சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு

(கவிதா சுப்ரமணியம்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, நேற்றுப் புதன்கிழமை கூட்டப்பட்ட பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான அருள்சாமி, தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்றது
என்றும் தெரிவித்தார்.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பெருந்தோட்டத் தொழிற்சங்கச் சம்மேளனம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரச் சேவையாளர் சங்கம் போன்றவை கலந்துக்கொண்டிருந்தன.

இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்தவுடன், இது தொடர்பாக முன்னாள் மாகாண அமைச்சரான அருள்சாமியிடம் வினவியபோது,

“3 நாட்கள் வேலை வழங்கி 730 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகிய நாங்கள், அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, 1,000 ரூபாய் சம்பளமே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் இறங்கி வரவும் இல்லை. கடந்த 2003ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் 300 வேலைநாட்கள் வழங்கப்படுவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையே நாம் தற்போதும் வழியுறுத்தியுள்ளோம்.

இதன்பிரகாரம், இது தொடர்பில் அமைச்சுக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நாளை மறுதினம் (நாளை) வெள்ளிக்கிழமை (07) இடம்பெறவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானம், எதிர்வரும் 13ஆம் திகதியன்று எமக்கு அறிவிக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுந்து பறிக்க முடியும் என்பது, குறித்து தோட்டத் துரைமாரும் தோட்டத் தலைவருமே தீர்மானிக்க முடியுமேயொழிய, இங்கிருந்துக்கொண்டு நாமோ, முதாலாளிமாரோ அமைச்சோ தீர்மானிக்க முடியாது என்பதையும் நாம் இதன்போது தெரிவித்தோம்” என்றும் அவர் கூறினார்.

‘ஒரு சதமேனும் அதிகரிக்காது’

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப்பிரச்சினை தொடர்பில், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சௌமிய இளைஞர் நிதியத்துக்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 730 ரூபாவுக்கு அதிகமான சிறிதளவேனும் உயர்த்த முடியாது என்று, முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுறை தெரிவித்ததாக, சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் அந்தோனிமுத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ இரண்டு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமார் 3 மணிநேரம் தொடர்ந்த போதும், கூறியத் தொகையைத் தவிர, ஒரு சதமேனும் அதிகரித்துக் கொடுக்க முடியாது என்று முதலாளிமார் சம்மேளம் தெரிவித்தது. தங்களது தோட்டக்கம்பனிகள் நட்டமடைந்து வருவதாகவும் இது குறித்து தான் பிரதமருடன் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியதாகவும் ரொஷான் ராஜதுறை தெரிவித்தார்’ என்று அவர் தெரிவித்தார்.

‘இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் எனவே சம்பள உயர்வை குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதனால், தோட்டங்களை கம்பனிகள் நடத்த முடியாத நிலை காணப்படும் நிலையில், இந்தத் தோட்டங்களை அரசாங்கமே பாரத்தில் எடுத்துக்கொள்ளுமாறு தான் பிரதமருக்கே கூறிவிட்டதாகவும் முதலாளிமார் சம்மேளத்தின் தலைவர் கூறினார்’ என்று தலைவர் அந்தோனிமுத்து தெரிவித்தார்.

‘எனவே, 22 கம்பனிகள் உள்ளிட்ட அனைத்து கம்பனிகளையும் எதிர்காலத்தில் ஒரு நல்ல வளர்ச்சிமிக்கதாக, ஆக்க முடியுமாக இருந்தால், அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, இந்தத் தோட்டத் தொழிலாளர்களது எதிர்காலத்தை மாத்திரமல்ல, தோட்டங்களில் வாழும் 15 இலட்சம் பேரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையிலேயே, இவர்களது எதிர்காலம் தங்கியுள்ளது’ என்று அவர் கூறினார்.

‘சமாதானத் தூதுர்வர்கள் என்ற அடிப்படையிலும் தோட்டத் தொழிலாளர்கள் படும் அவதியையும் கருத்தில் கொண்டு நாம் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தினோம். தோட்டத் தொழிலாளர்களது சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கோரி இறை ஆசி பெரும் பொருட்டு, களனிவெளி பிளான்டேசனில் செவ்வாய்க்கிழமை (04) மௌனவிரத போராட்டமொன்று எமதுதலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

எனவே, இந்த மௌவிரதம் நாடாளுமன்றத்துக்கு முன்பாக, அல்லது பழைய நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெகு சீக்கிரம் நடத்துவதற்கு நான் ஒழுங்கு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் தோட்டத் தொழிலாளர்களால் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வெற்றி பெருமா என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டார்.