புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் -SDPT

பத்திரிகைகளுக்கான அறிக்கை 22-10-2018

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் இப்போது இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறையை சுயாதீனமும் ஆற்றலும் கொண்டதாக ஆக்குவதே தமிழ் மக்களின் உடனடித் தேவை. 2016ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு கிடைக்கும்! 2017ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு வரும்! பின்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு 2018ம் ஆண்டுக்குள் முடிவுகள் கிட்டும்! என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு பற்றி ஆண்டுக்காண்டு மாற்றி மாற்றி ஆரூடம் கூறி சத்தியமளித்தனர்.

புதிய அரசியல் யாப்புக்கான பிரேரணை அடுத்த மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான அரசியல் யாப்பு திட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரேரணைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது பற்றி இன்று வரை, அரசியல் அவதானிகள் கூட சரியாக அறிய முடியாத அளவுக்கு மர்மங்களே நிலவுகின்றன. முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது அரசியல் யாப்பு மாற்றத்திற்கான சட்ட மூல வடிவத்தில் இருக்குமா அல்லது வெறுமனே அரசியல் யாப்புக்கான பாராளுமன்ற வழிகாட்டல் குழுவின் மற்றுமொரு அறிக்கையாக இருக்குமா என்பவற்றிற்கான பதில் இதுவரை தெளிவாக வெளிவரவில்லை.
2013ம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரகடனம் உட்பட 2015 இறுதிவரை ‘தமிழர்களின் தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் கொண்டதான சமஷ;டித் தீர்வு’ மட்டுமே தமிழர்களுக்கான அரசியற் தீர்வு எனக் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2015ம் ஆண்டு இப்போதுள்ள ஆட்சியினருடன் ஒட்டி உறவாடத் தொடங்கியதைத் தொடர்ந்து ‘ஓற்றையாட்சிக்குள் சமஷ;டி’ எனும் புதுவகையான விளக்கம் கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை சாதிக்கப் போவதாக கூறி வருகின்றனர். புதிய அரசியல் யாப்பானது அவ்வாறாக சமஷ;டிக்குரிய பண்புகளைக் கொண்டதாக இருக்குமா? இல்லையா? ஏன்பதற்கான விவாதங்களும் காத்திருக்கின்றன.
ஆளும் கூட்டாட்;சி பிளவுபட்ட நிலையிலுள்ளது, அத்துடன் சிங்கள இனவாத சக்திகள் புதிய அரசியல் யாப்புக்கு எதிராக அணி திரண்டு நிற்கின்றன. இவ்வாறான இன்றைய காலகட்டத்தில் புதிய அரசியல் யாப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் அது அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாத நிலையே உள்ளது. 2000ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் முன்வைத்த அரசியல் யாப்பு திட்டத்துக்கு நேர்ந்த கதியே இந்த அரசாங்கத்தினது புதிய அரசியல் யாப்பு திட்டத்துக்கும் ஏற்படவுள்ளது என்றே தெரிகின்றது. இந்நிலையில் ஏமாறப் போவது தமிழ் மக்களே!.
ஓவ்வொரு தேர்தலிலும் பெரும்பான்மையான தமிழர்களை ஏமாளிகளாக்கி அடுத்தடுத்து பாராளுமன்றப் பிரதிநிதிகளாகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுய நல அரசியல் நோக்கங்களுக்காக தங்களது கற்பனைக் கோட்டைகளை தமிழர்கள் மத்தியில் வியாபாரம் செய்யும் அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, அரசாங்கத்துடன் தாங்கள் கொண்டுள்ள இணக்கமான உறவுகளை தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நலன்களைக் குறித்து பயன்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் காலம் 2020ல் முடிவடைகின்றது. அதற்கு இடைப்பட்ட காலத்துக்குள் இப்போது இருக்கின்ற அரசியல் யாப்பின் சட்ட எல்லைகளுக்கு உள்ளேயே நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை முடிந்த அளவுக்கு வினைத்திறன் கொண்டதாக அமையும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய பாராளுமன்ற சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும், அவை தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு வேண்டிய தீர்மானங்களை மத்திய அமைச்சரவை வெளியிடுவதற்கும் ஆவன செய்தல் வேண்;டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளைக் குறித்;து இப்போதைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை இவையே.
பாராளுமன்றம் சாதாரண பெரும்பான்மையுடன் 1987ம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்துக்கு மாற்றான சட்டமொன்றை நிறைவேற்றுவதற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதன் மூலம் மாகாண ஆட்சியமைப்பானது சுயாதீனமான நிறைவேற்று அதிகாரங்களுடன் வினைத்திறன் கொண்டதாக செயற்படும் நிலையை உருவாக்க முடியும். அவ்வாறான மாகாணசபை சட்டத்தில் மேலும் போதிய ஏற்பாடுகளை உள்ளடக்குவதுடன்;, அமைச்சரவையின் நிர்வாகரீதியான தீர்மானங்களும் இணைகையில்;
1. 13வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கடந்த காலங்களில் மத்திய அரசு பலயீனப்படுத்தி வந்துள்ள போக்கை தடுக்க முடியும்;:
2. மாகாண ஆட்சி சுயாதீனமாக வரிகள் மற்றும் வருமானங்களை போதிய அளவு திரட்டுவதற்கு உரிய வழிவகைகளை உறுதிப்படுத்துவதோடு மத்திய அரசாங்கத்துக்குரிய வருமானத்திலிருந்தும் கணிசமான பங்கை உரிமையுடன் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யலாம்;:
3. மாகாண சபையானது அதன் அமைச்சுச் செயலகங்களிலிருந்து கிராமிய மட்டம் வரைக்குமான நிர்வாகக் கட்டமைப்பை தனித்துவமாகக் கொண்டிருப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்;:
4. அரசியல் யாப்பின் ஒன்பதாவது அட்டவணையின் பொதுநிரலில் உள்ள விடயங்களில் கணிசமானவற்றின் மீது மத்திய அரசின் நிர்வாகரீதியான தலையீடுகளோ, அத்தமீறல்களோ இல்லாமல் அவற்றில் மாகாண ஆட்சியே நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையை உறுதி செய்தல் வேண்டும். அதன் மூலம் அந்தப் பொது நிரலைப் பயன்படுத்தி மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியைப் பலயீனப்படுத்தி வரும் நிலைமையை இல்லாது செய்ய முடியும்.
இவ்வாறான அணுகுமுறையை ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்; கடைப்பிடித்திருந்தால் இருக்கின்ற மாகாண ஆட்சி முறையை குறிப்பிடத் தக்க அளவு சுயாதீனமானதான ஆற்றல்களுடன் ஏற்கனவே செயற்பட வைத்திருக்கலாம். அதேவேளை, அடுத்த கட்டமாக, சர்வசன வாக்கெடுப்புக்கு அவசியமின்றி, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13வது திருத்தத்தில் உள்ள குறைகளையும் குறைபாடுகளையும் நீக்கும் வகையாக ஓர் அரசியல் யாப்புத் திருத்தத்தையும் சாதகமான அரசியற் சூழல் இருக்கும்போதே முன்னெடுத்திருக்கலாம். இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவற்றைச் செய்வதற்கான காலங்கள் முற்றாகக் கடந்து போய்விடவில்லை.
மேற்கூறியவற்றை விட்டுவிட்டு, ‘ஜனாதிபதி மைத்திரியும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள இனவாத சக்திகளும் சேர்ந்து தோற்கடித்து விட்டார்கள்: – நம்பிக்கை மோசம் செய்து விட்டார்கள்’ என்று எதிர்வரும் தேர்தல்களின் போது பரப்புரை செய்யும் உள்நோக்குடனேயே ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூட்டாக புதிய அரசியல் யாப்பு விடயத்தை கையாண்டு வருகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. இது மிகவும் மோசடியான அரசியலாகும்.
மாகாண சபையின் ஐந்து ஆண்டுகளை வீணாக்கியதோடு, கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்ற பதவி மூலம் கிடைத்த எல்லா சுகபோகங்களையெல்லாம் அனுபவித்து விட்டு, இப்போது புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றப் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழங்குவதுவும் அடுத்த தேர்தலுக்கான ஒரு நாடகமே. இப்படியான நாடகங்களையெல்லாம் ஏற்கனவே தமிழ்ச் சமூகம் பல தடவை பார்த்து விட்டது.
உயர்ந்த பட்சமான, தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு அமைப்பினை பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதில் தவறில்லை. ஆனால் அதனையே கூறிக் கொண்டு இருக்கின்ற மாகாண சபை முறையில் உள்ள குறைகளையும் குறைபாடுகளையும் நீக்குவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருப்பதுவும், மேலும் மாகாணசபை முறையை அரசாங்கம் தொடர்ந்து பலயீனப்படுத்துவதற்கு துணை போவதுவும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமான செயலாகும். அது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதுவும் அம்பலப்படுத்தப்பட வேண்டியதுவுமாகும்.

இவ்வறிக்கையை வெளியிடுவது

அ.வரதராஜா பெருமாள்
கட்சியின் அமைப்புச் செயலாளர் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி,
முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர்.