ஒரு பாடகரின் மரணம்: எதியோப்பியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இசைக்கு வசமாகா இதயமெதுவென்பது மிகவும் பொருத்தமான கேள்வியே. வரலாறெங்கும் ஒரு போராட்ட வடிவமாக, எதிர்ப்புக் குரலாக இசையும் பாடலும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடும் சமூகங்களில், கலையைப் போராட்டத்தின் கருவியாக்குவோர், மக்களின் மாண்புக்குரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது அடக்குமுறையும் அதிகாரமும் ஏவப்படும்போது, அது தங்கள் மீது ஏவப்பட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். கலையின் வலிமை அத்தகையது.