தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)

(சாகரன்)

1990 களில் இணைந்த மகாண அரசை இல்லாமல் செய்ய பிரேமதாசா கையில் எடுத்த இருவர் பிரபாகரனும் தேவானந்தாவும் ஆவர். முதலாமவரை ஆயுத ரீதியிலும் மற்றயவரை அரசியல் ரீதியிலும் தன் எண்ணத்தை நிறைவேற்ற பாவிக்க முனைந்தார் பிரேமதாச. இதற்காக அவரகளுக்கு சன்மானங்களும் வழங்கினார். புலிகளின் அவசர முடிவு பிரேமதாசாவை கொன்று புதைக்க, சந்திரிகா மகிந்தா என அரசியல் களங்கள் மாற மத்திய அரசுடன் இணக்க அரசிலை நம்பி ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று புறப்பட்டு வடபகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாத அபிவிருத்தியை செய்துகாட்டினார் தேவானந்தா. தன் வழி தனி வழி அது ஒருவனின் வழி என்று புறப்பட்ட தேவானந்தா தமிழர் அமைப்புக்களிடையே ஐக்கிய முன்னணி பற்றி அதிகம் அக்கறை காட்டாமல் செயற்பட்டார். இடையிடையே தேவையிற்கு ஏற்ப ஐக்கியத்திற்காகவும் அறிக்யை விட்டு சிலருக்கு ஆசனமும் கொடுத்து தனது ஆசனத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான வாய்புக்களை உறுதிபடுத்திக் கொண்ட அரசியல் சாணக்கியர் இவர்.

தனது அமைப்பிற்குள்ளேயே மே 2009 முன்பும், பின்பும் பன்முகப்படுத்தப்பட்ட தலமையை விரும்பாதவர். இது தனது செயற் திறனுக்கு இடைஞ்சலாது என்று நம்புபவர். இரண்டாம் மட்டத் தலமை தன் ஏக தலமையை மீறிவிடுவோ இதனால் தன் செயற்பாடுகள் ‘சுதந்திரமாக” செயற்படுத்த முடியாமல் போய்விடுமோ என்று ஈழவிடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் முதல் இன்று வரை நம்புபவர் இதற்காக அயராது உழைப்பவர் இதனை வெளிப்படையாக சொல் மூலமும் செயல் மூலமும் செய்து வருபவர்.

 

இவருக்கு கிடைத்த வாய்புக்களை பயன்படுத்தி ஒரு பலமான ஐக்கிய முன்னணியை தமிழர் தரப்பில் அமைத்திருக்க முடியும். இது அந்த அப்புக்காத்து அரசியலுக்கு மாற்றீடாகவும் வந்திருக்கவும் முடியும். ஆனால் இவரின் தனித்து நிற்றல் என்ற கோட்பாடும் செயற்பாடும் கயிற்றில் மேயக் கட்டிவிடப்பட்ட கால் நடைகள் போல் ஒரு குறுகிய வட்டத்திற்கு அப்பால் இவரால் நகர முடியவில்லை. இவரிடம் உதவி பெற்றவர்கள் கூட இவருக்கு வாக்குகளை அளிப்பதில் தயக்கம் காட்டினர். தனது முன்னாள் சகாக்களை நம்புவதிலும் பார்க்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இவர் சுரேசைப் போலவே செயற்படுகின்றார். புனர்வாழ்வு அளிப்பது சரிதான். ஆனால் அவர்களை கருத்தியல் அல்லது குணாம்சரீதியாக மாற்றம் அடைவதற்குரிய பயிற்சிகள் பெற்றார்களா என்றால்…? பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது.

 

தமக்கான உறுப்பினர்களை தமது தாய் இயக்கமான பத்மநாபாவின் தோழர்களை உள்வாங்குவதில் சுரேஷ் உம் தேவானந்தாவும் கடும் பிரயத்தனம் எடுத்து செயற்பட்டு வருகின்றனர். இதில் தேவானந்தாவின் உதவி செய்தல் என்ற தனிநபர் பண்பாடு அவருக்கு சில வெற்றிகளை தந்திருக்கின்றன. அதே வேளை தனது முன்னாள் சகாக்களையும் இழப்பதற்கும் வாய்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் சுரேஷ் தலமையை ஒரு காலத்தில் ஏற்றவர்கள் தேவானந்தாவிடமும் தேவாவின் தலமையை ஒரு காலத்தில் ஏற்றவர்கள் சுரேஷ் இடமும் இடம் மாறிறதாக வரலாற்றுக் குறிப்புக்களில் காணமுடிவது மிகவும் கடினம். இவர்கள் இருவரும் தமது தாய் இயக்கத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள் என்ற கோதாவில் ஒன்றாக பயணிக்க கூடிய வாய்புக்களை தமக்குள் எப்போதும் கொண்டிருக்கவில்லை இனியும் இதற்கான வாய்புகள் இல்லை. ஆனால் சுகு சிறீதரன் தலமையிலான உறுப்பினர்கள் இரு தரப்பினருடனும் பேசவும் இணைந்து வேலை செய்யவும் ஐக்கியப்படவும் எப்போதும் போல் வாய்புக்களை கொண்டிருக்கின்றனர். இதற்கான வரலாற்றுக் குறிப்புக்களை டிரிஎன்ஏ, தமிழ் மக்கள் அரங்கம், யாழ் இல் நடைபெற்ற தோழமை தினம், மேலும் கடந்த காலத்தில் நடைபெற்ற சில தேர்தல்களிலும் கண்டிருக்க வாய்புக்கள் உண்டு. மேலும் புலம் பெயர் தேசம் எங்கும் ஆண்டு தோறும் நடைபெறும் பத்மநாபா ஈபிஆர்எலஎவ், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தியாகிகள் தன நிகழ்வுகளில் ஈபிடிபி ஈபிஆர்எலஎவ்(சுரேஷ்பிரிவு) தொடர்ச்சியாக கலந்து கொள்ள அழைப்புகள் விடுக்கப்பட்டும், அழைப்பை ஏற்று கலந்து கொள்ளல்களும் கருத்துரை வழங்கப்பட்டதும் இங்கு அவதானிக்கப்படவேண்டிய பலவாகும்.

இந்நிலையில் பத்மநாபாவின் பாசறையில் ஒன்றாக மக்கள் சேவையைக் கற்றுக் கொண்ட ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ்., தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தமக்குள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்டு பயணிக்க முடியுமா….? இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான மூன்றாவது தலமை சாத்தியமாகுமா..? என்பது இன்று எம் முன்னே உள்ள கேள்வியாகும். மக்கள் சேவையை முன்னிறுத்தி இவர்கள் தமது விடுதலைப் போராட்ட காலத்து செயற்பாட்டு அர்பணிப்பு, தியாகங்களை இதன் அடிப்படையிலான பலம் பலவீனம் என்பனவற்றை மீள் வாசிப்பிற்குள் உள்ளாக்கி பேச்சுக்களில் ஈடுபட்டால்……

(இன்னும் வரும்….)