தன் வாழ்வால் எங்களுக்கு வழிகாட்டியவர் றொபேட்

சவகச்சேரி நுணாவில் என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் றொபேட் அவரது 45 ஆவது வயதில் 14.06.2003 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் றொபேட்டின் குடும்ப சூழல், துன்ப துயரங்கள், இன்னல்கள் ஏதுமற்றிருந்த போதும் சமூகத்தின் துன்ப துயரங்கள் சமூகத்தில் நிலவிய அநீதிகள் அகல வேண்டும் என்று அக்கறை கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துணிந்தார். அவரது இந்த ஈடுபாடு தான் அவர் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொள்ளக் காரணமாகியது.

ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுடன் 23 வருடங்கள் முன்னணியில் இருந்து செயற்பட்ட அவர் இறுதிவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அவர் எதிர்கொண்ட எத்தகைய துன்பமும், நிதி நெருக்கடிகளும், கஷ்டங்களும், ஆசை வார்த்தைகளும், அச்சுறுத்தல்களும் அவரை சஞ்சலமடையச் செய்துவிடவில்லை.

1985ம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தோழர் றொபேட் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசின் தடுப்புக்காவலில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானார். தோழர் றொபோட்டின் பெற்றோர் என்பதை தவிர எவ்வித குற்றமும் இழைத்திராத அவரது தந்தையார் 1989 இல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1990 இல் அவரது தாயார் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். எந்த இன்னலும், இடையூறும் அவரை நிலைகுலையச் செய்துவிடவில்லை.

அவர் எதிர் கொண்ட தேர்தல்களில் எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிட்டாத போதும் கொண்ட கொள்கையில் உறுதியோடும், நம்பிக்கையோடும் இறக்கும் வரை செயற்பட்டார்.

கட்சியில் யாழ் மாவட்டத்தின் இராணுவ பிரிவு தலைவராக, மத்திய குழு உறுப்பினராக, அரசியல் பீட உறுப்பினராக தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கட்சிக்குள் அதிகாரமுள்ள ஒருவராகவும். நிதியை கையாளும் ஸ்தானத்திலிருந்தபோதும் இவற்றை துஸ்பிரயோகம் செய்தார் என்ற பேச்சுக்களுக்கு இடமளிக்காத ஒருவராகவே விளங்கினார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கும், சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டம் தான் வழி என்ற நிலைப்பாட்டுடனும் அதற்கு ஈபிஆர்எல்எவ் இன் கொள்கைகளும், வேலைத்திட்டமும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொண்ட அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபை முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவது சாத்தியம் என்ற நிலை உருவானபோது யாதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட்டவர். சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டோம் என்று இன்று பல புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் ஏங்குகின்ற நிலையில் 25 வருடங்களுக்கு முன்னரே சரியான பக்கத்தை அடையாளம் கண்டு செயற்பட்டவர்களில் ஒருவராவார்.

தனது அரசியல் வாழ்வில் மக்களின் நம்பிக்கைகளுக்கு விசுவாசமாகவும், தனது தலைமையின் கீழ் கட்சிப் பணிகளை மேற்கொண்ட தோழர்கள் ஒவ்வொருவரது நலன் குறித்தும் அக்கறையோடு செயற்பட்டவர். தனது நலன்களை எப்போதும் மக்களின் நலன்களுக்கும் கட்சியின், தோழர்களின் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தி வாழ்ந்து காட்டியவர். விளைவுகளை எண்ணி கலங்காமல், பின்வாங்காமல் சரியானதை செய்து சாதனை புரிவதை சவாலாக ஏற்று செயற்பட்டவர்.

தவறுகளுக்கு எதிராக சளைக்காது போராடிய தோழர் றொபேட் திறமை எங்கிருந்தாலும் வெளிப்படையாய் பாராட்ட தயங்குவதில்லை. ஊர், பிரதேசம், இனம், நாடு, கட்சி என்ற எல்லைகளை கடந்து அவர் மனிதர்களை நேசித்தார். அவ்வாறே இன்று அவரும் நேசிக்கப்படுகின்றார். அவரது உன்னத சிந்தனைகளுக்காகவும், செயல்களுக்காகவும் என்றென்றும் நேசிக்கப்படுவார்.