உள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்!

(த ஜெயபாலன்)

உள்ளுராட்சித் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இன்றியமையாததொரு தேர்தலாககும். இத்தேர்தலானது நாடு முழவதும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது. மேலும் என்றுமில்லாத வகையில் கூட்டாட்சியில் இணைந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இந்தத் தேர்தலில் மீண்டும் தனித் தனியாகப் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலின் பின் இக்கூட்டாட்சியைத் தொடர முடியுமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் இத்தேர்தலில் சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலும் பிளவுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியுமாக தெற்கில் மும்முனை போட்டிக் களமாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் மாறியுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய ஏகபிரதிநிதித்துவ தலைமையே அங்கு இன்னும் தொடர்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தலைமை உருவாகவில்லை. இன்றும் அரசியல் என்பது கறுப்பு வெள்ளையாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் அரசியல் கருத்தியலுக்கு ஒவ்வாதவர்களை துரோகிககளாக்கும் நிலை தொடர்கின்றுது. ஒப்பீட்டளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பலவீனமாக இருந்தபோதும் அதற்கு சவாலான நிலையில் எந்தவொரு கட்சியும் இல்லை என்பதே உண்மை.

இத்தேர்தலில் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்வதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பிரதேசசபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோடு இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட நிர்ப்பந்திக்கப்படலாம். ஏனைய தமிழ் கட்சிகள் பெரும்பாலும் அரசியல் அஸ்தமனத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்லாம்.

உள்ளுராட்சித் தேர்தல் – புள்ளிவிபரங்கள்:

பெப்ரவரி 10இல் இலங்கையில் நடைபெறவுள்ள நாடு முழவதுமான உள்ளுராட்சித் தேர்தலில் 15.8 மில்லியன் மக்கள் 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகளுக்கு 8293 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய உள்ளனர்.

வடமாகாணத்தில் ஒரு மாநகரசபை 5 நகரசபைகள் 28 பிரதேசசபைகளுக்கான தேர்தலில் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த சபைகள் அனைத்துமே தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சபைகள். மாறாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சபைகள் மூவின மக்களையும் பிரதிநித்திதுவப்படுத்துகின்ற சபைகளையும் கொண்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் இரு மாநகரசபைகள், 5 நகரசபைகள், 37 பிரதேச சபைகளுக்கதன தேர்தலில் 493 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். (முழமையான பட்டியல் கீழே)

இலங்கை முழுவதும் 341 உள்ளுராட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவும் அதன் மக்கள் தொகைக்கு எற்ப 5 முதல் 22 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உள்ளுராட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுகின்றார். ஓவ்வொரு வட்டாரமும் ஒன்று முதல் மூன்று வரையான கிராம சேவகர் பிரிவுகளைப் கொண்டிருக்கும்.

உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்:

இத்தேர்தல் களத்தில் பல்வேறு சமூக விரோத சக்திகள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருடர்கள், சண்டியர்கள், காடைத்தனங்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள், பெண்களை இழிவுபடுத்தியோர் என பலதரப்பட்டவர்களும் இத்தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் பல சமூகவிரோத சக்திகளை தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.

தமிழ் காங்கிரஸ் – தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் பெரும்பாலும் சட்டத்தரணிகள். இச்சட்டத்தரணிகள் யாரைக் காப்பாற்ற வழக்காடினார்களோ அவர்களில் பல குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கி உள்ளனர். யாழ் மாநகரசபை எல்லைக்குள் வாள்வெட்டில் ஈடுபட்டவர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சட்டத்தரணி சிறிகாந்தா களமிறக்கி உள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாநகரசபைக்கு களமிறக்கிய சுந்தர்சிங் விஜயகாந் களவாடப்பட்ட நகைகளை வங்கிக்கு கொண்டு சென்ற போது வங்கியில் பணியாற்றிய பெண்ணினால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் அந்நகைகள் அவர் வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டது. 116 பவுண் திருட்டு வழக்கில் இவருக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் விஜயகாந்தினால் தேர்தலில் களமிறக்கப்பட்ட 13 பேரும் அவருடைய நட்புகளும் உறவுகளுமே. முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரான இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார். கிளிநொச்சியில் கந்துவெட்டிக்கு பணம்கொடுக்கும் சண்டியர் எனப் பலர் பா உ சிறிதரன் போன்றவர்களால் களமிறக்கப்பட்டு உள்ளார்கள்.

உள்ளுராட்சிப் பிரதேசசபைத் தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் இந்த உள்ளுராட்சிக் கட்டமைப்பானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் அத்திவாரமாகக் கருதப்படுகிறது. இந்த உள்ளுராட்சி உறுப்பினர்களே எதிர்காலத்தில் மாகாணசபை உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஜனநாயகக் கட்சிகளின் தலைவர்களாகவும் வருவதன் முதல் அடியாக அமைகின்றது. இந்தப் பின்னணியிலேயே உள்ளுராட்சி உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற போது சமூக அக்கறை உடையவராகவும் அரசியல் நேர்மை உடையவராகவும் செயற்திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறானவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கவலையில்லை அவர்கள் தங்கள் பிரதேசங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் சந்திரகுமார் இதனை வருமாறு சுட்டிக்காட்டுகின்றார், “இலங்கையில் பிரதேச சபை தேர்தல் அரசியலின் அடிப்படை. இதிலிருந்தே அடுத்தடுத்த கட்டங்களான மாகாண சபை, பாராளுமன்றம் என விரிவடைந்து செல்கிறது. ஆகவே அடிப்படையிலேயே நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் தங்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றவர்களின் ஒழுக்கம், நடத்தை, அவர்களின் செயற்திறன், போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதே நாங்கள் அடிப்படையில் ஒரு நாகரீகமான அரசியலை கட்டியெழுப்ப முடியும். தவறினால் எங்களின் தெரிவுகள் மூலம் நாங்களே எங்களின் எதிர்காலத்திற்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமற்ற ஒரு சூழலை உருவாக்கி விடுவோம்” என கிளிநொச்சி அக்கிராயனில் பெப்ரவரி 4இல் எம் சந்திரகுமார் தெரிவித்து இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடந்தகால கசப்பான அனுபவங்களினால் வேட்பாளர்களை நிறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மெழுகுதிரிச் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ஈபிஆர்எல்எப் – நாபா அணி), குறிப்பாக கிளிநொச்சியில் கேடயம் சின்னத்தில் போட்டியிடும் சுயெட்சைக்குழு, முல்லைத்தீவில் வண்டில் சின்னத்தில் போட்டியிடும் சுயெட்சை குழவினர் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களைத் தெரிவு செய்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கைக் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்:

உள்ளுராட்சி சபைகள் 2015இல் அதன் ஆயட்காலத்தை பூர்த்தி செய்த போதும் அதே ஆண்டு குறைந்நபட்ச வாக்குப்பலத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு மற்றுமொரு தேர்தலுக்கு முகம்கொடுத்து தனது ஆட்சியை கேள்விக்கு உட்படுத்த விரும்பவில்லை. இந்த இடைவெளியில் பெரும்பாலும் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் வாக்குகளினால் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச அன்று முதல் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைக் கோரி வந்துள்ளார். சுதந்திரக் கட்சிக்கு உள்ளேயே ஒரு குழவாகச் செயற்பட்ட மகிந்த ராஜபக்ச பிரிவு உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் பலத்தை நிரூபித்து நல்லாட்சி அரசை ஈடாட வைக்க மிக்க முனைப்புடன் செயற்படுகின்றது.

பெப்ரவரி 10 உள்ளுராட்சித் தேர்தலானது தென்னிலங்கையைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக அமைய உள்ளது. சுதந்திரக் கட்சியானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகப் போட்டியிடுகின்றது. மற்றைய பிரிவு மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெருமுன – சிறிலங்கா மக்கள் முன்னணியாகப் போட்டியிடுகின்றது. சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி மகிந்த – மைத்திரி என்று பிளவுபடும் போது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். மகிந்த ராஜபக்சவின் சிறிலங்க்கா மக்கள் முன்னணியைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது தலைமையின் கீழ் வெற்றி பெறும் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். அந்த வெற்றியை நரூபிக்கத் தவறினால் மகிந்த அணியில் இருந்தும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கத்தில் இருந்தும் பாரிய அழுத்தங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வருவதுடன்; அடுத்த இரண்டு ஆண்டுகால அவருடைய இருப்பு கேள்விக்கு உள்ளாகும். அவரால் ஆட்சியை நடத்துவது மிகக் கடினமானதாக மாறும்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலானது மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா மக்கள் முன்னணியின் இருப்புக்கும் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது. இத்தேர்தலில் மகிந்த அணி கணிசமான ஆசனங்களை வெற்றிகொள்ளத் தவறினால் அக்கட்சியானது முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட கட்சியாக அமைந்துவிடும். அண்மைக் காலமாக மகிந்த ராஜபக்ச அணியின் கூட்டங்களில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்கின்றனர். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா மக்கள் முன்னணி கணிசமான ஆசனங்களைப் பெற்று முன்னணிக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழல்களுக்கு எதிராகவே கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மகிந்த ராஜபக்ச மக்கள் தன்பக்கம் இருப்பதை நிருபிப்பாரேயானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பதற்குப் பதில் அவரிடம் சரணடைய வேண்டி வரலாம். அரசியலில் சாத்தியமில்லாதது ஏதமில்லை. மகிந்த ராஜபக்ச உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்று மக்கள் செல்வாக்கு தன்பக்கம் இருப்பதை நிரூபித்தால் அவர் பிரதமராக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்:

தென்னிலங்கையிலும் சரி, வடகிழக்கிலும் சரி இத்தேர்தல்கள். பிரதேசங்களின் விடயங்கள் பற்றியதான உரையாடல்களாக அல்லாமல் முற்றிலும் தேசிய விடயங்கள் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய அரசியல் யாப்பு பற்றியும் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதே அல்லாமல் உள்ளுர் விடயங்கள் பற்றிய எந்த உரையாடலும் இடம்பெறவில்லை.

முன்னைய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சீட்டில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஊடகவியலாளர் யதீந்திரா, தற்போது அணி மாறியுள்ளார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் 1. ஓற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது; 2. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் இல்லை என ஏற்றுக்கொள்கின்றது; 3. போர்குற்றங்களுக்கு நீதி தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றது என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு செல்கின்றார். இதே நிலைப்பாட்டையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் உம் கொண்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாடும் இதுவே.

ஈபிஆர்எல்எப் என்ற பெயரை கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்போடு குழப்புகின்ற வகையில் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் வந்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனும், மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையை பறிக்கத் துணைபோன தமிழ் காங்கிரஸ் உம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டதன் பின் தங்களை தற்போது தமிழ் தேசியத்தின் துண்களாகக் காட்டி வருகின்றனர். இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைக்கின்ற அதே விமர்சனங்கள் இவர்களுக்கும் மிகவும் பொருந்தும்.

இலங்கையில் உள்ளுராட்சி சபைகள் முற்றுமுழுதாகவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று இலங்கை அரசியல் யாப்பையும் இலங்கை அரசின் தேசியக்கொடியையும் ஏற்றுக்கொண்டவர்களே இத்தேர்தல்களில் போட்டியிட முடியும். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூட அரசியல் யாப்பையும் தேசியக் கொடியையும் ஏற்றுக்கொண்டே பாராளுமன்றம் சென்றனர். அதற்கான சம்பளத்தையும் பெற்றனர். தமிழ் மக்களுக்கு உணர்ச்சியூட்டி, ரீல் விட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்று தங்கள் பதவியாசையை தீர்க்கவும், சலுகைகளை அனுபவிக்கவுமே இவர்கள் இப்போது படாதுபாடு படுகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று கும்மியடித்த இருவரும் எழுக தமிழ் என்று தங்கள் அரசியல் வியாபாரத்தை விற்க முயன்றும் முடியாத நிலையில் இப்போது மிக அடிப்படையான பிரதேச சபைகளிலாவது தங்களை நிறுத்திக் கொள்வதற்கு இருத்தலைத் தக்கவைக்க மிகுந்த பிரயத்தனம் எடுக்கின்றனர். இவர்கள் கொண்டாடுகின்ற புலியிசம் (ஏனைய இயக்கங்களும் கூட) எண்பதுக்களின் முற்பகுதியில்; மாவட்டசபையை நிராகரித்தது. என்பதுக்களின் பிற்பகுதியில் புலியசம் மட்டும் மாகாணசபையையும் நிராகரித்தது. பிரதேசசபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரையும் புலியிசம் கொன்று போட்டது. இன்று அதே மாநகர முதல்வர்களுக்காகவும் பிரதேசசபை உறுப்பினர்களுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் நானா நீயா என்று புலியிசத்தில் தோய்ந்த தமிழ் காங்கிரஸ் உம்; ஒருகாலத்தில் புலிகளைக் கொன்று போட்டு இன்று சந்தர்ப்பவாதத்தால் புலியிசத்தில் திளைத்துள்ள முன்னாள் மண்டையன் குழுத் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

சரோஜினி யோகேஸ்வரன், பொன் சிவபாலன் ஆகியோர் யாழ் மாநகர முதல்வர்களாக இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டவர்கள். இவர்களின் குடும்பங்களுக்கும் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இந்த புலியிச வேட்பாளர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள். தமிழ் காங்கிரஸில் மாநகர முதல்வருக்கு போட்டியிடும் வி மணிவண்ணன் யாழ் நகரை தூய நகராக சிங்கப்பூராக மாற்றப் போகிறாராம். அரசுக்கு அப்பால் சர்வதேசத்திடம் எல்லாம் உதவி பெற்று இதைச் செய்வாராம்.

அதிகாரங்கள் பகிரப்பட்ட மாகாணசபையிலேயே முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரனின் சால்வையில் தொங்கிக் கொண்டு திரிந்து சாதித்தது எழுக தமிழ் ஒன்றுதான். இதற்குள் எவ்வித அதிகாரமும் இல்லாத முற்றுமுழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநாகரசபையை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்குவாராம். முஸ்லீம் காங்கிரஸ் கல்முனையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறுகிறது. இதுவும் மிகையானதாக இருந்தாலும் அரசோடு இணைந்து செயற்படுவதால் அவர்களால் சில விடயங்களைச் சாதிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் முன்னாள் குழந்தைப் போராளியான பிள்ளையானால் சாதிக்க முடிந்ததை முன்னாள் நீதிபதியான விக்கினேஸ்வரனைக் கொண்டு வடக்கில் எதனையும் சாதிக்க முடியவில்லை.

தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியுடன் சந்தர்ப்பவாத மணம் புரிந்துகொண்டுள்ளது. இவர்களுக்கு கொள்கையும் இல்லை. கோட்பாடும் இல்லை. இருப்புக்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி ஏன் இன்னமும் செயற்படுகின்றது என்பதே தெரியவில்லை. அக்கட்சியை அதன் புதிய தலைவர் பொன் சிவசுப்பிரமணயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் சென்று கரைப்பார் என்று பார்த்தால், தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றுமுழுதான சந்தர்ப்பவாத அரசியலில் வீழ்ந்துள்ளது.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப், அரசியல் கொள்கையற்ற, மோசமான சந்தர்ப்பவாத அமைப்பு. இவ்வமைபின் சீட்டில் பாராளுமன்றம், மாகாணசபை சென்ற எஸ் சிறீதரன், சிவமோகன், பொன் ஐங்கரநேசன், ரவிகரன் ஆகியோர் சுரேஸ் பிரேமச்சந்திரனை கைகழுவி விட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்தனர். கட்சியையே தக்க வைக்க முடியாத சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் அவருடைய அரசியல் வரலாற்றை மிக நன்கு அறிந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, கூட்டு அமைத்துள்ளது. இந்தக் கூட்டு வாக்குகள் எண்ணப்பட்டு சில மணிநேரங்கள் நீடித்தால் அது ஆச்சரியமானது. இவர்கள் கூட்டுச் சேர்வதும் கூட்டைப் பிரிப்பதும் இது முதற்தடவையாக இருக்கப் போவதில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற சுந்தர்சிங் விஜயகாந் நகைத்திருட்டு குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் வரை தண்டனை பெறவுள்ள குற்றவாளி. சரோஜினி யோகேஸ்வரன், பொன் சிவபாலன் போன்ற உயிர்த்தியாகம் செய்து தங்கள அரசியல் கடமையை நிறைவேற்றியவர்களைத் தந்த கட்சியில் திருட்டுப் பட்டம் பெற்ற ஒருவர் போட்டியிடுகின்றார். சாதிய அடிப்படையில் செல்லன் கந்தையா தவறாக நடந்துகொண்டதால் அவரை முதல்வர் என்றும் பாராமல் அடித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு சாதிமான்கள் எப்படி இப்போது திருடர்களையும் அவருடைய கூட்டத்தையும் போட்டியிட அனுமதித்தார்கள்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களைளப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியாகப் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே தொடர்ந்தும் பலமுள்ள கட்சியாக உள்ளது. வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் வசமுள்ள பிரதேசசபைகளை தமிழரசுக் கட்சியே பெரும்பாலும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கில் ஏனைய சமூகங்களும் ஒன்றித்து வாழும் பகுதிகளில்; வெவ்வேறு கட்சிகளில் தமிழர்கள் போட்டியிடுகின்ற போது வாக்குகள் பிளவடைந்து தமிழர்கள் தங்கள் ஆனசங்களை இழக்க நேரிடலாம் என்ற ஆதங்கம் கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – ஈபிடிபி கணிசமான ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்த படியாக பெரும்பாலான பிரதேச சபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடுகின்றது. ஆயதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் அரசியலில் அரசுடன் இணக்க அரசியலை ஆரம்பித்து வைத்து தேர்தலில் போட்டியிட்டது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே. ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோசத்தின் பின்னால் சற்று மாறுப்ட்ட கோசங்களுடன் ஓரிரு தசாப்தங்களுக்குப்பின் ஏனைய தமிழ் கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இத்தேர்தலானது இலங்கை அரசியல் தளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் பெரும்பாலும் ஓரங்கட்டப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகள் இலங்கை அரசியலில் ஸ்தீரமின்மை ஏற்படுவதற்கு இத்தேர்தல் வழியமைத்து உள்ளது. இத்தேர்தல் முடிவ சில அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையலாம்.

வடக்கு – கிழக்கு மாகாண உள்ளுராட்சிப் பிரிவுகள் – பட்டியல்:

வடமாகாணம்: 402 உறுப்பினர்கள்; 1 – மாநகரசபை; 5 – நகரசபைகள்; 28 – பிரதேசசபைகள்

யாழ்ப்பாணம்: 224 உறுப்பினர்கள்; 1 – மாநகரசபை; 3 – நகரசபைகள்; 13 – பிரதேசசபைகள்

23 உறுப்பினர்கள் – யாழ்ப்பாணம் – மாநகரசபை
09 உறுப்பினர்கள் – வல்வெட்டித்துறை – நகரசபை
11 உறுப்பினர்கள் – சாவகச்சேரி – நகரசபை
09 உறுப்பினர்கள் – பருத்தித்துறை – நகரசபை
11 உறுப்பினர்கள் – வேலனை – பிரதேசசபை
05 உறுப்பினர்கள் – ஊர்காவற்துறை – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – நெடுந்தீவு – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – நல்லூர் பிரதேசசபை
05 உறுப்பினர்கள் – காரைநகர் – பிரதேசசபை
16 உறுப்பினர்கள் – வலிகாமம் தென் மேற்கு – பிரதேசசபை
14 உறுப்பினர்கள் – வலிகாமம் தெற்கு – பிரதேசசபை
16 உறுப்பினர்கள் – வலிகாமம் மேற்கு – பிரதேசசபை
21 உறுப்பினர்கள் – வலிகாமம் வடக்கு – பிரதேசசபை
21 உறுப்பினர்கள் – வலிகாமம் – கிழக்கு பிரதேசசபை
15 உறுப்பினர்கள் – சாவகச்சசேரி – பிரதேசசபை
18 உறுப்பினர்கள் – வடமராட்சி தென் மேற்கு – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – பருத்தித்துறை – பிரதேசசபை
கிளிநொச்சி: 37 உறுப்பினர்கள்; 3 – பிரதேசசபைகள்

19 உறுப்பினர்கள் – கரைச்சி – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – பூநகரி – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – பச்சிலைப்பள்ளி – பிரதேசசபை

மன்னார்: 46 உறுப்பினர்கள்; 1 – நகரசபை; 4 பிரதேசசபைகள்

07 உறுப்பினர்கள் – மன்னார் – நகரசபை
09 உறுப்பினர்கள் – மன்னார் – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – நாநாட்டான் – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – முசலி – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – மாந்தை மேற்கு பிரதேசசபை

முல்லைத்தீவு: 43 உறுப்பினர்கள்; 4 பிரதேசசபைகள்

09 உறுப்பினர்கள் – துணுக்காய் – பிரதேசசபை
13 உறுப்பினர்கள் – மரித்தியம்பற்று – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – புதுக்குடியிருப்பு பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – மாந்தை கிழக்கு – பிரதேசசபை

வவுனியா: 52 உறுப்பினர்கள்; 1 – நகரசபை; 4 – பிரதேசசபைகள்

11 உறுப்பினர்கள் – வவுனியா – நகரசபை
10 உறுப்பினர்கள் – வவுனியா தெற்கு தமிழ் – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – வவுனியா தெற்க சிங்கள – பிரதேசசபை
13 உறுப்பினர்கள் – வவுனியா வடக்கு – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – வெங்களச்செட்டிகுளம் – பிரதேசசபை

கிழக்கு மாகாணம்: 493 – உறுப்பினர்கள்; 3 – மாநகரசபைகள்; 5 – நகரசபைகள்; 37 – பிரதேசசபைகள்

மட்டக்களப்பு: 142 உறுப்பினர்கள்; 1 – மாநகரசபை; 2 – நகரசபைகள்; 9 – பிரதேசசபைகள்

19 உறுப்பினர்கள் – மட்டக்களப்பு – மாநகரசபை
09 உறுப்பினர்கள் – காத்தான்குடி – நகரசபை
09 உறுப்பினர்கள் – ஏறாவூர் – நகரசபை
19 உறுப்பினர்கள் – ஏறாவூர்ப்பற்று – பிரதேசசபை
14 உறுப்பினர்கள் – கோரலைப்பற்று – பிரதேசசபை
11 உறுப்பினர்கள் – கோரலைப்பற்று மேற்கு; – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – கோரலைப்பற்று வடக்கு; – பிரதேசசபை
11 உறுப்பினர்கள் – மண்முனை தெற்கு எருவில்பற்று; – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – மண்முனைப்பற்று – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – மண்முனை மேற்கு – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – மண்முனை தென்மேற்கு; – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – போரதீவுப்பற்று – பிரதேசசபை

அம்பாறை: 224 உறுப்பினர்கள்; 2 – மாநகரசபை; 1 – நகரசபை; 17 – பிரதேசசபைகள்

22 உறுப்பினர்கள் – கல்முனை – மாநகரசபை
12 உறுப்பினர்கள் – அக்கரைப்பற்று – மாநகரசபை
10 உறுப்பினர்கள் – அம்பாறை – நகரசபை
22 உறுப்பினர்கள் – திகாமடுல்ல் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – தாமண் – பிரதேசசபை
17 உறுப்பினர்கள் – உஹண் – பிரதேசசபை
11 உறுப்பினர்கள் – மகாஓயர் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – நாமல்ஓயர் – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – படியத்தலாவ் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – சம்மாந்துறை – பிரதேசசபை
05 உறுப்பினர்கள் – அக்கரைப்பற்று – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – பொத்துவில் – பிரதேசசபை
11 உறுப்பினர்கள் – அட்டாளச்சேனை – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – ஆலையடிவேம்பு; – பிரதேசசபை
11 உறுப்பினர்கள் – லகுகல் – பிரதேசசபை
08 உறுப்பினர்கள் – நிந்தாவூர் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – திருக்கோயில் – பிரதேசசபை
07 உறுப்பினர்கள் – காரைதீவு – பிரதேசசபை
07 உறுப்பினர்கள் – நவிதன்வேலி – பிரதேசசபை
07 உறுப்பினர்கள் – இராகரம் – பிரதேசசபை

திருகோணமலை: 127 உறுப்பினர்கள்; 2 – நகரசபைகள்; 11 – பிரதேசசபைகள்

12 உறுப்பினர்கள் – திருகோணமலை – நகரசபை
07 உறுப்பினர்கள் – கிண்ணியா – நகரசபை
10 உறுப்பினர்கள் – சேருவில் – பிரதேசசபை
12 உறுப்பினர்கள் – கந்தளாய்; – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – மொரவேவ் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – கோமரன்கடவெல் – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – படவிசிறிபுர – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – திருனோணமலை நகர்; – பிரதேசசபை
09 உறுப்பினர்கள் – குச்சவெளி; – பிரதேசசபை
10 உறுப்பினர்கள் – தம்பலாகாமம்; – பிரதேசசபை
13 உறுப்பினர்கள் – மூது}ர்; – பிரதேசசபை
08 உறுப்பினர்கள் – கிண்ணியர் – பிரதேசசபை
08 உறுப்பினர்கள் – வெருகல்; – பிரதேசசபை