எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).

(திரு சிவா ஈஸ்வரமூர்த்தியினால் எழுதப்பட்டு பதிவிடப்படும் தொடரின் ஆரம்ப அத்தியாயங்கள் சில விடுபட்ட நிலையில் அவற்றை வெளியிடுகின்றேன் – ஆர்)

2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதிக்கு பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மையான இருந்த காரணம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1986 இலிருந்து 30 வருடங்களாக நான் எனது தாயக மண்ணில் முழுமையாக சுதந்திரமாக வாழ்வதற்கும், சுற்றிப்பார்ப்பதற்கும், வாய்ப்புக்கள் எற்படவில்லை. யுத்தத்தின் முடிவு நான் புலம் பெயர்ந்ததற்கான காரணத்தை இல்லாமல் செய்திருந்தாலும் வாழ்வில் ஏற்பட்ட புதிய உறவுகள் உடனடி மீள் குடியேற்றத்திற்கு வாய்ப்புக்களை எற்படுத்தவில்லை. ஆனாலும் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த உடன் நான் பிறந்த மண்ணுக்கு முழுமையாக திரும்பி விடுவது என்பது என் சிந்னையில் முடிவாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 30 வருட காலச் சுழற்சியில் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் இதனை ஒட்டிய கடமைகளும், பொறுப்புக்களும் எல்லாவற்றையும் உடனடியாக பொத்தென்று போட்டுவிட்டுச் செல்ல முடியாமல் தடை போட்டுக் கொண்டே வந்தன.

இந்த தடைகளைத் தாண்டி உடனடியாக முழுமையாக தாயகம் திரும்ப முடியாவிட்டாலும் எமது பூமியைப் பார்த்துவிட்டுத்தான் வருவோமே…… என்றால் மேற்கூறிய அதே காரணங்கள் எனது பயணத் திகதி குறித்தலைப் பின் தள்ளியே வந்தன. ஆனாலும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களின் பின்பு எனது தாயகத்தை தரிசிக்கும் வாய்பை என்னால் ஏற்படுத்த முடிந்தது.

ஆமாம் 2015 நவம்பர் மாதம் 5ம் திகதி எனது பிறந்த பூமிக்கு காலடி எடுத்து வைத்தேன். தொடர்ந்தாற் போல தோராயமாக ஒரு மாதகாலம் அம்பாறை தொடக்கம் பருத்தித்துறை வரைக்கும், திருகோணமலை தொடக்கம் மன்னார் வரைக்கும் புலம்பெயர் தேசத்திலிருந்து சென்றவன் என்ற எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாத பயணம் ஒன்றை மேற்கொள்ள முடிந்தது. பெரும்பகுதி பொது மக்கள் பாவனை வாகனத்தில் எனது பயணங்கள் அமைந்தன.

இதில் எனது முன்னாள் சகாகள், நண்பர்கள், உறவினர்கள், எனது பாடசாலை, பல்கலைக் கழக சக மாணவர்கள், எனது மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சந்தித்தேன். ஒரு மாத கால கட்டம் என்பது இதற்கு போதாது என்றாலும் என் பார்வைக்கு கேள்விக்கு உட்பட்ட எனது பயண அனுபவங்களை நான் ஒரு சமூக விஞ்ஞானக் கண்டோட்டத்தில் உங்களோடு பகிரும் நோக்கோடு எழுதலாம் என்றுள்ளேன். என் அனுபவப் பகிர்வு சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்களை என் இனிய உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

(பயணம் தொடரும்……)