கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை

நெத‌ர்லாந்தில், பொருளாதார‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌, வேலையில்லாப் பிர‌ச்சினை நில‌விய கால‌த்தில், இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் த‌பால்கார‌ர் வேலை செய்து வ‌ந்தேன். அப்போது என்னுட‌ன் ஒரு க‌ன‌டிய‌ (வெள்ளையின‌ப்) பெண்ணும் வேலை செய்தார். க‌ன‌டா ப‌ற்றி அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌ன‌.

த‌பால் போடும் வேலை ஒரு ப‌குதிநேர‌ வேலை. மேல‌திக‌ சாக்குப் பைக‌ளை கொண்டு சென்றாலும் போதுமான‌ அள‌விற்கு ச‌ம்பாதிக்க‌ முடியாது. அதைக் கூட‌ அந்த‌க் க‌ன‌டியப்‌ பெண் திருப்தியாக‌ ஏற்றுக் கொண்டார்.

க‌ன‌டாவில் ஊதிய‌ம் குறைவு என்ப‌தால், ப‌ல‌ர் இர‌ண்டு, மூன்று வேலை செய்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கின்ற‌ன‌ர். வெள்ளைக் கால‌ர் வேலை என்று சொல்ல‌ப் ப‌டும் ப‌ட்ட‌ப் ப‌டிப்பு ப‌டித்த‌வ‌ர்க‌ளின் உத்தியோக‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கிறார்க‌ளாம்.

அவர் மேலும் கூறிய‌தாவ‌து. ஓர‌ள‌வு கூடுத‌ல் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் ம‌ட்டுமே வெளிநாடுக‌ளுக்கு சுற்றுலா செல்லும‌ள‌விற்கு வ‌ச‌தியாக‌ இருக்கிறார்க‌ள். சாதார‌ண‌ தொழிலாள‌ர்க‌ள் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க‌வே முடியாது.

நெத‌ர்லாந்தில் நிலைமை அப்ப‌டி அல்ல‌. துப்ப‌ர‌வுப் ப‌ணியாள‌ருக்கும், அடிம‌ட்ட‌ வ‌ங்கி ஊழிய‌ருக்கும் ஒரே ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும். இது மேற்க‌த்திய‌ பாணி சோஷ‌லிச‌ம்.

“போல்ட‌ர் மொட‌ல்” என்ற‌ திட்ட‌த்தின் கீழ், தொழிலாள‌ரின் ச‌ம்ப‌ள‌த்தை தீர்மானிப்ப‌தில் தொழிற்ச‌ங்க‌த்திற்கும் பேர‌ம் பேசும் ச‌க்தி உள்ள‌து. இந்த‌ நாட்டில் ந‌ட‌ந்த‌ தொழிலாள‌ர்க‌ளின் உரிமைப் போராட்ட‌த்தின் விளைவாக‌ அது செய‌ல் வ‌டிவ‌ம் பெற்ற‌து.

க‌ன‌டிய‌ தொழிலாள‌ர் வ‌ர்க்க‌ம், க‌ட‌ந்த‌ நூற்றாண்டில் பெரிய‌ள‌வு போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தாத‌ ப‌டியால், கொடுப்ப‌தை வாங்கிக் கொண்டு க‌ஷ்ட‌ப் ப‌டுகிறார்க‌ள். ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளில் காட்ட‌ப் ப‌டும் பார‌ப‌ட்ச‌ம் போன்ற‌வ‌ற்றை பேச‌த் தொட‌ங்கினால் அடுத்த‌டுத்து ப‌ல‌ குறைக‌ள் வ‌ந்து கொண்டிருக்கும்.

க‌ன‌டாவில் வாழும் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் இது ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு மிக‌ மிக‌க் குறைவாக‌ உள்ள‌து. இன்ன‌மும் சில‌ர் சோவிய‌த் யூனிய‌னையும், சோஷ‌லிச‌ நாடுக‌ளையும் ப‌ழிப்ப‌தை பெருமையாக‌க் க‌ருதுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் முத‌லில் தாங்க‌ள் வாழும் நாட்டை திருத்த‌ட்டும். க‌ன‌டாத் தொழிலாள‌ர்க‌ள் ம‌திப்புட‌ன் வாழ‌க் கூடிய‌ உரிமைக‌ளை வாங்கிக் கொடுங்க‌ள். அத‌ற்குப் பிற‌கு சோவிய‌த் யூனியனில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று ஆராய‌லாம்.

(Kalai Marx)