ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும்

இந்த வினாக்கள், சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியைத் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் மரபில், கோட்பாட்டுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான தொடர்பும், அதன் மீதான கவனமும் சிக்கலுக்கு உரியனவாகவே இருந்து வந்துள்ளன. இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியை, இன்றும் காண நேர்ந்துள்ளமை துரதிர்ஷ்டமேயாகும்.

ஈழத்தமிழ் அரசியலின் செல்நெறி குறித்து ஆராயுமிடத்து, இரண்டு அடிப்படையான விடயங்களை நோக்குதல் வேண்டும். முதலாவது, தமிழ்ச் சமூகத்தில் ஜனநாயகம் எவ்வாறானதாக இருக்கிறது என்பது, பிரதானமானது.

இரண்டாவது, இலங்கை இனப்பிரச்சினை குறித்த புரிதலும் அதுசார் கோட்பாட்டு உருவாக்கம் தொடர்பானதாகும். இவ்விரண்டையும் குறித்து மனந்திறந்து, நாம் பேசியாக வேண்டும்.

போரின் அவலமான முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சி, அதிலிருந்து மீண்டுவர நீண்டகாலத்தைக் கோரியது. இன்று போர் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது குறித்து ஆழமாகப் பேசுவது பயனுள்ளது.
இந்த உரையாடலைத் தொடங்குவதற்கான மேலும் இரண்டு காரணிகளைத் தேர்தல் முடிவுகளும் தந்துள்ளன.

  1. ஈழத்தமிழ் அரசியற்பரப்பின் பல முகாம்களை, மக்கள் தெரிந்துள்ளார்கள்.
  2. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள ஓர் அரசாங்கத்தை, சிறுபான்மையினர் எவ்வாறு முகங்கொடுப்பது.

தேர்தல் காலக் கோஷ்டிச் சண்டைகளை விட, தேர்தலுக்குப் பின்னரான கோஷ்டிச் சண்டைகள், தமிழ் அரசியல் கட்சிகள், கூட்டணிகள் தொடர்பானவையாகவே இருந்தாலும், பரந்த தளத்தில் இவை ஜனநாயகம் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன.

தமிழ்ச் சூழலில், ஜனநாயகமின்மை குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டுள்ளது. அவை, காலங்காலமாக ‘தமிழர் ஒற்றுமை’, ‘பேரம்பேசும் சக்தி’ போன்ற பல்வேறு சொல்லாடல்களால் காவுகொடுக்கப்பட்டு வந்துள்ளன. இந்தத் தேர்தலில், மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பன்மைத்துவம், பலவழிகளில் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பானதாக்கி உள்ளது.

இலங்கையில் மட்டுமன்றி, பொதுவாகத் தென்னாசியச் சமூகங்கள் எந்தளவுக்கு ஜனநாயகமயத்துக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது பற்றிச் சற்று ஆழ்ந்து சிந்திக்கும் போது, பல விடயங்கள் தெளிவாகின்றன. நிலவுடைமை அமைப்பையும் அதன் கருத்தியற் சிந்தனை நடைமுறைகளையும் தொடர்ந்து பேணிவருவது தான், தென்னாசிய நாடுகளின் பிரதான போக்காக இருந்து வருகிறது.

அவற்றின் வழியாகவே, நாடாளுமன்ற ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. மக்களது சிந்தனைகள், நடைமுறைகள் நிலவுடைமைக் கருத்தியல் அடிப்படையிலேயே அடிமைத்தனமாகப் பின்பற்றப்படுகிறது. வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கும் நமது சமூக அமைப்புச் சூழலில் மிகவும் இறுக்கமான நிலவுடைமைக் கருத்தியல் தளத்தில் இயங்குவையாகக் காணப் படுகின்றன.

குறிப்பாக, தமிழ்ச் சூழலில் மேற்படி நான்கு விடயங்களையும் தமிழ்த் தேசியம் பேசும் எவரும் தகர்க்க முன்வரவில்லை. தமிழ் நாட்டில் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே.ரா.வால் சாதிய, பால் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி, அவற்றுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புரை செய்து, சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுக்க முடிந்தது. அவ்வியக்கம், தமிழகத்தில் தாக்கங்களை உருவாக்கி, சமூகம் ஒரளவு ஜனநாயகத் தன்மைகளைப் பெற வைத்ததாயினும், அவரது மறைவுக்குப் பின் அதன் வீரியம் குறைந்து மங்கியது.

இந்த நிலையில், ஒரு சிறு பகுதிகூட இலங்கைத் தமிழ்ச் சூழலில் இடம் பெறவில்லை. ஈழத்து காந்தி, தந்தை என மகுடமிடப்பட்டு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ அவரது, ‘மைந்தர்களோ’ ‘பேரப்பிள்ளைகளோ’ தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி தயாராக இருந்ததில்லை.

நாடாளுமன்றப் பாதையிலும் ஆயுதம் போராட்டப் பயணத்திலும், இந்நிலை மாறவில்லை. ஆயுதப் போராட்டம், சில உருமறைப்புகளைச் செய்து, வெளிப்படையாக அவற்றை இயங்கவியலாமல் செய்வதாய் சுருங்கியது. ஆனால் ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன.

நமது கடந்த அரைநூற்றாண்டுகால வரலாற்றைச் சிந்தித்தால், நமது தமிழ்ச் சூழலில் ஜனநாயகப்படுத்தல் இடம்பெறவில்லை என்றே துணிந்து கூறலாம். எனவே வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கு ஒடுக்குமுறைத் தளங்களிலும் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் மட்டுமன்றி, ஏனைய தேசிய இனங்கள் மத்தியிலும் ஜனநாயகப் படுத்தவோ அவற்றுக்கான கொள்கை நடைமுறை வழியிலான போராட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை.

இன்று தமிழ்ச்சமூகம் விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் தன்னை மீள்கட்டமைக்கவும், ஜனநாயகப்படுத்தவும் வேண்டும். அதற்கான வாய்ப்புகளைக் காலம் உருவாக்கியுள்ளது. தொடர்புடைய தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் அனைத்துக்கும் வாக்களித்து மக்கள் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள். எனவே, ‘எங்களுக்கு மக்கள் ஆணை இல்லை’ என்ற சாட்டைச் சொல்லவியலாமல் செய்திருக்கிறார்கள். இது, மக்கள் வினாத் தொடுப்பதற்கான நேரம்.

தேசிய இனப்பிரச்சினையை விளங்கிக்கொள்வதில் தமிழ்த் தேசிய கட்சிகள் காட்டிவந்த அசிரத்தை, பல அபாயங்களைத் தமிழ் மக்களுக்கு விளைவித்துள்ளது. இவை, தேசிய இனப் பிரச்சினையை மக்கள் மத்தியிலான ஒரு முரண்பாட்டின் விருத்தியாகக் காணத் தவறியதோடு, அதைத் தனியே தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான முரண்பாடாகக் கண்டது.

தேசிய இனப்பிரச்சினை, எவ்வாறு ஓர் இன ஒடுக்குமுறையாகவும் போராகவும் உருமாற்றம் பெற்றது என்பதை, இயங்கியற் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டியுள்ளது. தேசிய இனமுரண்பாடு, எல்லாத் தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மை இனங்களையும் சேர்ந்த மக்களிடையிலான பகைமையற்ற, சினேக முரண்பாடுத் தன்மை கொண்டிருந்தால், அது எவ்வித வன்முறைக்கும் இடமின்றித் தீர்க்கக் கூடியது.

அது, ஆளும் அதிகார வர்க்கத்தினரிடையே இருந்த போட்டியின் வடிவில் தொடங்கி, மக்களின் கவனத்தை அடிப்படையான பொருளாதாரமும் சமூக நீதியும் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்புகிற நோக்கில் பகை முரண்பாடாக மாற்றப்பட்டது. அதுவே, உலகமயமாக்கலினதும் அந்நியர்களினதும் தேவை கருதிப் போராகவும் உருமாற்றப்பட்டது.

தேசிய இன முரண்பாடு, உண்மையில் எந்த இரு தேசிய இனங்களுக்கும் இடையிலானதல்ல. அது சிங்களப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை காட்டிக் கொள்ளுகிற ஓர் ஆளும் அதிகார நலன்கள் சார்ந்த பிரச்சினை. அந்த நலன்களை முன்னெடுக்கும் பேரினவாதப் பிற்போக்குச் சக்திகளினதும் அவர்களுக்குப் பின்னால், செயற்படுகிற அந்நிய மேலாதிக்கச் சக்திகளினதும் தேவைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட பிரச்சினையாகும்.

எனவே, தேசிய இனப்பிரச்சினையின் பகைமையான அம்சம், தேசிய இனங்களைச் சார்ந்த மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பற்றியதல்ல. அது பேரினவாத ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களுக்கும் இடையிலானது. எனவே, அதைச் சிங்களவர்-தமிழர் முரண்பாடு எனப் பார்ப்பது பல வழிகளிலும் தவறானது. அப்பகை முரண்பாட்டுக்கு குறுந்தேசியவாதமும் குறுகிய இனவாதப் போக்குகளும் வலுச் சேர்க்கின்றன.

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு இரண்டு முக்கியமான போராட்ட அம்சங்களைக் கொண்டது. ஒன்று, பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் வன்முறை உட்பட்ட பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போரிடுவது. மற்றது, தேசிய இனப் பிரச்சினையின் பகைமையற்ற பண்பை மீளவும் நிலை நிறுத்துவது. இவை, இரண்டையும் இயலுமாக்கினாலே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான, நியாயமான தீர்வொன்றைப் பெற இயலும். அதற்கான போராட்டம், ஒரு பரந்துபட்ட வெகுஜனப் போராட்டமாகவும் அமைவது அவசியம். அப்போராட்டம், தேசிய இனப்பிரச்சினையை மட்டுமே தனது அக்கறையாகக் கொண்டிருக்க இயலாது.

தேசிய இனப் பிரச்சினை, ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறக் காரணமான முரண்பாடுகளையும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறியதன் விளைவான முரண்பாடுகளையும் கணிப்பில் எடுக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை, இன்று திட்டவட்டமாகவே புதியதொரு கட்டத்துக்கு வந்துள்ளது. அதனால் அதைக் கையாளுகிற விதத்தில் மாற்றங்கள் அவசியமாகின்றன.

இன்றைய நிலையில் தமிழ்ச்சமூகம் ஜனநாயகம் குறித்தும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி எவ்வாறு நகர்வது பற்றியும் ஆழமாகச் சிந்தித்தாக வேண்டும். அதை நாம் தாமதியாது செய்தாக வேண்டும். எம்முன்னே உள்ள நெருக்கடியின் ஆழம் அத்தகையது. எடுவர்டோ கலியானோ சொல்வது போல, “இன்று எமதுநிலை, துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கும் ஓர் இடத்தில், தட்டுத் தடுமாறிச் செல்லும் ஒரு குருடனைப் போலத்தான் இருக்கிறது”.