கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
“….(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்…” இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ‘கலவரங்கள்’ எவையும் உண்மையிலேயே கலவரங்கள் என்கிற வரையறைகளுக்குள் அடக்க முடியாதவை. மாறாக, ‘திட்டமிட்ட அரச வன்முறைகள்’ என்கிற வடிவத்துக்குள் வருபவை.

1956 தொடக்கம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கண்டி, திகன வன்முறைகள் வரையில், அனைத்து வன்முறைகளும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்டவை. அதுபோலவே, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகளும் அரச தலையீட்டுடன் நடாத்தி முடிக்கப்பட்டவை.

இரண்டு குழுக்களுக்கிடையிலோ, சமூகங்களுக்கிடையிலோ எழுந்த முறுகல்களின் வழி, ஏற்பட்டிருந்தால் கலவரம் என்கிற அடையாளத்தைக் கொடுக்கலாம். ஆனால், இங்கு, திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி, குண்டர்களையும் ஏவல் படைகளையும் கொண்டு, வன்முறைகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.

மஹிந்த காலத்து அளுத்கம- பேருவளை வன்முறைகளும், அண்மைய நல்லாட்சி காலத்து திகன வன்முறைகளும் அதன் வடிவங்களே.

இலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்புத் தரப்பும் செய்த ஒவ்வொரு திட்டமிட்ட வன்முறைகளுக்குப் பின்னாலும், பேரினவாத- இன அழிப்புச் சிந்தனை இருந்தது. சுதந்திர இலங்கையில், பௌத்த சிங்களப் பேரினவாதம் கோலோச்ச ஆரம்பித்தது முதல், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட ஆக்கிரமிப்பும் அழிப்பும் வலுப்பெற்றன.

அதன், முதல் கட்டமாக ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினூடாக, அரச சேவையிலிருந்த தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். அதன்பின்னரான ஒவ்வொரு கட்டத்திலும், தமிழ் மக்களின் நிலம், கல்வி, பொருளாதாரம் என்கிற அடிப்படைகள் இலக்கு வைத்துத் தகர்க்கப்பட்டன.

2009களுக்குப் பின்னரும் கூட, நில ஆக்கிரமிப்பு என்பது, திட்டமிட்ட வழிகளில் வடக்கு, கிழக்கு பூராவும் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவ முகாம்களாகவும் பௌத்த விகாரைகளாகவும் தொல்லியல் திணைக்களத்தின் வடிவத்திலும் ஆக்கிரமிப்பின் கூறுகள் நீள்கின்றன.

கறுப்பு ஜூலை வன்முறைகளின் 35ஆவது ஆண்டு நிறைவு கடந்த திங்கட்கிழமை (23) நினைவு கூரப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுதான், ஜூலை வன்முறைகளுக்கான காரணம், என்கிற உணர்வு நிலையொன்று, இன்னமும் தென்னிலங்கை மக்களிடம் தக்க வைக்கப்படுகின்றது. அதுபோல, விடுதலைப் புலிகளின் உருவாக்கம்தான், இன முரண்பாடுகளுக்கான காரணம் என்று திரும்பத் திரும்ப போதிக்கப்படுகின்றது.

2009 மே 18ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அதையே தெரிவித்திருந்தார்.

உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதை, தென்னிலங்கை எப்போதுமே தவிர்த்து வந்திருக்கின்றது. மாறாக, விளைவுகள் பற்றியே பேசி விடயங்களைக் கடக்க நினைத்திருக்கின்றது.

தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிராக எழுந்த ஒன்றல்ல. அது, பௌத்த, சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த ஒன்று. பௌத்த, சிங்களப் பேரினவாதம் தன்னுடைய கொடுங்கரங்களை ஒவ்வொரு கட்டத்திலும் இன அழிப்பை முன்னிறுத்தி நீட்டும் போதும், தமிழ்த் தேசியவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எழுந்திருக்கின்றது.

அதன்வழியே, தமிழ்த் தேசியப் போராட்டங்கள், அஹிம்சை வழி தொடங்கி, ஆயுத வழி வரை சென்று சேர்ந்தது.

தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றத்துக்கும் நிலைபெறுகைக்கும் தக்க காரணங்கள் உண்டு. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியவாதத்தையே, பயங்கரவாத சிந்தனையாகத் தென்னிலங்கையில் மீளமீளப் பதிவு செய்யும் தன்மையானது, அதிக நேரங்களில், ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒன்றாகவே இருந்து வருகின்றது.

தவறுகளைத் திருத்துவதும், கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படித்து முன்னேறுவதுமே முன்னேற்றகரமான சமூகங்களுக்கு அவசியமானது.

ஆனால், ஒரு நாட்டின் அரசமைப்பு உள்ளிட்ட அரச கட்டுமானங்களில் அத்துணை ஏற்றதாழ்வுகளையும் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான அடங்குமுறையையும் வைத்துக் கொண்டு, சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பேசுவது அல்லது புகட்டுவது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். சுமந்திரன் சொல்வது போல, “மற்றவர்களின் தயாள குணத்தால் அல்லது பச்சாத்தாபத்தால் நாங்கள் காப்பாற்றப்படுகின்றோம் என்கிற உணர்வு, எங்கள் மீதான அதிகபட்ச வன்முறையாகும்”.

இலங்கையின் அரசமைப்பில் இருந்து, பௌத்தத்துக்கு முதலிடம் என்கிற விடயத்தையே மாற்ற முடியவில்லை என்கிற போது, அதிகாரங்களின் பகிர்வு என்பது, எந்த வகையில் சாத்தியமாகும்.

இந்த நாட்டிலுள்ள அனைவரும் சமமானவர்கள் என்கிற சாதாரண எண்ணத்தை, அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து என்கிற விடயத்தை அரசமைப்பில் உறுதி செய்வதிலிருந்தும் தொடங்கலாம்.

ஆனால், அந்தக் கட்டத்தைத் தென்னிலங்கையின் அதிகார பீடங்கள் அனுமதிக்காத போது, எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சிந்தனை தென்னிலங்கை கொண்டிருக்கவில்லை என்று கொள்ள முடியும்?

“நாங்கள் முதலிடத்துக்கு உரியவர்கள்; எங்களுக்கு கீழேயே நீங்கள்” என்று திரும்பத் திரும்ப ஒரு சனக்கூட்டத்தை நோக்கிச் சொல்லும் போது, அதற்கு எதிரான எழுவது என்பது மனித சுதந்திரத்தின் அடிப்படையாகும்.

நாடொன்று தன்னுடைய பிரஜைகளில் ஒரு தொகுதியினரை முதன்மையானவர்களாகவும் இன்னொரு தொகுதியினரை கீழானவர்களாகவும் அரசமைப்பினூடு பேண முயலும் போதும், அதனை உணராது, பாதிக்கப்பட்ட மக்களிடம் வந்து, ஜனநாயக வகுப்பு எடுக்கும் தன்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதிக தருணங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கொழும்பு லிபரல்வாதிகளும் இந்தச் சிந்தனையோடு தமிழ் மக்களை நோக்கி வருகின்றார்கள்.

அவர்கள் பொத்தம் பொதுவாக, அரசாங்கமும் குற்றமிழைத்திருக்கின்றது; புலிகளும் குற்றமிழைத்திருக்கின்றார்கள், ஆகவே குற்றங்களை மறந்து மன்னித்து அடுத்த கட்டத்துக்கு போவோம் என்கிறார்கள்.

தவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்புதான், ஆனால், திட்டமிட்ட வன்முறைகளையோ, திட்டமிட்ட அடக்குமுறையையோ, இன அழிப்பையோ மறப்பதும், மன்னிப்பதும் அறமல்ல. அது, அடிமைத்தனத்துக்கு ஒத்திசைவது.

சிங்கள மக்களோடு இணக்கமாக வாழ்வது தொடர்பில் தமிழ் மக்களுக்கு என்றைக்குமே பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்புக்குள் அடங்கி ஒடுங்கி வாழ்வது தொடர்பில் பெரும் பிரச்சினையுண்டு. ஏனெனில், அது என்றைக்குமே அச்சுறுத்தலானது.

கறுப்பு ஜூலை வன்முறைகள் உள்ளிட்ட கடந்த காலத் திட்டமிட்ட வன்முறைகளை, இனக்கலவரமாகச் சிந்திப்பதிலிருந்து விலகி நின்று, ‘பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்பின் இன அழிப்புச் சிந்தனை’ என்பதாக உணரப்படும் போது, தெளிவு கிட்டும்.

அப்போதுதான், நாட்டின் சமாதானம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் அனைவராலும் சிந்திக்க முடியும். அது இல்லாமல், பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு வெளியில் நின்று சிந்திப்பதானது, பிரச்சினைகளின் அளவை அப்போதைக்கு வேண்டுமானால் மடை மாற்றுவதற்கு உதவும்.

ஆனால், பிரச்சினைகளை உண்மையாகத் தீர்ப்பதற்கான எந்தவொரு கட்டத்தையும் அடைய உதவாது. கறுப்பு ஜூலை வன்முறைகள் பற்றிய அண்மைய உரையாடல்களிலும் அதையே அதிகமாகக் காண முடிந்தது.