சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி

(தெ.ஞா.மீநிலங்கோ)

எல்லாக் கதைகளும் எதிர்பார்த்தபடி முடிவதில்லை. சில கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராதபோது ஏற்படலாம். அவை சில சமயம் கதைகளின் முடிவுகளையே மாற்றிவிடும். அதனால் அத் திருப்பத்துக்காகவே அக் கதை காத்துக்கொண்டிருந்தது போன்ற மயக்கம் ஏற்படலாம். எனினும் பொதுவாகவே திருப்பங்கள் சுவாரசியமானவை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடியும் அதையொட்டிப் பல்முனைகளில் வெடித்த சிரிய உள்நாட்டு யுத்தமும் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடி ஆதரவுடன் களமிறங்கிய ‘சிரிய விடுதலை இராணுவம்’ என்ற கிளர்ச்சிப் படைகளுடன் அல் நுஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியன கைகோர்த்து சிரிய இராணுவத்துடன் போரிடுகின்றன.

அமெரிக்க விமானப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் போர்வையில் சிரிய எல்லைக்குள் அத்துமீறிக் குண்டுகளை வீசி வருகின்றன. இவ்வாறு சிரிய ஆட்சியை மாற்றுவதற்கான அனைத்தையும் அமெரிக்கா செய்து வந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, சிரிய விடுதலை இராணுவம், சவூதி அரேபியா என்பன ஒருபுறமும் அல் அசாத் தலைமையிலான சிரியா, ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா மறுபுறமும் அணிவகுத்துள்ளன.

சில வாரங்களுக்கு முன், பயங்கரவாதிகள் மீது ரஷ்யா வான்வழிக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்தமை நெருக்கடியை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியது. அறிவிப்பை அடுத்து, சிரிய அரசுடன் மோதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இது நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்காகத் துடிக்கும் மேற்குலகின் கனவுகளைத் தகர்த்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதாகச் சொல்லி சிரிய இராணுவத்தின் மீதும் அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியது. இப்போது ரஷ்யாவின் நேரடி வரவு போர்க்களச் சமநிலையை மாற்றியுள்ளது. ரஷ்யா சிரிய அரசுக்கெதிராகப் போராடுவோரைப் பயங்கரவாதிகள் என வகைக்குறித்து அவர்களை அழிக்க நடத்தும் விமானத் தாக்குதல்களால் அமெரிக்க சார்புக் கிளர்ச்சிக் குழுக்களுக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை

இப்போது அமெரிக்காவுக்கு நேரடியாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்ட இயலாது. எந்தப் பயங்கரவாதிகளைக் காரணமாக்கி அமெரிக்கா சிரிய இராணுவத்தினரை இலக்கு வைத்ததோ அதே பயங்கரவாதிகளைக் காரணமாக்கி கிளர்ச்சிப் படைகளை ரஷ்யா அழிக்கிறது. இன்று உலகளாவிச் சிக்கலடையும் நெருக்கடியின் இன்னொரு அங்கம் சிரியாவில் ஓசையின்றி அரங்கேறுகிறது. சிரியாவில் ரஷ்யாவின் நேரடித் தலையீடு அமெரிக்க ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு நேரடிச் சவாலாகும்.

அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி, பாரசீக வளைகுடாவின் எண்ணெய் முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேல் ஆகியன தமது மேலதிக நோக்கங்களுக்காக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஊக்குவித்தனர். அதற்குத் துணையாக ஏனைய ஜிகாதிய இயக்கங்களுக்கும் உதவிகளைச் செய்து மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் திட்டம் செயற்படத் தொடங்கியது. சிரிய உள்நாட்டு யுத்தம் அதன் ஒரு பகுதியாகும்.

மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு மாறான நாடுகளில் ஈரானை அடுத்து முக்கியமான நாடு சிரியா. எனவே, மத்திய கிழக்கை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைக்கும் செயல்களுக்கு முட்டுக்கட்டையாயுள்ள சிரியாவின் அல் அசாத் ஆட்சியை அகற்றி அமெரிக்க நலன்களுக்கு அடிபணியும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு அவரைப் பிரதியிடும் முயற்சியின் வெளிப்பாடான சிரிய நெருக்கடி இன்று அமெரிக்க உலக மேலாதிக்கத்துக்கு நேரடிச் சவால் விடும் களமாகியுள்ளது.

ஊடகங்கள் காட்ட முனைவதற்கு மாறாக, சிரியா மதச்சார்பற்ற மதச் சகிப்புடைய பல்லின நாடாக நீண்ட காலமாக இருந்துள்ளது. அதன் ஜனாதிபதி அசாத் ஷியா பிரிவுக்குட்பட்ட அலவ்வி மதப் பிரிவினராயினும் அவரது மனைவி சுன்னி பிரிவினராவர். சிரியா குர்தியர்களையும் ஆமேனியக் கிறிஸ்தவர்களையும் கணிசமான எண்ணிக்கையிற் கொண்ட நாடாகும். இவை ஊடகங்கள் நமக்குச் சொல்லாத தகவல்கள்.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, சிரியாவில் அமெரிக்க சார்பு ஆட்சி ஏற்படாமை அவசியம். சிரியாவில் அமெரிக்க சார்பு ஆட்சி ஏற்படின் அது ரஷ்யாவின் பிராந்திய நலன்களுக்கு மட்டுமன்றி ஈரானுக்கும் லெபனானைத் தளமாகக் கொண்டியங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் பாரிய நெருக்கடியைக் கொடுக்கும். எனவே, ஈராக்கிலும் லிபியாவிலும் அமைதியாக இருந்தது போல சிரியாவில் ரஷ்யா வாளாவிருக்கவியலாது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வெளியே ரஷ்யக் கடற்படைத் தளத்தைத் கொண்ட ஒரே நாடு சிரியா. சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான டார்டோஸ்சில் ரஷ்யக் கடற்படைத்தளம் உள்ளது. அமெரிக்கா 38 நாடுகளில் 662 படைத்தளங்களை வைத்திருப்பதுடன் இதை ஒப்பிடல் தகும்.

பூகோளரீதியில் ரஷ்யாவை அமெரிக்கா சுற்றிவளைக்கவும் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதிகள் ரஷ்யா மீது போர்தொடுக்கவும் சிரியாவில் அல் அசாத் ஆட்சி நீக்கம் வாய்ப்பாக அமையும். மேலும், மத்திய கிழக்கில் எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க ஏகபோகத்துக்கு அது வழிசெய்யும். இது ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் நலன்களுக்குக் குழிபறிப்பதுடன் சிரியா ஊடாக கட்டார் புதிய எரிவாயுக் குழாயை நிறுவி, மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளை நேரடியாக அணுக வழிவகுக்கும்.

இன்று ரஷ்யத் தலையீடு சவூதி அரேபியாவை மறைமுகமாகக் குறிவைக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு ஏங்கும் அமெரிக்கக் கூட்டாளிகளில் பிரதானமானது சவூதி அரேபியா. சவூதி அரேபியாவின் பிராந்திய அதிகாரத்துக்குச் சவாலான நாடாக சிரியா இருப்பதும் சவூதி அரேபியாவுக்குப் பணிய மறுக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் இயக்கங்களுக்கு சிரியா வழங்கிவந்துள்ள ஆதரவும் ஈரானுடனான சிரியாவின் நெருக்கமும் சவூதி அரேபிய மேலாதிக்க நோக்கங்களுக்குப் பாரிய தடைகளாயுள்ளன.

அமெரிக்க நிர்ப்பந்தத்தால், ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்குடன் சில காலம் முன்பு சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைத்ததில் சவூதி அரேபியாவின் பங்கு முக்கியமானது. ரஷ்யாவுக்குள் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களை உருவாக்குவதிலும் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது.

இன்று சவூதி அரேபியாவின் நேரடி ஆதரவுடைய குழுக்களை ரஷ்ய விமானப் படைகள் குறிவைக்கின்றன. இது மத்திய கிழக்கின் சமநிலையை மாற்றுகிறது. அப் பிராந்தியத்தின் முக்கிய அரங்காடி என்ற தகைமையை சவூதி அரேபியா மெதுவாக இழக்கிறது. அவ்விடத்தை ஈரான் நெருங்குகிறது.

இந் நிலைமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்தி, சிரிய நெருக்கடியின் விளைவான பிராந்தியத்தின் புதிய ஆதிக்கச் சமநிலை ஆகும். இவ்வகையிலும் ரஷ்யாவின் தலையீடு முக்கியமானது.

ரஷ்யாவின் இந்நடவடிக்கை ஈரானுக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. ஈரானின் அணு சக்திப் பேச்சுக்களின் போது ரஷ்யாவின் ஈரான் சார்பான உறுதியான நிலைப்பாடு ரஷ்யாவை ஈரானின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக்கியது. இது மத்திய கிழக்கின் சமநிலையைத் தீர்மானிக்கும் சக்தியாகிறது.

இதுவரை சிரிய யுத்தத்தில் நேரடியாகப் பங்குபற்றாது சிரிய இராணுவத்துக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே வழங்கிவந்த ஈரான், இப்போது பயங்கரவாதத்துக்கெதிரான ரஷ்யாவின் போரில் உதவுவதாக அறிவித்துள்ளது.

தரைவழியாகப் படைகளை இறக்கி அமெரிக்க ஆதரவுடன் அல் அசாத் ஆட்சியைத் தூக்கியெறியத் துருக்கி அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், சிரியாவில் பயங்கரவாதத்தை நேரடியாக எதிர்கொள்வது என்ற புட்டினின் முடிவு அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிரியாவில் கடந்த ஒரு வருடத்தில் 7,000 குண்டுகளை அமெரிக்கா வீசியது. ஆனால் பயங்கரவாதிகள் அழியவில்லை. இப்போது, அமெரிக்க ஆதரவுடைய பயங்கரவாதிகளை விமானத்தாக்குதல் மூலம் ரஷ்யா அழிக்கிறது.

சிரியப் போர்க்களத்தின் தன்மை மாறிவிட்டது. இரு வார ரஷ்ய விமானத் தாக்குதல்களின் பின் ஈரானியப் படையினரும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் சிரிய இராணுவத்தினரும் இப்போது தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு ரஸ்தான் வளாகம், வடக்கு ஹமாவின் புறப்பகுதி, கஹாப் சமவெளி ஆகிய பகுதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுள் உள்ள பகுதிகளை சிரிய இராணுவத்தின் வசம் கொண்டுவரும்.

இப் படைநடவடிக்கை சிரிய விடுதலை இராணுவத்தினதும் அல் நுஸ்ரா பயங்கரவாதிகளினதும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் முயற்சியாகும். இம் முயற்சி வென்றால் சிரிய நிலப்பரப்பின் பெரும் பகுதி சிரிய இராணுவத்தின் வசம் சேர்ந்துவிடும். இது சிரியாவின் நிலைப்புக்கும் எதிர்கால அமைதிக்கும் முக்கியமானது.

சிரியாவில் இன்று நடப்பவை நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமான அமெரிக்க-ரஷ்ய ஆதிக்கப் போட்டியின் ஒரு பகுதியாகும். நான்காண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடி மூலம் அமெரிக்காவால் ஆட்சியை மாற்ற இயலாமையை ஒரு பாரிய சிக்கலாக அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் காண்கின்றனர். மத்திய கிழக்கின் கட்டுப்பாட்டை இழப்பது பிராந்திய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவுக்குப் பாரிய பின்னடைவாகும்.

சிரிய நெருக்கடி தொடங்கிய 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஆட்சிமாற்றமே தீர்வு என அமெரிக்கா சொல்லிவருகிறது. சதாம் ஹுசைன், முவம்மர் கடாபி வரிசையில் அல் அசாத்தையும் சேர்க்கத் துடித்த நான்காண்டு கடந்த முயற்சி கைகூடவில்லை.

எதிர்பாராத ரஷ்ய வருகையுடன் அதன் சாத்தியப்பாடு நலிந்துள்ளது. சிரியாவில் அமெரிக்கா எழுதவிருந்த கதை நடுவில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை எதிரபாராத நேரத்தில் ரஷ்யா எழுதியுள்ளது. இத் திருப்பம் முடிவை அறவே மாற்ற வல்ல திருப்பமா என்ற வினாவுக்குக் காலம் விரைவிற் பதில் சொல்லும். ஒருவர் தொடங்கிய கதையை இன்னொருவர் முடிப்பதற்கு இது முதன்முறையன்று.