தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!

எனக்கு புரியாத விடயத்தில் ஒன்று, யார் தீர்க்கதரசி என்பதே. காரணம் தான் வாழ்ந்த காலத்து யதார்த்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு கவிபாடிய எட்டயபுரத்து ஏந்தல், மகா கவி பாரதி பாடிய கவிதை. அவரின் ‘’சிந்து நதி இன்மிகை’’ பாடலில் மொத்த இந்தியாவையும் நதிநீரால், பண்டமாற்றால் மட்டுமல்ல சிங்கள் தீவையும் சேது பாலம் கொண்டு இணைக்க விரும்பியவர். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஏந்தல் செய்யாதவர் இன்று செய்யும் சிறுமதி செயல் கண்டு சித்தம் கலங்குகிறது.

சிறுமதி படைத்த காரியவாதிகள் செயலால் காவிரி நீர் திறப்பு கர்நாடகத்திலும் தமிழகத்திலும் தீயை பற்ற வைத்திருக்கிறது. யார் தமிழன்? யார் கன்னடன்? என்ற கேள்வி, நாம் திராவிடர் என திராவிட இயக்கம் தொடங்கிய பெரியாரை கேள்விக் கூண்டில் நிறுத்துகிறது. அன்நியனை விரட்ட ஒன்றுபட்ட இவர்கள் இன்று வேறுபட்டு நிற்றல் நியாயமா? என்ற கேள்வி கேட்க யாரும் அற்ற நாறிப்போன நிலையில், லாரிகளும் பஸ்களும் தீயில் எரிய அப்பாவி ஓட்டுனர்/பயணிகள் அடிவாங்கி அழும் நிலை.

இரவில் கிடைத்த சுதந்திரத்தை பகலில் தொலைத்ததா இந்தியா என்ற கேள்வி எனக்கு இன்று வரை உண்டு. காரணம் இந்திய பாக்கிஸ்தான் பிரிவின் போது நடந்த பாதக செயல்கள். இரு பகுதியினரும் செய்த அராஜகத்துக்கு அண்ணல் என போற்றப்பட காந்தி சொன்ன தீர்வு பாதிக்கப்பட்ட பெண்களை மணக்க இந்திய இளைஞர் முன்வரவேண்டும் என்பது மட்டுமே. தலையில் நீர் ஊற்றினால் தோஷம் நீங்கும் என்ற பிராமணிய நியதிக்கும் இதற்கும் வேறுபாடு காணும் அறிவு எனக்கு இல்லை.

காந்தியார் சொன்னதால் தாலி பாக்கியம் பெற்ற பாதிப்புற்றோர் அவரைபோற்றி புகழ்ந்தாலும் என்னால் அது முடியவில்லை. வீட்டாளை வேட்டையாடிய நாயை வீழ்த்துவேன் என வீறு கொள்பவன் காலம் கனியும் வரை காத்திருப்பான். தன் நிர்வாகத் தேவைக்காக ஒன்று படுத்திய பாரதத்தை தான் வெளியேறும் போது தன் பிரித்தாளும் தந்திரத்தால், இந்தியா, பாக்கிஸ்தான் என பிரித்த வெள்ளையர்  சதிச்செயலுக்கு ஜின்னாவை திட்டி பயன் இல்லை. விடுதலை பெற்ற பின்பு மூன்று தடவைகள் தம்முள் அவர்கள் நடத்திய யுத்தங்கள் அவர் தம் ஆள்மன விருப்பையே வெளிப்படுத்தின.

ஒன்றாய் இருந்த சென்னை மாகாணம் கூட மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் தொடங்கிய உரசல், திருப்பதி கோவிலில் தொடங்கி கிருஸ்ணா, முல்லை பெரியாறு, காவிரி என கண்ணீர் வடிக்கிறது. ஆந்திரா பிரிந்த போது திருப்பதி தமக்கே என சொன்ன தமிழகத்திடம் திருப்பதியை தருகிறோம் பதிலாக சென்னையை எமக்கு தரவேண்டும் என்றது ஆந்திரா. கூடவே திருத்தணியும் எமக்கே என்று உரிமையும் கோரியது. மா போ சி நடத்திய போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. துறைமுக நகரான சென்னையை தமிழகம் தக்கவைக்க, திருப்பதி ஆந்திரர் வசமானது.

மன்னர் ஆட்சிக்காலத்து போட்டியும் பொறாமையும் மக்கள் ஆட்சி காலத்திலும் தொடர்வது, மனிதன் என்றும் ஒரு அரசியல் மிருகம் என்ற அரிஸ்டோட்டலின் கூற்றை பறை சாற்றுகிறது. அன்று திருப்பதி சாமியை பணயம் வைத்தவர்கள் கிருஸ்ணா நீரை தடுத்து, தமிழகத்தை கோவிந்தா போடவைத்தனர். மனிதஇசம் பற்றி பேசும் கம்யூனிஸ்டுகள் மாக்சிசவாதிகள் ஆளும் கேரளம் முல்லை பெரியாறு அணையை உயர்த்தி தமிழகத்தை தண்ணீருக்காக கண்ணீர் விட செய்கிறது. தமிழகத்து அரிசியும் பருப்பும் முட்டையும் கோழியும் கேரளத்துள் வரலாம் ஆனால் முல்லை பெரியாறு நீர் மட்டும் தமிழகம் செல்லக்கூடாது என்ற மதி கேட்ட மாக்சிசவாதிகள் கொள்கை, ஏட்டுச் சுரக்காயை போன்றது.

அயலவன் மீதே பிலாக்கணம் பாடி எம் இயலாமையை மூடி மறைக்க நான் விரும்பவில்லை. ஆந்திரா தரவில்லை, கேரளா தடுக்கிறது, கன்னடம் எரிக்கிறது என கூறும் தமிழகம், மழை மேகங்கள் கருக்கூட்டாத பாலைவன பிரதேசமா? என்ற கேள்விக்கு அண்மையில் சென்னையே நீரில் மிதந்த காட்சிகள் தான் சாட்சி. ஆக பருவமழை பெய்கிறது ஆனால் பல தடவைகள் காலம் முந்தி அல்லது பிந்தி பொழிகிறது. அரசர்கள் மந்திரியாரே மாதம் மும்மாரி பெய்ததா? என கேட்ட வசனம் இன்று  நாடக மேடையில் மட்டும் பேசப்படுகிறது. காரணம் அன்று அரசர் காலத்தில் காடுகளில் மட்டுமல்ல பாதையோரங்களிலும் பெரு மரங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டன. ராஜபாட்டையில் குதிரையில் பயணிக்கும் எவரும், ஓய்வுக்காக சில மணித்துளிகள் பாதையோர மரநிழலில் தங்கிச் சென்றதாக கல்கி, சாண்டில்யன் போன்ற சரித்திர நாவலாசிரியர் பதிவிட்டுள்ளனர்.

இன்று அபிவிருத்தி எனக்கூறி அதிவேக காப்பற் வீதிக்காகவும், அரசியல் அதிகாரம் கொண்டவர் தம் மடியை நிரப்பவும் பாதையோர மரங்கள் மட்டுமல்ல காட்டு மரங்களும் கபளீகரம் செய்யப்பட்டு, மரம் நடுவோம் மழை பெறுவோம் என, சந்திக்கு சந்தி விளம்பரம் வைக்கும் நிலையால் வந்த வினை தான் காலம் முந்திய, பிந்திய மழை. முந்தியதோ பிந்தியதோ அதை தேக்கி வைக்கும் சிந்தை கூடவா தமிழகத்துக்கு இல்லை. கரிகாலனுக்கு பின் வந்த காமராஜர் காலத்துடன் அணைகள் கட்டும் செயல் அம்பேல். மழை நீரை சேமிக்க புதிதாக எந்த குளங்களும் உருவாகவில்லை. இருக்கும் குளங்களும் தூர்வாரப்படவில்லை. அப்படி பராமரிப்பு செய்திருந்தால் அண்மையில் சேப்பாக்கம் நீரில் சென்னை மிதந்திருக்காது.

புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கையுடன் மோத முடியாது என்பதை, பூகம்பங்களும் சுனாமிகளும் எமக்கு அறிவுறுத்தும் அதே வேளை, பழையதை பேணலும் புதியதை புகுத்தலும் என்ற நிலைக்கு தமிழகம் வந்தால் கேரள, கன்னட, ஆந்திர அச்சுறுத்தலில் இருந்து நிச்சயம் மீள முடியும். கூடன்குளம் மின் நிலையத்தை விட கூவம் ஆறு முன்னிலைப்பட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஆய்வு வேண்டும். வீட்டு கூரை மேல் பெய்யும் மழை நீரை சேமிக்கும் அதே வேளை, நாட்டில்  பருவத்துக்கு முந்தியோ பிந்தியோ பெய்யும் மழையை சேகரிக்கும் செயலை அரசுகள் முன்னெடுக்க வேண்டும். எத்தனை காலம் தான் அயலவன் மேல் பிழை போட்டு ஏழை விவசாகிகளை ஏமாற்ற சுயநல அரசியல்வாதிகள் முயல்வர் என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கும், சென்னையில் உலக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அத்தனை சொகுசு கார்களையும் தம்வசம் கொண்ட தமிழக சினிமா உலகு, ஏர் பிடிப்பவன் பிரச்சனைக்காக ஒருநாள் உண்ணாவிரதம், ஒரு கண்டன அறிக்கை என தன் கடமையை செய்யும். இவர்கள் வாழும் வாழ்விற்கு காரணமானவன், தன் அம்மணத்தை மறைக்க சிறு துணியை கச்சையாய் அணிய, திரையில் கசங்காத ஆடை அணிகளுடன் வரும் கதாநாயாகன் ‘’காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என பாடியே கைத்தட்டலை பெறுவான். மழையாய் பொழிந்த நீர் கடலில் கலப்பதை அணை கட்டி தடுக்கவோ, குளம் வெட்டி தேக்கவோ எந்த பங்களிப்பும் செய்யாது வெள்ளித்திரையில் வீரவசனம் முதல் காதல் சரசமும் செய்பவனுக்கு, சாதம் செய்ய தேவையான அரிசி உற்பத்தி செய்பவன் அடிவயிற்று பசி புரியாது. அவனது அலட்சிய சொகுசு வாழ்வு அவனுக்கு அதை புரியவிடாது.

சிந்து நதியில், நிலாகாயும் வேளையில் கேரளத்து பெண்டிரை வர்ணித்து, சுந்தர தெலுங்கில் கவி பாடி வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்ய விரும்பிய, சிங்கள தீவுக்கும் பாலம் அமைக்க பிரியப்பட்ட பாரதி, தீர்க்கதரசிதான் என்ற தெளிவு இப்போது வந்துவிட்டது. காரணம் காவிரி நீரால் எரியும் கன்னட தமிழக காட்சிகளை பார்த்தபோது என்னை உறுத்திய ஒரு காட்சி. இராமேஸ்வரம் சுற்றுலா வந்த கன்னட பக்தர்களை தமிழக வீரத் தமிழர், எம் தமிழனை கன்னடத்தில் தாக்கிய வினைக்கு எதிர் வினையாக, காவிரி தமிழ் நாட்டுக்கே என கூவும் படி குண்டாந்தடி கொண்டு தாக்கிய காட்சி. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் என்று அன்றே பாடிய என் முப்பாட்டன் தீர்க்கதரசிதான். போற்றுகிறேன் அவனை. வணங்குகிறேன் அவன் வாழ்வாங்கு வாழந்த??? திசை நோக்கி.

நான் பிறந்த மண்ணை விட்டு வெளியேறி எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர் நாட்டில் என் வினைப்பயனால் இன்று வாழ்ந்தாலும், என் எண்ணமும் சிந்தனையும் நான் மீண்டும் சென்று என் தாய் மண்ணில் வாழும் விருப்பை என் ஆள் மனதுள் வேரோடி விருட்சமாய் வளர்ப்பதால், தாய் நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் நடக்கும் சீர்கேடுகள் சினத்தை தருகிறது. தமிழ்நாடு என் தொப்புள் கொடி உறவு எனவேதான் நானும் பொங்குகிறேன் என, மற்றவர் போல் பொய்யுரைக்கும் நிலையிலும் நான் இல்லை. காரணம் அன்று வெள்ளையரால் தம் பணப் பயிருக்காக தமிழகத்தில் இருந்து ஏமாற்றி கூட்டி வரப்பட்ட தமிழரை கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், இந்தியாகாரன் என விளித்து, இன்று மலையக தமிழர் என பிரிவினை பேசுபவரின் வடக்கில் பிறந்து, வன்னியில் வளர்ந்து, கிழக்கில் திரிந்து, தெற்கில் வாழ்ந்த நான் கூட நடிப்பு சுதேசியா என்ற கேள்விக்கு இன்று வரை விடை இல்லை.

வயித்துவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே என்ற கேவலமான சொல்லாடல் அன்று வட இலங்கையில் இருந்தது. யார் வடக்கன் என்றால் பதில் தோட்டக்காட்டு தமிழன். இன்று தொப்புள் கொடி உறவு பற்றி பேசும் பெருமகன்கள் அறியாத ஒரு விடயத்தை அல்லது அறிந்தும் அறியாதது போல் மறைத்த இந்த விடயத்தை போலவே பல உண்மைகள் எம் இனத்துள் புதைந்து போனது. அவற்றை கிளறுவோம், எம் இளம் சந்ததி எது சரி எது பிழை என அறிந்து கொள்ளட்டும். தமிழ் பரியாரியார் போல தமக்கு தெரிந்த நாட்டு வைத்திய முறையை தம் பரம்பரை மட்டும் அறிந்து கொள்ள போதித்த நிலைவிடுத்து, எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்திட, தெரிந்துகொள்ள நடந்தவை அனைத்தையும் பொதுவில் வைப்போம். பகிரங்கப்படுத்துவோம்.

– ராம் –