சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.

(Rathan Chandrasekar)

என் பெயர் குமாரசாமி எடிட்டிங்கில்
நான் பிசியாக இருந்த நேரத்தில்-
என் பத்திரிகை உலக சிஷ்யன் ஒருவன்
திடீரென்று போன் போட்டு மூச்சிரைத்தான். அவன் மனைவியின் தம்பி வீட்டிலிருக்கும்போது
புடைவை கட்டிக்கொள்கிறானாம்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கிறானாம்.

நான் அவனுக்குப் புரியவைக்க முயற்சித்தேன்.
நீ ஆண் உன் மனைவி பெண் மாதிரி
அவன் ஒரு மூன்றாம் பால்ப் பிறப்பு .
இது அரிதான விஷயம்தானே தவிர
இதில் அவமதிப்போ – துக்கமோ ஏதுமில்லை
என்று விளக்கினேன் .

அவன் தன் மனைவியிடம் போனைக் கொடுத்துவிட்டான் .

அவளோ, “அண்ணா …” என்று அழ ஆரம்பித்தாள்.

ரொம்ப நேரம் பேசியபிறகே அவளை ஓரளவு
தேற்ற முடிந்தது. ஊர், உறவு, சுற்றம் குறித்து கவலைப்படாதீர்கள். அவனை ஒதுக்காமல் அன்பு செலுத்த மறக்காதீர்கள் என்றேன்.

கொஞ்சநாளில், அவனுக்கு மருத்துவமும்,
கவுன்சிலிங்கும் வழங்கப்படுவதாக அவள் சொன்னாள். கேட்டுக்கொண்டேன். படிப்படியாக அவன் ஆண் என்கிற நிலைக்கு வந்துவிடுவான் என்று டாக்டர் சொன்னதாகச் சொன்னாள்.

நான் சொன்னேன்…

“நல்லது. ஆனால் அப்படி எதுவும் நடக்காவிட்டால், அவனை அவன் விருப்பப்படி இருக்கவிடுங்கள். அழுத்தம் கொடுத்து துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்…”

அவர்களின் மருத்துவம் எடுபடவில்லை.
இப்போது ஒரு திருநங்கையாக
வலம் வருகிறான் அவன். ஆனால்…

அந்தத் தீண்டாமை அவர்கள் வீட்டில் இல்லை
என்கிற மகிழ்ச்சி எனக்கு உவப்பாயிருக்கிறது.

இன்று தமிழ் ஹிந்துவில் வந்த –
திருநங்கையர் திருமணம் செய்துகொண்டது
குறித்த ஒரு செய்தி –
எனக்கு மிகவும் வரவேற்கத்தக்கதாகப் பட்டது.

இந்த நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலையத் தோழர்கள் நடாத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

காலமும், அறிவும் சமூகத்தை
விளங்கவைக்கின்றன; விசாலப்படுத்துகின்றன.

சக மனிதனைப் புரிந்துகொண்டு –
அவனை ஏற்கிற சமூகமே
முன்னே செல்லும்.

பிரதீஷா – பிரேம் குமரன் தம்பதிகள்
மகிழ்வான இல்லறம் காண வாழ்த்துவதுதானே
நல்லறம்?

எடுத்துக்காட்டாய் வாழ வேண்டுமென
முகநூல் தோழர்கள் , தோழிகளுடன்
இணைந்து வாழ்த்துகிறேன்.

தகவலுக்கு நன்றி / Gowtham Sham