தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??

(சாகரன்)

மாடு திருடியவனுக்கு தண்டனை என்று சும்மா விட்டுவிட்டு போக முடியவில்லை. (கொலை) வெறிபிடித்து தண்டனை வழங்குவதற்குரிய அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார். தண்டனை என்பது ஒருவன் தெளிந்து, திருந்தி, மனிதனாக வாழ்வதற்கே ஒழிய மாறாக அவனை அழித்தொழப்பதற்காக அல்ல. துன்புறுத்தலில் ஈடுபடுவதும் ஒருவகை குற்றம்தான்;. இந்த தவற்றிற்கான தண்டனை ஏற்க யார் முன் வருவார்கள். தவறு செய்வதற்காக சமூகக் காரணிகள் என்ன என்பது ஆராயப்பட்டு இந்த சமூகக் காரணிகள் களையப்பட்டு இதன் அடிப்படையில் அறிவூட்டப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒரு நல்ல பிரஜையாக வாழ வழிவகை செய்யும் அணுகு முறையே தவறுகளை களைவதற்குரிய சரியான செயற்பாடு ஆகும்.

மாறாக எடுத்தோம் அடித்தோம் சுட்டோம் இதனைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்தோம் என்று போய்கிட்டே இருப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் அடையாளங்கள் அல்ல. சட்டத்தை ஒழுங்கை நிலை நாட்ட முடியாத கையறு, கையூடு நிலமைகள் இது போன்ற சமூகத் தவறுகள் கட்டுக்குள் இல்லாமல் இருப்பதற்கான காரணிகளில் சில. 30 வருடப் போர் விட்டுச் சென்ற வடுக்கள் ஆவா குறூப்புக்களும், கையாடல் செய்யும் (மாகாண) அரசும். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை கையாடல் செய்த மந்திரிசபை எவ்வாறு எமது சமூகத்திற்கு வழிகாட்டும் என்று எதிர்பார்க்க முடியும். இவர்கள் 80 இலட்சம் வாகனத்தில் ஏறி வேட்டி மாலையுடன் அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்க மக்களிடம் செல்ல முடியும் என்றால் மாடு திருடியவன் தன்னிலை உணவதற்கு வாய்புக்கள் எங்கே..? இங்குள்ளது. அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று நாம் நொந்து கொள்ள வேண்டிய கையறு நிலை தற்போது.

‘இருப்பவர்கள் இருந்திருந்தால்….’ என்பது ‘பஞ்’ டயலாக்கிற்கு வேணும் என்றால் உதவலாம். பயத்தை உண்டு பண்ணி உருவாக்கிய நெறிமுறைகள் நடுக்கத்தை ஏற்படுத்திய கருவிச் சனியன் இல்லாத போது தகர்ந்து போகவே செய்யும். மாறாக கருவி இல்லாத போது சமூகம் நெறி முறைகளுக்கு உட்பட்டு அறம் சாரந்து செயற்படவேண்டுமாகின் சமூகத்திற்கான சரியான அறிவூட்டல்களே சரியான அணுகுமுறையாகும். புதிஜீவிகளைக் கண்டால் பிடிக்காத 30 வருட போராட்ட காலம் அறிவூட்டல்களை செய்திருக்காது என்பது ஒருகாலத்தில் நாகரீகமான சமூகம் என்றிருந்த யாழ் சமூகத்தை இந்தளவிற்கு தரம் இறக்கியிருக்கின்றது என்பதிலிருந்து ஆய்தறிய முடிவற்கு ஏதுவாக இருக்கின்றது.

‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம் பிறக்கின்றது’ என்பது அர்த்தத்தை மாற்றி விளங்கும் அறிவுப் பிறழ்சி. ‘இருப்பவர்கள் இருந்திருந்தால்…’ என்று துப்பாக்கி இருந்திருந்தால் மாடு திருடியவன் இன்று மின்கம்பத்தின் அடியில் பிணமாக. இதனை பார்த்த வண்ணம் அதே 80 லட்சம் வாகனம் மாலையுடன் அடுத்து தேர்தல் வெற்றியை நோக்கி. இந்த மூமூகம் தன்னை அறம் சார்ந்த சமூகமாக மாற்றியமைக்க நீண்ட பயணங்கள் சென்றே ஆகவேண்டும். அதுவரை வீதிகள் மாடு திருடியவனுக்கு தண்டனை என்றும் ஆவா வாள் என்றும் சிவந்தே இருக்கும்.