தமிழ் தேசிய அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவே இல்லை!

(ரி. தர்மேந்திரன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாக உள்ளன, 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள். கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை, தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்க பெறவில்லை என்பதோடு எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்கு உரிய விடயங்கள் ஆகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-


கேள்வி:- உங்களுடைய அரசியல் பயணம் குறித்து சுருக்கமாக கூறுங்கள்?
பதில்:- நான் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளராக பதவி வகித்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பாகவே அத்தேர்தலில் நான் போட்டியிட்டு அமோக வாக்குகளுடன் வெற்றி ஈட்டி இருந்தேன். இருப்பினும் அன்றைய அரசியல் சூழ்நிலையில் 2008 ஆம் ஆண்டு முதல் நான் கருணா அம்மானின் இணைப்பாளராக செயற்பட நேர்ந்தது. பிற்பாடு கருணா அம்மான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட்டபோது நானும் அக்கட்சியில் இணைந்து செயற்பட்டேன். அப்போதுதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நல்ல விடயங்கள் குறித்து நான் நேரடியாக அறிய முடிந்தது. பிற்பாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் தயாரட்ணவின் இணைப்பாளராக செயற்பட்டேன். கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கான நேர்முக தெரிவு இடம்பெற்றபோது எந்தவொரு சிபாரிசும் இல்லாமல் நான் அதில் பங்கேற்று அமைப்பாளர்களில் ஒருவராக தெரிவாகி உள்ளேன். எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே ஒரு இலட்சியமாக உள்ளது.
கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்?
பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாக உள்ளன. 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள். கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை.
இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவித்தே ஆக வேண்டும். முஸ்லிம் மக்கள் வாழ தெரிந்தவர்கள். அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை. அவர்களின் உரிமைகளை பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் செழித்து காணப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்க பெறவில்லை என்பதோடு எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்கு உரிய விடயங்கள் ஆகும். இந்நிலைமையில்தான் முஸ்லிம்களினதும், முஸ்லிம் பிரதேசங்களினதும் மேம்பாடு தங்கமாகவும், தமிழர்களினதும், தமிழ் பிரதேசங்களினதும் மேம்பாடு தகரமாகவும் இருப்பதை தெட்ட தெளிவாக கிழக்கு மாகாணத்தில் கொண்டு கொள்ள முடிகின்றது.
கேள்வி:- கருணா அம்மானுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள்?
பதில்:- அவர் ஒரு நல்ல மனிதர், திறமைசாலி என்பதை அவருடன் பணியாற்றிய காலத்தில் நான் கண்டு கொண்டேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை அவர் பிரதி அமைச்சராக இருந்து செய்து கொடுத்து இருக்கின்றார். அவற்றை அவர் வெளிப்படுத்தவும் இல்லை, அவை வெளியில் வரவும் இல்லை. என்னை அவர் மீது பேராச்சரியத்துக்கு உட்படுத்திய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஒரே நாளில் 71 தமிழர்களுக்கு சுகாதார உதவியாளர் பதவியை பெற்று கொடுத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களால் இவ்வாறான ஒரு சாதனையை செய்ய இயலுமா? என்று வினவுகின்றேன்.
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைப்பாளராக இணைந்தது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை பெற்று கொடுக்க முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே நம்புகின்றார். இந்த நம்பிக்கையில்தான் அடுத்த வருடம் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் மிக மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க உள்ள நன்மைகளை வேறு இடை முகவர்கள் மூலமாக அன்றி நேரடியாகவே பெற்று கொடுப்பது உசிதமானதும், சால பொருத்தமானதும் என்பது எனது நிலைப்பாடு ஆகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லவர். எளிமையானவர். நேர்மையானவர். இதனால்தான் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொடி கட்டி பறக்கின்றது. இவர் தலைமையிலான சுதந்திர கட்சியில் அமைப்பாளராக நான் செயற்படுவது குறித்து பெருமையும், பெருமிதமும் அடைகின்றேன்.
கேள்வி:- அண்மையில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை ஆட்சி குறித்து என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- பெயர் குறிப்பிட்டு சொல்லத் தக்க நன்மைகள் எவையும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை ஆட்சி மூலமாக தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. தமிழர்களின் பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகள் சோபிக்கவில்லை. தமிழர்கள் இருவர் அமைச்சு பதவிகளை வகித்தார்கள். ஆயினும் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்று தந்த அடைவுகள் வெறும் பூச்சியங்கள்தான்.
கேள்வி:- காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளராக இருந்து நீங்கள் ஆற்றிய சேவைகள் குறித்து கூறுங்கள்?
பதில்:- நான் உப தவிசாளராக பதவி வகித்த காலத்தில் எனது பங்கு, பங்களிப்பு ஆகியவற்றுடன் காரைதீவு பொது நூலகம், காரைதீவு பொது சந்தை, காரைதீவு ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன அமைத்து எமது மக்களுக்கு கொடுக்கப்பட்டன. நான் எத்தனையோ பொது பணிகளை உப தவிசாளராக இருந்து எமது மக்களுக்கு செய்து கொடுத்தபோதிலும் இவை மூன்றையும் அமைத்து கொடுக்க முன்னின்று உழைத்ததில் எனக்கு ஆத்ம திருப்தியும், மன நிறைவும் உள்ளன. பொது பணிகளுக்காக பல சந்தர்ப்பங்களில் எனது சொந்த நிதியை செலவு செய்திருக்கின்றேன்.
கேள்வி:- எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுகின்ற எண்ணம் உங்களுக்கு உள்ளதா?
பதில்:- வருகின்ற தேர்தல்களில் வேட்பாளராக நிற்பதா? இல்லையா? என்பது குறித்து நான் இன்னமும் எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லை. எனது கட்சி தலைமை எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப்பட்டு செயற்படுவேன். அதே நேரம் எனது மக்களின் விருப்பங்களை உணர்ந்து செயற்படுபவனாகவும் இருப்பேன்.
கேள்வி:- தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில்:- தமிழ் மக்கள் இனி மேலாவது ஆவேச பேச்சுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு அவற்றை பெற்று தர கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வருகின்ற தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும் என்று விநயமாக கேட்டு கொள்கின்றேன்.