ரிஷாட் இராஜினாமா?

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டிருந்த போதிலும், அவர், நேற்றுவரையிலும் நேரம் ஒதுக்கிகொடுக்கவில்லை.

லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் 328ஆவது கிளையைத் திறந்துவைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 28ஆம் திகதியன்று கொஹுவலைக்குச் சென்றிருந்த போது, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அமைச்சர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை விட்டிருந்தார் என அறியமுடிகிறது.

எனினும், ஜனாதிபதி நேரம் ஒதுக்கிதரவில்லை. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த அமைச்சர் ரிஷாட், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தன்னுடைய கடும் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

சர்ச்சைகுரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, அந்த பிரதேச மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி, இடம்பெயர்ந்து வருடக்கணக்கில், அகதி முகாம்களில் இருக்கின்ற முஸ்லிம் மக்களை, நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அகதி முகாம்களுக்குள் தள்ளிவிட்டுள்ளது என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமைகளில், அரசாங்கத்தில் தன்னால் தொடர்ந்து இருக்கமுடியாது என்றும், அமைச்சு பதவியை இராஜினாமா செய்யபோவதாகவும் அவர் அறிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

40,030.525 ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்ட மாவில்லு, வெப்பல், கரடிக்குழி அல்லது மறிச்சுக்கட்டி, விலத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய ஒதுக்குக் காடுகளுக்கு உரியதான காட்டுப் பிரதேசத்தை, ஒன்றாக இணைத்து மாவில்லு பேணற் காடு என 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.