரும்பி வந்த அவர், பிக்குகளுடன் அங்கு உணவருந்தினார்.

நான்காவது புத்தர் வருகை பற்றிய செய்திகளில் இலங்கைக்கான பெயர் பற்றிய குறிப்பக்கள் இல்லை. நான்காவது புத்தர் இலங்கைக்கு மும்முறை வந்துள்ளார் என மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. நான்காவது புத்தர் வருகை பற்றிய செய்திகள், முதலாவது அத்தியாயமான “புத்தர் வருகை” யில் 19 வது செய்யுளிலிருந்து விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.

நான்கு புத்தர்களின் வருகையில் முதல் புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு ஓஜதீபம் என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் அபயன். தலை நகரம் அபாய. இரண்டாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு வரதீபம்; என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் சமிதன். தலைநகர் வர்த்தமானா. மூன்றாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு மந்ததீபம்;; என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் ஜெயந்தன். தலைநகரம் விசாலா. இந்த விபரிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களிலிருந்து குறிப்பான முடிவினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
தொடர்ந்து இயக்கர் – நாகர் பற்றி மகாவம்சத்திலும், வம்சத்தபகசினியிலும், மட்டக்களப்பு மான்மியத்திலும் கூறப்பட்டுள்ள தகவல்கைளப் பார்க்கலாம்.

தொடரும்…