தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.  1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர். இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகும். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலங்கேணியிலிருந்து 12 கி.மீ.தூரத்திலுள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்குச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை.

1985.11.17 ஆம் நாள் அதிகாலை 5.00 மணியளவில் தனது மாட்டு வண்டியில் தனது இளைய மகன் மற்றும் எருமை மாடுகளை மேய்ப்பதற்காக தன்னுடனிருக்கும் பெடியன் ஆகியோருடன் இராசையா கணேசபிள்ளை புறப்பட்டு செல்லுகின்ற போது காலை 5.10 மணியளவில் ஆலங்கேணியிலிருந்து மாவுசாப்பா துறைவழியால் செல்வதற்காக 2 கி.மீ.தூரத்திலுள்ள பூவரசந்தீவில் அப்போது இஸ்மெயில் என்பவரது தேநீர்க்கடை இருந்த இடத்திற்கு முன்னால் படையினர் மாட்டுவண்டிலை நிறுத்தினர். பெயரைக் கேட்டவுடன் வண்டிலில் இருந்து இறக்கி ஓர் இடத்தில் அமரச் செய்தனர். மகனும் மாடு மேய்கும் பெடியனும் சிறுவர்களாக இருந்தமையினால் அவர்களை படையினர் கண்டுகொள்வில்லை அவர்களைத் துரத்தி விட்டனர். இருவரும் மாட்டுப்பட்டி இருக்குமிடத்தை நோக்கி சென்றனர். கணேஸ் என்றழைக்கப்படும் கணேசபிள்ளை விடுதலைப் புலிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்பவர். சரியான ஆதாரங்களுடனேயே படையினருடன் கூடவே வந்த பசீரினால் தகவல் வழங்கப்பட்டதுடன் பசீரும் கூடவே வந்திருந்தார். பசீர் முன்னிலையில் கணேஸ் கைதுசெய்யப்பட்டு காலையில் ஆலங்கேணிக்கு கொண்டுவரப்பட்டார். சுற்றிவளைப்பு பி.ப.3.00 மணி வரை நடைபெற்றது. சுற்றிவளைப்பு நிறைவில் 28 பேர் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய ஊர்களில் இருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் மாத்திரம் ஈரோஸ் போராளி. 21 பேர் பூசா முகாமிற்கு அனுப்பப்பட்டனர். கணேசபிள்ளை, சீனிக்குச்சியர் என்றழைக்கப் பட்ட தங்கராசா சீந்தாத்துரைமகன் உட்பட ஏழுபேர் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டனர். உண்மையில் அவர்கள் சுரேஸ் காசிமினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.
இந்தச் சுற்றிவளைப்பு தமிழ் மக்களிடையே உண்மையில் அக்காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் உளவியல் ரீதியான பாதிப்பினையும் ஏற்படுத்தியது. விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தி கைது மூலம் இவ்வூர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இச்சுற்றிவளைப்பில் முஸ்லிம் ஊர்காவல்படையினர் ஈடுபட்டதனால் முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் ஏற்பட்டது. முஸ்லிம் மக்களை விரோதிகளாகப் பார்க்கும் நிலை தோன்றியது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குடும்பமாக ஈச்சந்தீவிலிருந்த காளியப்பர் குடும்பம் விளங்கியது. விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் தங்கி உணவு உண்ணும் இடமாக அக்காலத்தில் அவரது வீடு விளங்கியது. 1986 இன் முற்பகுதியில் அதிகாலை வேளையில் சுரேஸ் காசிம் தனது சகாக்களுடன் காளியப்பர் வீட்டுக்குச் சென்று அவரது “கன்னி“ என்ற பெயரையுடைய மகளை அவர்களது வீட்டுச் சுவரோடு சேர்த்து அவரது மார்பகங்களை இலக்கு வைத்து சுட்டுக்கொன்றார்.
அன்றைய நாள் தருமலிங்கம் மற்றும் கறுத்த ஐயா என்றழைக்கப்பட்ட மயில்வாகனம் ஐயா ஆகியோரும் அப்பம்தின்னி அப்பா என்றழைக்கப்பட்ட இராசேந்திரம் அவர்களது தேநீர்க்கடைக்கு முன்னால் (தற்போது ஆலங்கேணி நூலகம் இருக்குமிடத்தில்) சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இறவடிச்சேனை என்ற இடத்தில் 1986 இல் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இருந்த புலேந்திஅம்மான் என்பவரால் முன்பள்ளி அமைக்கப்பட்டது. அப்பள்ளியினை அமைப்பதற்குத் தேவையான நிதியுதவியினை கந்தையப்பாவின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். மாலை வேளையில் எதிர்பாராத விதமாக இறவடிச்சேனைக்கு சுரேஸ்காசிம் அணியினர் வந்து கந்தையப்பாவின் மூத்த மகளான கௌரி என்பவரை வன்புணர்வுக்குட்படுத்தியதோடு அவரைச்சுட்டும் கொன்றனர்.
இந்நடவடிக்கைகளில் முஸ்லிம் ஊர்காவல்படையினரும் இணைந்திருந்தனர். பசீருடன் வேறு சிலரும் பங்கேற்றிருந்ததனை தமிழ் மக்கள் தம் கண்களினால் கண்டனர். இதனால் இப்பகுதியில் வசித்த தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. முஸ்லிம்கள் தம்மைக் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரசினால் ஊதியம் பெறுகின்றார்கள் என்ற எண்ணம் மறைக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது எதிர்ப்பு ஏற்பட்டமை அரசிற்கு கிடைத்த வெற்றியாகும்.