இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும்.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இன்னொரு வகையில் சொன்னால், சிறுபான்மை மக்கள் – பெரும்பான்மையாக வாழும் மாகாணமிது. எனவே, ஹிஸ்புல்லாவின் நியமனத்தில் தமிழ் மக்களும் சந்தோசம் கொள்ளலாம்.

சிங்களவர்களே இதுவரையில் கிழக்கு மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் பேசும் ஒருவர் – ஆளுநராக நியமனம் பெற்றிருக்கிறார் என்பதை நினைத்தாவது, ஆகக்குறைந்தது – கிழக்கிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் மகிழச்சியடையலாம்.

முஸ்லிம் சமூகத்திலிருந்து எம்.ஏ. பாக்கீர் மாக்கர் முதலாவது ஆளுநராக, தென் மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரை – அவர் அந்தப் பதவியில் இருந்தார்.

பின்னர், அலவி மௌலானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் 2002 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, மேல் மாகாண ஆளுனராகப் பதவி வகித்தார்.

இப்போது ஒரு நேரத்தில் முஸ்லிம்கள் இருவர் மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரணில் தரப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அரசியல் போரில், மைத்தியின் வியூகமாகவே தற்போது வழங்கப்பட்டுள்ள ஆளுநர் நியமனங்களைப் பார்க்க முடிகிறது.

இன்று வெள்ளிக்கிழமை 05 மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய ஆளுநர் நியமனங்களில் – முஸ்லிம்கள் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் வடமேல் மாகாணத்துக்கு கே. சி. லோகேஸ்வரன் எனும் தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், இப்போது முஸ்லிம் சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர், அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடிய நிலைவரம் உள்ளமையினையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அரசியல் ரீதியான விமர்சனங்களை முஸ்லிம் காங்கிரசிடமிருந்தும், இன ரீதியான விமர்சனங்களை தமிழர்களிடமிருந்தும் அதிகளவில் எதிர்கொள்ளும் அபாயம் ஹிஸ்புல்லாவுக்கு உள்ளது. அந்த விமர்சனங்கள் இப்போதே தொடங்கி விட்டதையும் காண முடிகிறது.

அந்த வகையில், வழமையான ஆளுநர் பதவிகளை விடவும், இப்போது வழங்கப்பட்டுள்ளவை அதிகம் பாரம் கொண்டவையாகும்.

சுமப்பது அத்துணை எளிதல்ல.
(புதிது)