தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?

(சாகரன்)

2009 ம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் இதனைத் தொடர்ந்த தேர்தலுக்கான ஜனநாயக நிலமையும் புலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் இல்லாதது என்று நிராகரித்து வந்த மகாண சபைத் தேர்தலில் பங்குபற்றும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே கிழக்கில் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து (சந்திரகாந்தன்)பிள்ளையானை முதல் அமைச்சர் ஆக்க வழி ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் என்ற ஆசையினால் வடக்கில் வாய்பை விடக் கூடாது என்று கங்கணம்கட்டி புறப்பட்டது, வட மகாண சபைத் தேர்தலைச் சந்திக்க.

தன்னுடன் ஏற்கனவே இணைப்பில் இருந்த முன்னாள் போராளி அமைப்புக்களான சுரேஷ் பிரேமசந்திரன் தலமையிலான ஈபிஆர்எல்எவ், செல்வம் அடைக்கலநாதன் தலமையிலான ரெலோவுடன் கூடுதல் இணைப்பான சித்தார்தன் தலைமையிலான புளொட்டையும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்ணியையும் இணைத்துக் கொண்டு மகா கூட்டணியாக புறப்பட்டது தேர்தலை எதிர்கொள்ள. 1990 பிரேமதாஸ காலத்தில் இருந்து இணக்க அரசியல் என்று செயற்படும் ஈபிடிபி உம் தனது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷத்துடன் மகாணசபை ஏற்றுக் கொண்ட அமைப்பாக தேர்தல் களம் காணப் புறப்பட்டதன தேர்தல் களத்திற்கு.

 

இவ் அணிகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு காலத்திலும் பெரும் தலைவர்களாக இருந்த படியால் இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அடுத்த முதலமைச்சர் தான்தான் என்ற கனவுகள் இல்லாமல் இல்லை. இதில் சில நியாயங்களும், மக்கள் நல சிந்தனைகளும் இல்லாமல் இல்லை. இது மாவை சேனாதிராஜவுக்கும் பொருந்தி இருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய வரவான சுமந்திரனும், சம்மந்தரும் யாவரும் ஏற்கும் இக் கூட்டமைப்பிற்கு அப்பால் உள்ள ஒருவரை முதல் அமைச்சர வேட்பாளர் ஆக்கி தனக்கு கிடைக்காவிட்டாலும் தமக்குள் இருக்கும் இன்னொருவருக்கு கிடைக்கக் கூடாது என்ற இந்த முன்னாள் தலைவர்களின் பொது அங்கீகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் விக்னேஸ்வரனுக்கு கிடைக்க ஆவன செய்யப்பட்டது. இதன் மூலம் சம்மந்தரும் மாவையை தவிர்த்து தான்தான் முடிசூடா மன்னன் என்று எதிர்கட்சித்தவைர் ஆகி முதன்மை இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

சம்மந்தருக்கு பிறகு நான்தான் என்று அவருக்கு இளையவர்கள் கனவுகள் காண வெளியில் இருந்து வந்த சுமந்திரன் இல்லை எனக்கு அதிக வாய்புள்ளது என்று காய்களை நகர்த்த, மேற்குலக ஆசீர்வாதத்துடன் நல்லாட்சியும் நடைபெற பெரும்பான்மை ஆட்சிக் கட்சிக்கும் சிறுபான்மை எதிர் கட்சியிற்கும் ஒரு சக்தியே பொது வேலைத் திட்டத்தை வரைந்து காய்களை நகர்த்தியது. இந்த செயற்பாடுகளினால் சற்று ஏமாற்றம் அடைந்தவவை முன்னாள் விடுதலை அமைப்புகளின் கட்சிகள். சிறப்பாக இதன் தொண்டர்கள். இவர்கள் தமக்கான எம்பி பதவிகளை இழக்க விரும்பாமல் காயை நகர்த்தி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே இன்று வரை பயணித்து வருகின்றனர்.

இந்த காய் நகர்தல்கள் மக்களிடம் சிறிதாக அம்பலப்பட்டுப் போக இக் கூட்டில் உள்ள அனைவரும் மீண்டும் அரசுக்கு எதிர் என்ற அஸ்திரத்தை எடுத்துக் கொண்டு முன்னேற முற்பட்டனர். இந்த ஓட்டத்தில் தமிழ் அரசியலில் புது வரவான விக்னேஸ்வரன் முதன்மை பாத்திரத்தை எடுத்து தான் அரசிற்கு முண்டு கொடுக்கும் சம்மந்தன் சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் மாற்றீடு என்று அடையாளப்படுத்த தன்னை முற்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி விக்னேஸ்வரனை தமது தலைவர் என்று கூறிக் கொண்டு நகர முற்படுகையில் இடையிடையே விக்னேஸ்வரன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று தனது தமிழரசு விசுவசத்தைக் காட்டி இரட்டை வேடம் போட்டார். கூடவே மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் மீது அதிருத்தி அடைந்தவர்களுக்கும் மாற்றுத் தலைவராக விக்னேஸ்வரனைத் தவிர வேறு யாரையும் இனம் காண முடியவில்லை.

சிங்கள அரசு மீது அதிகம் வெறுப்புக் காட்டுபவன்தான் சரியான தேர்தல் வெற்றிக்கான தலைவன் என்பது இந்த அரசியல் கட்சிகளுக்கும் அப்பாவித்தனமாக அரச இயந்தித்தின் மீது வெறுப்பு கொண்டவர்களுக்குமான தெரிவாக இருந்தது. இந்த பாத்திரத்தை ஏற்று நடாத்துவதில் விக்னேஸ்வரன் விருப்புடன் செயற்பட முனைந்தார். செயற்பாடு அற்ற வினைத்திறன் அற்ற ஊழல் நிறைந்த அமைச்சரவையை தலைமை தாங்கி தப்பிக் கொள்ள இந்த ஆயுதம் இலகுவாக அவருக்கு உதவுகின்றது. அதிகாரம் இல்லை, செயற்பட விடுகின்றார்கள் இல்லை, இராணுவம் பொதுமக்களின் நிலங்களில் இருந்து விலகுகின்றார்கள் இல்லை, அரசியல் தீர்வுதான் வேண்டும், அபிவிருத்தி அல்ல என்று சொல்லியவண்ணம் நகருவது, மாலைகளை பெறுவது, கை தட்டல்களை பெறுவது, நம்பிக்கை நாயகனாக மிளிருவது எல்லாம் இந்த திசை வழியிற்கு இலகுவாக இருக்கின்றது.

இவர்கள் யாபேரும் முன்னாள் போராளிகள் போராடிப் பெற்ற அற்பங்களை அனுபவித்த வண்ணம் தமிழீழ விடுதலைப்புகளின் மாவீரர் தினங்களை தமக்கு மூலதனமாக்கிக் கொண்டு நாம் ஆயுதம் தூக்கவில்லை என்று பொன்னம்பலத்து காலத்தில் இருந்து இன்றுவரை அரசியலை எம்பி பதவிகளை மகாண அமைச்சு பதவிகளை பெற்று வாகனங்களில் பவனி வருகின்றனர். மக்களும் இதற்கு மாற்றீடான தலமைகளை கண்ணுறவில்லை.

மேற்கூறிய அரசியல் தகித்திடத்திற்கு தேவையான போது பணம் பட்டுவாடா செய்ய புலிகளின் விசுவாசிகள் என்று மகிந்தாவினால் தோற்கடிக்கப்பட்டு கோவத்தில் இருக்கும் முன்னாள் புலி இயக்க விசுவாசிகள் பிரிந்து பிரிந்து உதவிகளை செய்தும் வருகின்றனர். இந்த புலம் பெயர் தேசத்து பணமும், மேற்குலத்தால் ரணில் ஊடாக அரச இயந்திரம் ஊடாக பட்டுவாடா செய்யப்படும் பணமும் இவர்களை உயிர்ப்புடன் இருக்க பெரிதும் உதவுகின்றன. இந்தப் பணங்கள் இல்லையேல் இந்த உயிர்புகள் கேள்விக்குறியாகிவிடும்.

(இன்னும் வரும்….)