ஒரு பாடகரின் மரணம்: எதியோப்பியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள்

எதற்கு இந்த நீண்ட பீடிகை என்று நீங்கள் நினைக்கலாம். எத்தியோப்பியாவில் இப்போது நடந்துவரும் போராட்டங்களை விளங்கிக்கொள்ள, இது அவசியமானது. கடந்த மாதம் 29ம் திகதி பாடகர், செயற்பாட்டாளர், அரசியல் கைதி எனப் பல முகங்களைக் கொண்டிருந்த ஹட்சலு ஹுண்டசோ (Hachalu Hundessa) தலைநகர் அடிஸ் அபாபாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அரசுக்கெதிரான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. அரசும் வன்முறை கொண்டு இந்தப் போராட்டங்களை அடக்குகிறது. இதன் விளைவால் இதுவரை 239 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 5,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக, அரசாங்கம் இணையத்தைத் தடை செய்துள்ளது. இராணுவம் தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்கிறது. கொலைக்கு எதிரான இயல்பெழுச்சியாக இடம்பெற்ற மக்கள் போராட்டம், அரசின் அடக்குமுறையின் விளைவால் அதிகரித்துள்ளது. பல்வேறு அம்சங்களில் இலங்கையை ஒத்த சில அரசியல் சூழலை எதியோப்பியா பிரதிபலிக்கிறது.

எதியோப்பிய வரலாறு சொல்லும் பாடம்

எதியோப்பியா ஜனநாயக சமஷ்டிக் குடியரசு என அழைக்கப்படும் எதியோப்பியா, சனத்தொகை அதிகம் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் நைஜீரியாவுக்கு அடுத்த நிலையில் உள்ள நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். எரித்திரியா, ஜிபூட்டி, சோமாலியா, சூடான், தென்சூடான், கென்யா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது.

19ஆம் நூற்றாண்டில் காலனியாதிக்கச் சக்திகளில், ஆபிரிக்காவுக்கான அவாவில் தப்பிப்பிழைத்த இரண்டு நாடுகளில், எதியோப்பியா ஒன்று. மற்றையது, லைபீரியா. 1936ஆம் ஆண்டில், முசோலினியின் ஆக்கிரமிப்பின் விளைவால் எதியோப்பியா, இத்தாலி வசமானது. இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, எதியோப்பியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

பல வகைகளில் (வீதிகள், ரயில் பாதைகள், நீர்த்தேக்கங்கள், தனியார் மற்றம் அரச நிறுவனங்கள்) எத்தியோப்பியா நவீனமயப்படுத்தப்பட்டது. இத்தாலிய சோமாலியா என அழைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்து எதியோப்பியா விடுவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்த முதலாவது சுதந்திர ஆபிரிக்க தேசம் என்ற பெருமையும் எதியோப்பாவையே சாரும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எதியோப்பியாவின் வரலாறு சுவையானது. அந்நியர் தயவில் விடுதலையை வேண்டுவோர் கவனிக்க வேண்டிய பல அனுபங்களைக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் மீண்டும் மன்னரான மாமன்னர் ஹெய்லே ஸெலாஸியின் (இத்தாலி ஆக்கிரமிக்கும் போது இவரே ஆட்சியில் இருந்தார்) ஆட்சி, ஒருவகையான அடக்குமுறை ஆட்சியாகவே இருந்தது. 1974ஆம் ஆண்டில் அவர் தூக்கி எறியப்படும் வரை, பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கிய ஓர் ஆட்சியையே அவர் நடத்தினார்.

ஆனால், அவரை மீண்டும் பதவியில் இருத்திய பிரித்தானியா, அமெரிக்கா கூட்டு, அவருடன் தொடர்ச்சியாக நட்புப் பாராட்டியது. கெடுபிடிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய கையாளாக ஆபிரிக்காவில் ஹெய்லே ஸெலாஸி திகழ்ந்தார். 1974ஆம் ஆண்டு இராணுவப்புரட்சியின் விளைவால் ஆட்சிக்கு வந்த மெங்கிட்சு மரியம் இடதுசாரிச் சார்புடைய ஆட்சியை நடத்தத் தொடங்கினார். அவரது எதியோப்பிய தொழிலாளர் கட்சி நிலச்சீர்திருத்தங்களையும் தேசியமயமாக்கலையும் நடைமுறைப்படுத்தியது. இது, அமெரிக்காவுக்கோ அதன் கூட்டாளிகளுக்கோ உவப்பானதாக இல்லை. இதைத் தொடர்ந்து, எதியோப்பியா மீது சோமாலியா படையெடுத்தது.

எதியோப்பியாவின் பகுதியாக இருந்த எரித்திரிய பிராந்தியம், தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கியது. இவை, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தன. சோவியத் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த எதியோப்பியாவுக்கு எதிரான போராட்டங்களையும் எரித்திரியாவின் தனிநாட்டுக் கோரிக்கையையும் அமெரிக்கா ஆதரித்தது.

1993ஆம் ஆண்டில் தனிநாடாகத் தன்னை அறிவித்த எரித்திரியா, மேற்குலகின் ஆதரவுக்குரியதாக இருந்தது. அங்கு ஒரு சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. விடுதலையை வேண்டிப் போராடிய எரித்திரியர்கள், இன்று அவர்களது தேசியவாதத்தாலே மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவும் மேற்குலகும், எரித்திரியாவை ஆபிரிக்காவில் நம்பகமான ‘கூட்டாளியாகக்’ கருதின. இதனால், அங்கு நடக்கும் சர்வாதிகார ஆட்சியையும் மோசமான மனித உரிமை மீறல்களையும் காணாமல் விட்டன.

1991இல், சோவியத் யூனியனின் முடிவைத் தொடர்ந்து, எதியோப்பியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்கள், அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுத்தனர். காலப்போக்கில், அமெரிக்க நலன்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாக எதியோப்பியா மாறியது. அதைத் தொடர்ந்து, எதியோப்பியாவும் அமெரிக்காவும் இணைந்து, எரித்திரியாவுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கின. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.

இது சொல்கிற பாடம் வலியது. எரித்திரியாவுக்கு அமெரிக்காவின் தயவில் பெற்ற சுதந்திரம் இன்றுவரை நெருக்கடிக்குரியதாகவே இருக்கிறது. எதியோப்பியாவை பழிவாங்குவதற்காக உருவாக்கி வளர்க்கப்பட்ட எரித்திரியத் தேசியம் தனிநாட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர், தனது சொந்த மக்களையே மோசமாக ஒடுக்கியுள்ளது. அதேவேளை, அமெரிக்க நலன்களுக்காகவும் அதன் நட்புறவைப் பேணுவதற்காகவும், எதியோப்பிய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக மக்களை வஞ்சித்து வருகிறார்கள்.

ஹட்சலு ஹுண்டசோ: எதிர்ப்புக்குரல்

எதியோப்பியாவின் மிகப்பெரிய இனக்குழுவான ஒரோமோவின் குரலாக ஒலித்தவர் ஹட்சலு ஹுண்டசோ. எதியோப்பிய சனத்தொகையில் 35 சதவீதத்தைக் கொண்ட ஒரோமோ இனக்குழுவினர், ஒரோமோ மொழியைப் பேசுபவர்கள். எதியோப்பியாவின் மிகப்பெரிய இனக்குழுவாக இருந்தபோதும், தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஓர் இனக்குழுவாகவே ஒரோமா மக்கள் இருந்து வருகிறார்கள். அரசியல் ரீதியாக ஒற்றுமையின்மை, வெவ்வேறு அரசாங்கங்களுக்கு ஒரோமா மக்களின் வெவ்வேறு குழுக்கள் ஆதரவு தெரிவிப்பதென்பது ஒரோமா மக்களைத் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டவர்களாகவே தக்கவைக்க உதவியுள்ளது.

இந்நிலையிலேயே, 2,000ஆம் ஆண்டு முதல், ஓரோமாவினரின் அடுத்தத் தலைமுறையினர் அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தொடர்ச்சியாக எதிர்க்கத் தொடங்கினர். 2003ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹட்சலு ஹுண்டசோ. சிறையில் இருந்தபோதே தனது முதலாவது இசைத் தட்டுக்கான பாடல்களை எழுதிய ஹட்சலு, சிறையில் இருந்து விடுதலையாகியது முதல், அடக்குமுறைக்கெதிராக ஒரோமோ இனக்குழுவினர் எதிர்த்துப் போராட வேண்டும் என்று கோரினார்.

ஒரோமோ மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார். இவரது பாடல்கள், ஒரோமோ மக்களின் எதிர்ப்புக்குரலின் வடிவமாக ஒலித்தது. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டங்களின் மய்யப்புள்ளியாகவும் உந்துசக்தியாகவும் ஹட்சலு இருந்தார்.

2018ஆம் ஆண்டு அபி அஹமட் (Abiy Ahmed) எதியோப்பியாவின் பிரதமராக வருவதற்குப் பங்காற்றியதில், ஹட்சலுவின் பங்கு முக்கியமானது. எதியோப்பியாவின் மிகப்பெரிய இனக்குழுவாக இருந்தபோதும், அபி அஹமட்டே எதியோப்பியாவின் முதலாவது ஒரோமோ இனத்தைச் சேர்ந்த பிரதமாராவார்.

இவர், பதவிக்கு வந்தது முதல் இரண்டு முனைகளில் முக்கியமாகக் கவனஞ் செலுத்தத் தொடங்கினார். ஒன்று, அண்டை நாடுகளுடன் சமாதானம். அவ்வகையில், எரித்திரியாவுடனான சமாதான உடன்படிக்கை, இவருக்குக் கடந்த ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபெல் பரிசைப் பெற்றுத் தந்தது. மற்றையது, நாட்டின் பல பகுதிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தது. குறிப்பாக, ஒரோமோ இனக்குழுவினரின் வாழ்விடங்களில், அந்நிய மூலதனத்தின் வருகை மக்களுக்குச் சினமூட்டியுள்ளது.

தமது இனக்குழுவின் ஒருவரே எமது வாழ்விடங்களைக் கேள்விக்குள்ளாக்குவது குறித்து ஒரோமோ மக்கள் கோபமடைந்துள்ளனர். பிரதமர் அபி அஹமட்டுக்கு எதிராக, எதிர்ப்புக் குரலாக ஹட்சலு திகழ்ந்தார். இந்நிலையிலேயே, அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

பிரதமரும் அரசாங்கமும் என்னதான் சமாதானம் சொன்னாலும், மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. தங்களால் தெரியப்பட்டு பதவிக்கு வந்தவர், தங்களுக்கு எதிராகவும் தங்கள் நலன்களுக்கு எதிராகவும் செயற்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தங்களில் ஒருவர் அந்நிய நலன்களுக்குச் சோரம்போன சோகம், அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நிலையில், ஹட்சலுவின் கொலை அந்தக் கோபத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

இன்னொரு வகையில், இனக்குழுக்களிடையிலான வன்முறையாக இந்தப் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. பல இடங்களில் சிறுபான்மை இனக்குழுக்கள் ஒரோமோ இனக்குழுவைச் சேர்ந்த குழுக்களால் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்தத் தாக்குதல்களால் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்துத் கருத்து தெரிவித்துள்ள பல ஒரோமோச் செயற்பாட்டாளர்கள் இவ்வகையான செயல்களை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களே மேற்கொள்வதாகவும் இதன்மூலம், ஹட்சலுவின் கொலையைத் திசைதிருப்ப அரசாங்கம் முனைகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பிரதமர் அபி அஹமட் போராட்டக்காரர்கள், ‘தேசத்தின் இதயத்தைக் கிழித்தெறிய நினைக்கிறார்கள்’ என்று குற்றஞ் சாட்டுகிறார். போராட்டக்காரர்களோ ‘ஓரோமோ தேசத்தின் இதயத்தில் நீங்கள் உங்கள் துப்பாக்கிகளைச் செலுத்தியுள்ளீர்கள், எங்களை நீங்கள் கொல்லலாம். ஆனால் எங்களை உங்களால் தடுக்கவியலாது’ என்கிறார்கள்.

எதியோப்பியாவின் கதையும் நிகழ்நிலையும் நமக்குச் சில பாடங்களைச் சொல்கின்றன. ஒன்று அந்நியர் தயவு என்பது எவ்வளவு ஆபத்தானது என்பது மற்றையது ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதி மிகப்பெரிய ஒடுக்குமுறையானாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவையிரண்டும் சொல்கிற செய்தி ஒன்றுதான் மக்களின் விடுதலை வெல்லப்பட வேண்டியது, அந்நியர் தயவிலோ, வாக்குப்பெட்டி நிரப்பியோ பெறப்படக்கூடியதல்ல.