‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்?

(தெய்வீகன்)

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அறைகூவி விட்டு பன்னிருநாள் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனின் அறப்போராட்ட ஞாபகார்த்த காலப்பகுதியில் ‘எழுக தமிழ்’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு ‘தமிழ் மக்கள் பேரவை’ அழைப்பு விடுத்திருக்கிறது.

தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல எழுச்சிப் பேரணிகளை பல அமைப்புக்கள் நடத்தியிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக ‘பொங்குதமிழ்’ நிகழ்வு எவ்வளவு உணர்ச்சி பிரவாகமாக – தமிழ்மக்களின் உரிமைக்குரலாக – ஓங்கி ஒலித்தது என்பதை கண்டிருக்கிறோம். உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்குரலாக ஒலிக்கின்ற இவ்வகையான பேரணிகள் போருக்கு பின்னரும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக விண்ணதிர முழங்கியிருக்கின்றன.

ஆனால், இந்தப் பேரணிகள் சாதித்தது என்ன? இந்தப் பேரணிகளை ஏற்பாடு செய்தவர்கள் சாதித்தவை என்ன? போன்ற நீட்சியடையும் விவகாரங்களை ஆராய்வதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.

தொடர்ந்தும் ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்து வரும் மக்களின் ஒன்றிணைந்த ஜனநாயகக் குரலை எதிர்மறையாக விமர்சித்து அதனை கொச்சைப்படுத்துவது இந்தப் பத்தியின் நோக்கம் அல்ல. ஆனால், இந்தப் பேரணிகள் – போராட்டங்கள் ஆகியவற்றின் அரசியல் பெறுமதிகளை கடந்த காலங்களில் எவ்வாறு அறுவடை செய்திருக்கிறோம். மக்களை இந்தப் போராட்டங்கள் வாயிலாக எதை நோக்கி நகர்த்தியிருக்கிறோம் என்ற அரசியல் சுயமதிப்பீடுகளை இந்த ஏற்பாட்டு அமைப்புக்கள் எப்போதாவது மேற்கொண்டது உண்டா என்பதை பேசுவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.

இன்று தமிழ்மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், அன்றாடம் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படைச் சிக்கல்கள் என்ன என்பதன் அடிப்படையில்தான் ‘எழுக தமிழ்’ போன்ற பேரணிகள் பற்றி உரையாடுவது முறையாக இருக்கும்.

ஆகவே, அந்த அடிப்படையில் பார்த்தால் –

– இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிக்காதமை மற்றும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக பௌத்த தலங்களின் புதுவருகை.

– அரசியல் கைதிகள் விடுவிப்பில் தொடர்ச்சியாக காண்பிக்கப்படும் மெத்தனம். எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் அரசு மேற்கொள்ளும் இழுத்தடிப்பு.

என்று விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழர் தாயகத்தில் தான் கைவசப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக்கொள்வதாக படைத்தரப்பினர் அவ்வப்போது அறிவிப்புக்களை விடுத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் தங்களது நிலையான பாரிய இராணுவ முகாம்களை இன்னமும் விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றனர்.

அண்மையில் கிளிநொச்சியில் நண்பர் ஒருவருடன் பேசியபோது மிகமுக்கிய விடயம் ஒன்றைக் குறிப்பிட்டார். அதாவது “முட்கம்பி வேலிகள் எனப்படுவை உலகெங்கிலும் இராணுவத்தின் பாதுகாப்பு அரண்களுக்கான குறியீடுகளாவே பார்க்கப்படுகின்றன. இலங்கையிலும்கூட நாட்டின் எந்த பாகத்தில் முட்கம்பி வேலிகளை கண்டாலும், அவை காப்பரண்களை பிரிதிநிதித்துவம் செய்பவையாகவும் இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும்தான் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழர் தாயகத்தில் காணப்படும் அநேக இராணுவ முகாம்களின் வேலிகளில் முட்கம்பிகள் மறைந்து அவை மதில்களாக முளைக்க ஆரம்பித்திருக்கின்றன” என்றார்.

அதாவது, இராணுவ முகாம்கள் வெறும் தற்காலிகமானவை என்று விளக்கம் கூறிக்கொண்டிருந்த வழக்கமான சம்பிரதாய கட்டுமானங்கள் களையப்பட்டு, தமிழர் தாயகத்திலுள்ள இராணுவ தளங்கள் அரச திணைக்களங்கள் போன்ற நிலையான கட்டுமானங்களுடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. அவற்றின் எதிர்காலம் எனப்படுவது யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவையாகவும் சவால்விட முடியாதவையாகவும் பெரு வளர்ச்சியடைந்து வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான் இராணுவ தளங்களுக்கு அண்மித்து பௌத்த விகாரைகள் பரவலாக முளைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, இராணுவத்தின் கேட்டுக்கேள்வியற்ற சுதந்திரமான பிரசன்னம் விகாரைகளை அங்கு ஈன்று தள்ளிக்கொண்டிருக்கின்றன.

அப்படியானால், இதற்கு என்ன தீர்வு?

தமிழர் தாயகத்திலிருந்து படைக்குறைப்பு மற்றும் கேந்திர நிலையங்களிலிருந்து முற்றாக படையினரை வெளியேற்றுவதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒற்றை தீர்வாக அமைய முடியும்.

இதற்கு ‘எழுக தமிழ்’ வைத்திருக்கும் தீர்வு என்ன?

அதேபோல, அரசியல் கைதிகள் விவகாரம். இது வெறும் உணர்வுபூர்வமாக முடிவெடுக்கப்படக்கூடிய விடயம் அல்ல; இது சட்ட ரீதியானது.

யாரையும் கைது செய்துவிட்டு 18 மாதங்கள் எந்த விசாரணையும் இன்றித் தடுத்து வைக்கலாம் என்ற ஏகபோக அதிகாரத்தை அள்ளி வழங்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் எனப்படுவது நாட்டில் அமுலில் இருக்கும்வரை அரசியல் கைதிகளின் விவகாரமெனப்படுவது ஒவ்வொரு ஓட்டைகளுக்குள்ளாலும் நிரவப்பட்டு இளைஞர்களின் தடுப்பு நீடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கும்.

அப்படியானால், அதற்கு இந்த ‘எழுக தமிழ்’ தருகின்ற தீர்வு என்ன?

முன்பு இடம்பெற்ற பொங்கு தமிழிலும் மக்கள் இதே கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்ததா? இல்லையென்றால், பழைய கோரிக்கைகள் தொடர்பில் இந்த பேரணி ஏற்பாட்டு தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

பேரணிகளுக்கு அழைக்கும்போதெல்லாம் ஓடோடி வருவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றபோதும் தலைவர்கள் அந்த பேரணி குறித்து மேற்கொண்ட அரசியல் அறுவடை என்ன என்று கேட்டால் இன்றுவரை எந்த ஆணியும் புதிதாக பிடுங்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சி முக்கியஸ்தர்களும் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் சரி எல்லோரும் சிறந்த வழக்கறிஞர்களாக உள்ளனர். சட்ட நிபுணத்துவம் தெரிந்த புத்திஜீவிகளாக உள்ளனர்.

இதுவரை அரசியல் கைதிகளின் விவகாரத்தின் ஆணிவேராக இருந்து அரித்துக்கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் முற்றுமுழுதாக பிடுங்கி எறிவதற்கு இந்த சட்டத்துறையினர் மேற்கொண்ட தொழில்சார் கூட்டுப்பேரணி முயற்சி என்ன? ஒரு நீதிமன்ற முற்றுகை போராட்டத்தையோ அல்லது புறக்கணிப்பு போராட்டத்தையோ மேற்கொண்டிருக்கலாமே? தங்களுக்குள் மட்டுமல்லாமல் மக்களுடனும் பேசாமல் மேற்கொள்ளும் இந்த அரசியலில் ஒழிந்திருக்கும் சூட்சுமம்தான் என்ன?

அதேபோல, தமிழர் தாயகத்திலுள்ள இராணுவத்தினை அப்புறப்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதாக இருக்கட்டும் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பான கோரிக்கைகளாக இருக்கட்டும் எல்லாவற்றையும் கையாளும் மிகப்பெரிய பலம் கொண்ட அரசியல் சக்தியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்துகொண்டிருக்கிறது.

மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான மூல காரணங்களை களைவது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

அதேபோல, தமிழர் தாயகத்திலுள்ள ஏனைய தமிழர் தரப்புகள் இப்படியான போராட்டங்களுக்கு அப்பால் மக்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைககளும் சிவில் சமூக இடைவெளியை நிரப்புவதற்கும் மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன?

பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பலங்களை முழுங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற வட்டத்துக்குள் முடிந்துவிட்டால் இவற்றில் கலந்து கொள்ளும் மக்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களாகத்தான் பயன்படுத்தப்படப் போகிறார்களா?

ஓன்றுக்கொன்று முரணாகத் தொடர்ந்தும் அரசியல் மேற்கொண்டு வருகின்ற தமிழர் அரசியல் தரப்புகள்தான் இவற்றுக்கு பதிலளிக்கவேண்டும். ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகள் இவற்றுக்கு பதிலளிக்குமா என்பதையும் அவர்கள்தான் கூறவேண்டும்.

இன்றைய நிலையில், ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டியது தமிழர் அரசியலை முன்டுப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கும் தரப்புக்களுக்கே தவிர, தமிழ் மக்களுக்கு அல்ல; தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்த காலமாக தங்களின் இலட்சக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்து தங்களது உரிமைக்குரலை பதிவு செய்துவிட்டார்கள். தங்களுக்கு விடிவை பெற்றுத்தருவதாக கூறிவந்த எத்தனையோ அரசியல் அமைப்புக்கள், இயக்கங்கள் என்று அனைத்துக்கும் அபரிமிதமான ஆதரவை அள்ளி வழங்கி களைத்துவிட்டார்கள்.

இனியும் அந்த மக்களை அழைத்துவந்து பேரணிகள் நடத்தித்தான் இந்த அரசியல் தரப்புக்கள் தங்களது அரசியல் அட்டவணைகளை வரைய வேண்டுமா?

அதோ பாருங்கள்! இவை எவற்றையும் பொருட்படுத்தாது, தமிழர் தாயகத்தினை விழுங்கும் இராணுவ முகாம்களின் சுற்று மதில்களுக்கு அந்த சிப்பாய் தொடர்ந்து ‘பெய்ன்ட்’ அடித்துக் கொண்டிருக்கிறான்.

அந்த சிப்பாய் சிரித்துக்கொண்டே ‘பெய்ன்ட்’ அடிக்கிறான்.

ஏற்கெனவே எழுந்து விட்ட அந்த மதில்களுக்கு இந்த ‘எழுக தமிழ்’ ஏதாவது செய்யுமா?