சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்

தமிழர்களின் தனித்துவ திருநாள் பொங்கல் அதிலும் தை இரண்டாம் நாள் நடை பெறும் மாட்டுப் பொங்கல் எங்கள் பிரதேசத்தில் பட்டிப் பொங்கல் எனவே அழைக்கப் படும். அன்றைய நாட்களில் ஒவொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்டளவுக்கு மாடுகள் இருந்தன மேய்ச்சல் நிலம் அதிகம் உள்ள எங்கள் ஊரில் வீட்டுக் காலையில் அடைக்கப் படும் மாடுகள் காலையில் திறந்து விட அவை மேய்ச்சல் நிலத்துக்கு போய் மாலையில் தானாகவே திரும்பி வரும்.

ஒவ்வொரு பட்டிக்கும் ஒரு மாப்பிளை மாடு இருக்கும் .மாப்பிளை மாடுகள் கொம்பனாச்சி,கொக்குதொடுவாய் ஆகிய தாவளங்களிலிருந்து வாங்கி வந்து தங்கள் பட்டியயை வளம் படுத்துவர்.பாலுக்கான மாடுகள் வண்டிலுக்கான மாடுகள் ஊட்டி வளர்க்கப் படும்.

எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது அப்புச்சியிடம் நூற்றுக்கு மேற்பட்ட மாடுகள் இருந்தன.கால வேறு பாட்டால் அவையெல்லாம் காணாமல் போயின. அப்புச்சி ஒவ்வொரு மாட்டுக்கு செல்லப் பெயர் வைத்திருப்பார்.

கடந்த யுத்த காலம் எங்கள் ஊரில் உள்ள மாட்டுப் பட்டிகளை அழித்து விட்டன.அதிலும் குறிப்பாக எஞ்சியிருந்த மாடுகள். 2006ல் ஏற்பட்ட பெரும் இடப் பெயர்வினால் எல்லாமே அடிபட்டுப் போயின.

இன்று மீண்டும் தங்கள் பட்டிகளை படிப்படியாக மீளமைத்து வருகின்றனர்.

அன்று ஒவ்வொரு வீட்டிலும் வண்டில் மாடுகள் இருந்தன.எப்படி வீடு அமைந்திருக்குதோ அது போல “மாட்டுமால்” இருக்கும் மாடுகள் மழையில் நனையாமல் பாதுகாப்பது இவர்கள் மாடுகளுக்கு பெரு மதிப்பு கொடுத்து வாழ்ந்தனர்.

தங்களுக்கு தங்கள் தொழிலுக்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழா பட்டிப் பொங்கல்.பாலும் தயிருமாய் உணவைத் தரும் பசுவுக்கும் நன்றி சொல்லும் விழாவும் இதுதான்.

காலையில் வீட்டில் காளை பசு மாடுகளுக்கு பொங்கலாய் அமைய மாலை நேரம் எருமை மாடுகளுக்கு ஊரெல்லையில் இருக்கும் கிடாமாட்டு பட்டிகளில் நடக்கும்.

“பட்டி பெருக வேணும் தம்பிரானே
பால் பானை பொங்க வேண்டும் தம்பிரானே”

இது இங்கு வழக்கில் உள்ள பட்டியோடு தொடர்பான மண்ணின் பாடல்.

பட்டிப் பொங்கலில் பொன்னாவரைப் பூ முக்கியம் பெறுகிறது பொன்னாவரை மலர்களால் மாட்டை அலங்கரித்தலும் இலையும் பூவுமாய் இணைந்த கழுத்து மாலை.பொன்னாவரை மொட்டாலான கழுத்து மாலை,கொம்பு மாலை,தனி இதழ்களால் ஆன மாலை பல்வகை.அத்தோடு பலகார மாலை சிலுவு மாலை.நெற்றிப் பட்டம் ,கொம்பு அணி என அரிசிமா பலகாரம் அழகாய் மாடுகளை அலங்கரிக்கும்.

அழகான எடுப்பான நாம்பன் மாடுகளில் காசு மாலை போடப் பட மாடு உள்ளவர் வீடுகள் விழாக் கோலம் காணும்.

பட்டிப் பொங்கல் முடிய மாடுகள் அவிழ்த்து விடப் படும் தருணத்துக்காக இளைஞர்கள் வீட்டு வாசலில் காத்திருப்பர்.

காளைகளை வீசிப் பிடிப்பதற்காக அதற்கென தயாரிக்கப் பட்ட ஆத்தி நார் கயிறுகளே பயன் படுத்தப் படும் .ஆத்தி மரத்திலிருந்து அதன் பட்டையிலிருந்து நார்களை உருவி கயிறு திரிப்பர் பல மாதங்களுக்கு முன்பே ஆத்தி நார் கயிறுகளை தயாரித்து வைப்பர்.ஆனை கூட ஆத்தி நார் கயிற்றை அறுக்க முடியாதென்று சொல்வர்.

பொங்கல் முடிய வெளிய வரும் காளைகளை துரத்தி வீசிப் பிடித்து பலகாரம் பணம் ஆகியவற்றை இளைஞர்கள் தமதாக்கிக் கொள்வர்.சிலவேளைகளில் மாடுகள் தறி கெட்டு ஓடும்.

இதுவும் ஒருவகை மஞ்சு விரட்டுத்தான்.நம் தமிழ் மரபின் தொடர்ச்சிதான் இது.

(Balasingam Sugumar)