அருமையான திட்டம்!

“அட்சய பாத்திரம்” என்ற பெயரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சமுதாய குளிர்சாதன பெட்டியை மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் நேற்று (17.10.2017) மாநகராட்சி ஆணையர் டாக்டர். அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த குளிர்சாதன பெட்டியில் நம் வீட்டில் சமைத்து மீதமான உணவு பொருட்கள், (கெட்டுப்போனது அல்ல) பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் போன்றவைகளை இங்கு கொண்டு வந்து வைக்கலாம்.

குளிர்சாதன பெட்டிக்கு அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உபயோகப்படுத்திய நல்ல நிலையில் உள்ள துணிகள், காலணிகள், புத்தகங்கள் போன்றவைகளை கொண்டு வைக்கலாம்.

இந்த பொருட்களை வீதியோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மாற்றுதிறனாளிகள் இதை எடுத்துக்கொள்வார்கள்.

என்னென்ன பொருட்கள் வைக்கலாம் என்னென்ன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற தகவல் அதில் எழுதப்பட்டுள்ளது. எதுக்காக என்றால் நம்முடைய மக்கள் தங்களுடைய வீட்டில் எது குப்பையாக கிடக்கிறதோ அதை கொண்டு போய் இல்லாவர்களுக்கு கொடுப்பதை பெருமையாக நினைப்பார்கள். அதை தவிர்க்கவே இந்த தகவல் பலகை. முதலில் ஒரு முறை சென்று அந்த தகவல் பலகையை படித்து விட்டு பின்னர் வீட்டில் இருந்து பொருட்களை கொண்டு செல்லுங்கள்.

சரக்கு அடிக்கிறவங்களுக்கு சைடு டிஷ் வச்சிருக்காங்க, சோம்பேறிகளை உருவாக்குறாங்கன்னு விமரிசனங்கள் அந்த இடத்தில் எழுந்தது.

இலவச ஆலோசனைகள் டன் கணக்கில் நம்ம ஆட்கள் கொட்டுவார்கள். ஆனால் ஒரு நல்ல திட்டத்தை சொல்லுங்கள் என்றால் அந்த இடத்தில் இருந்து காணாமல் போவார்கள். திட்டத்தை செயல்படுத்த எவ்வளவு பூர்வாங்க வேலைகள் பார்க்க வேண்டியதுள்ளது என்பது செயல்பாட்டாளர்களுக்கு தான் தெரியும். அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை திட்டத்தை தொடர்ந்து கொண்டுசெல்லும் போது படிப்படியாக சரி செய்யப்படும்.

ஊரில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை முதலில் வரவேற்க கற்றுக்கொள்வோம்.
நல்ல விசயங்கள் தானாகவே நடக்கும்.

வாழ்த்துகள் ஆணையர் அவர்களே !

( இந்த திட்டம் ஏற்கனவே திருநெல்வேலி பகுதியில் செயல்பாட்டில் உள்ளது )

(சமுத்திரக்கனி)