ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்

(காரை துர்க்கா)

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது.

ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன.

தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி முறைமை அவர்களது, விருப்பின்றியே திணிக்கப்பட்டது.

ஏலவே உள்ள, உப்புச்சப்பற்ற மாகாண ஆட்சி முறையில் கூட, பல தடைகளை ஏற்படுத்தி வரும் கொழும்புக்கு, அது நினைத்த காரியங்களைச் சுலபமாக நடத்தக் கிடைத்த இடைக்காலம் இதுவாகும்.

அமைதி, சமாதானம், சகவாழ்வு எனப் பல வார்த்தை ஜால முலாம்கள் பூசப்பட்டாலும் முற்றிலும் குழம்பிய நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நினைத்தவாறு கொழும்பு செயற்படுவதற்கு, இக்கால இடைவெளியில், வலுவான தடைகள் ஏதும் இல்லை. இது கூட மாகாண சபை முறைமையின் பிறிதொரு பின்னடைவு ஆகும்.

இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலம், பாரிய எதிர்பார்ப்புகளுடனும் பெரும் ஆரவாரங்களுடனும் அமையப் பெற்று, அமைதியாகக் கலைகின்றது. இவ்வாறாக, கடந்த 60 மாதகால ஆட்சியில், தமிழ் மக்கள் எவ்வாறான ஆறுதலைப் பெற்றுக் கொண்டார்கள்?

வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, பல சவால்களுக்கு மத்தியில் பதவிகளைப் பிடித்து, மக்கள் பணியாற்றுவதற்காக வந்த அனைத்துத் தமிழ் உறுப்பினர்களும் தமிழ் மக்களது மனமும் தங்களது மனமும் மகிழும் படியாக மன நிறைவான சேவைளை ஆற்றினார்களா?

தமிழ் மக்களைப் பொறுத்த வரை இந்த வடக்கு மாகாண சபை தங்களுக்கு வெறுங்கையை காட்டி விட்டுச் செல்கின்றது என்பதே, பொதுவான அபிப்பிராயம் ஆகும்.

இந்நிலையில், இவ்வாறாக ஏன் நடைபெற்றது என்ற கேள்வி எழுகின்றது. எங்கள் அரசியல்வாதிகளுக்கு இடையில் காணாமல் போன ஒற்றுமை, போட்டாபோட்டி மிக்க கட்சி அரசியல், வாக்கு அரசியல் எனக் காரணங்கள் நீள்கின்றன.

இதைவிடச் சற்றுப் புதினமாக, வடக்கு மாகாண ஆளும் கட்சிக்குள் எதிர்க்கட்சியும் கூடவே அமை(ஒழி)ந்திருந்தது போலவே காட்சிகள் இருந்தன. இது, முதலமைச்சருக்கு அவ்வப்போது பலவழிகளிலும் இடைஞ்சல்களை ஏற்படுத்தி வந்தது.

ஏனைய மாகாண சபைகள் போலன்றி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்குப் பொறுப்புக் கூறல் அதிகம். அதைவிட பொறுப்புகள் இன்னும் அதிகம். ஏனைய மாகாண சபைகளது முதலமைச்சர்கள், தங்களது நிர்வாக நடவடிக்கைகளோடு தங்களது தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துவார்கள்.

ஆனால், வடக்கு முதலமைச்சருக்கு வழமையான நிர்வாக நடவடிக்கைகளோடு தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை அடைய உழைத்தல் என்ற மேலதிக சுமையையும் சுமக்க வேண்டியுள்ளது. அரசியல் பிரச்சினை, இனப்பிரச்சினை என்பன, கிழக்கைத் தவிர மற்றைய மாகாண முதலமைச்சர்களுக்கு முற்றிலும் இல்லாத பணிச்சுமை ஆகும்.

இவ்விடத்தில், அவரது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, தங்களது தோள் கொடுக்க வேண்டியவர்கள், தேள் போலக் கடிக்கத் தொடங்கினார்கள்; கடிந்து கொண்டார்கள். ஏற்கெனவே, நீதிச் சேவையில் தனது அரச சேவையைப் பூர்த்தி செய்து விட்டு, ஆன்மிகப் பணிகளோடு வாழப் பழகிக் கொண்டவருக்கு, இது சற்றுக் கடினமானதாக அமைந்திருக்கலாம்.

மாகாண அமைச்சர்களது ஊழல் விவகாரங்கள், உள்ளிருந்து தோண்டப்படும் குழிகளைக் கண்டு பிடித்தல், சபையில் பேசப்பட்ட தேவையற்ற விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் என்பன முதலமைச்சரது நேரத்தை மட்டுமல்லாது, அனைத்து அமைச்சர்களதும் உறுப்பினர்களதும் நேரத்தையும் சக்தியையும் வீணாக விழுங்கி விட்டன. மனங்களையும் நோக்கற்று நோ(தோ)ண்டி எடுத்து விட்டதாகி விட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் மொட்டில் மலர்ந்த பொதுஜன பெரமுன என, தெற்குப் பேரினவாதக் கட்சிகள் அனைத்தும் பேரினவாத சேற்றில் முளைத்து, பெரு விருட்சமாகக் கிளை பரப்பி உள்ளன. வெறும் வெற்றுக் கோதாக உள்ள மாகாண சபை ஆட்சி முறை ஊடாகவேனும், தமிழ் மக்களுக்குச் சிறு துரும்பேனும் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள்.

இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் வீற்றிருந்தவர்களது ஒற்றுமையீனங்களும் குளறுபடிகளும் அவர்களுக்கு இனிப்பான செய்திகள் பலவற்றை வழங்கி வந்தன; வருகின்றன.

முன்மாதிரியாக அமைய உள்ள மாகாண சபை என 2013இல் வடக்கு மாகாண சபை ஆட்சி பீடம் ஏறிய போது, செய்தித்தாள்களில் செய்திகள் குவிந்தன. இதுமாதிரியாக வேண்டாம், எனத் தற்போது தமிழ் மக்கள் சொல்லுமளவில் நடவடிக்கைகள் அமைந்து விட்டன. உலகில் அனைவரிடமும் அறியாமைகளும் இயலாமைகளும் உள்ளன. தவறிழைப்பது மனித இயல்பு. இதையே தொடர்ந்து செய்வதுதான் தவறு.

தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் ஓய்வுக்குப் பின்னர், தமிழ்த் தலைவர்களிடம் வற்றாது காணப்படுகின்ற வரட்டு கௌரவங்கள், விடாப்பிடிகள், அடுத்தவரிடம் குறைகள் காண்பது என்ற பக்குவப்படாத பண்புகளும் காரணமாக அமைகின்றன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமைக்கு, தமிழ் அரசியல் தரப்புகளின் ஒற்றுமையீனமே காரணம் என, ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களின் ஒற்றுமையீனங்களை எப்படி எல்லாம் தங்கள் அரசியலுக்கு ஏற்ற மாதிரி கதைத்து, கதை விடுகின்றார்கள்.

இவ்வாறு சாக்குப்போக்குச் சொல்கின்றவர்களது வாயை மூட வைக்க, நம்மால் ஒற்றுமைப் புள்ளியில் ஒன்று கூட முடியவில்லையே என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் உண்டு.

வடக்கு மாகாண சபைக்கான (2013) தேர்தலில் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக ஆக்குவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆவல் கொண்டிருந்தார்.

போர் முடிவுற்ற 2009ஆம் ஆண்டிலிருந்து இன்று (2018) வரையிலான ஒன்பது வருட காலப்பகுதியில் இரா.சம்பந்தன், தமிழ் மக்களது தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இக்காலப்பகுதியில் சம்பந்தன் அவர்களால் சிறப்பாகக் குறிப்பிட்டு சொல்லும் படியாக, சிங்கள அரசாங்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு பெரிதாக ஒன்றையேனும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், நீதியரசர் விக்னேஸ்வரனை இனம் கண்டு, ‘தலைவர்’ என்ற நிலை வரை கொண்டு சென்று விட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் விடயத்தில் சம்பந்தன் ஒருவித நழுவல் போக்கையே தொடர்ந்து கையாண்டு வந்திருந்தார். இது இன்று கை மீறிச் சென்றதாகக் கருதலாம்.

இக்காலப்பகுதியில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை, பற்றுறுதி என்பன தொடர்ச்சியாக வீழ்ச்சியுற்றே வந்துள்ளது. இதனால் மாற்றம் வேண்டி மாற்று அணி பற்றி சிந்திக்கத் தோன்றி உள்ளது.

சிங்களத் தலைவர்களிடம் நீதியையும் தமிழ்த் தலைவர்களிடம் ஒற்றுமையையும் எதிர்பார்த்து தமிழ்ச் சமூகம் களை (ஏமாந்து)த்து விட்டது.

நாளை நல்லூரில் தீலீபனின் தியாக வேள்வி நடைபெற்ற மண்ணில் தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்குபடுத்தலில் அதன் இணைத்தலைவர் விக்கினேஸ்வரன் சிறப்பு உரை ஆற்றவுள்ளார். அங்கு வீட்டை விட்டு வெளியேறியவர் தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லப் போகின்றேன் எனக் கூற முடியாது.

தமிழ் மக்களுக்கு சீரான தலைமைத்துவம் அற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சிங்களம் கண்ணும் கருத்துமாக உள்ளது. தமிழினம் ஒன்றுக்கு ஒன்று ‘கன்னை’ பிரித்து பிரிந்து வாழும் நிலையையே சிங்களம் விரும்புகின்றது.

இதனால் தமிழர்களும் ஒற்றுமையாக ஒன்றையும் கேட்க முடியாத நிலையும் சிங்களமும் எதனையும் வழங்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலையும் வரும். ஆனாலும் அதையும் தாண்டி காலத்தின் கட்டாய கட்டளையாக காலத்தின் தேவையாக சில மாற்றங்கள் வருகின்றன.

வீரம் ஒருவரது பிறப்பில் மட்டும் வருவது கிடையாது. சில சூழ்நிலைகள் நெருக்குவாரங்கள் என்பன ஒருவரை வீரராக மாற்றுகின்றது. மாபெரும் சக்தியாக விளைந்து நிற்கும் பேரினவாதத்தை, விவேகமாகக் கையாளவும் ஒற்றுமையீனங்களால் உருக்குலைந்த தமிழ் மக்களை சிறப்பாக ஒழுங்குபடுத்தவும் தமிழ் மக்களுக்கும் வீரர் ஒருவர் அவசரமாக தேவைப்படுகின்றார்.