தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 04)

(Thiruchchelvam Kathiravelippillai)

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எண்பதுகளின் முன்னர் குறிப்பாக 1984 ஆம் ஆண்டின் முன்னர் மிகவும் அன்னியோன்னிய உறவுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்களின் திருமண வீடுகளில் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்வதும் முஸ்லிம் மக்களின் திருமண வீடுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும சாதாரண விடயங்கள். அனேகமான நல்லது கெட்டதான நிகழ்வுகள் இரு சமூக மக்களும் கலந்தே நடத்தினர். பிட்டும் தேங்காய்ப் பூவும் போல என எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் பிரதான பொருண்மியம் நெற்செய்கையுடனான விவசாயமாகவும் மீன்பிடி அடுத்ததாகவும் காணப்பட்டது காணப்படுகின்றது. திருக்கோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும்பான்மையான தமிழர்கள் நெற்செய்கையிலும் அம்பாறை மாவட்டத்தில் பெரம்பான்மையான முஸ்லிம் மக்கள் நெற்செய்கையிலும் ஈடுபடுகின்றார்கள்.
அக்காலத்தில் நெற்செய்கைக்குத் தேவையான பிரதான உபகரணமாக மண்வெட்டிகள் “கம்மாலைகளில்“ நெற்செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயாரிப்பார்கள். (மண்வெட்டியை தோய்ந்து சேற்று மண்வெட்டியாக மாற்றுதல்) கம்மாலைகள் அனேகமாக முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டன. இச்சிறிய செயற்பாடானது தமிழ்பேசும் மக்களின் உறவிற்கு பலமான காரணியாக திகழ்ந்தது. அனைத்து மக்களும் கம்மாலைக்குச் சென்றார்கள். அந்த இடங்கள் அந்நாளில் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் கூடுகின்ற இடமாகவும் ஐக்கியத்திற்கும் உறவு மேம்படலுக்குமான இடங்களாகத் திகழ்ந்தன.
ஒரு தமிழ் ஊருக்குப் பக்கத்தில் ஒரு முஸ்லிம் ஊர் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களது வீடுகளுக்கு முஸ்லிம் மக்கள் செல்வது வழமையானது. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களது வீடுகளுக்குச் சென்றாலும் முஸ்லிம் மக்களிடம் ஒன்றுகூடுகின்ற தன்மையும் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களை வீடு தவிர்ந்த இடங்களில் மகிழ்ச்சியாக செலவிடும் உயர்ந்த பண்புகள் இருப்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இன்றும் முஸ்லிம் பிரதேசங்களில் மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி பேசுவதும் இளைஞர்கள் விளையாடுவதும் சாதாரண நிகழ்வுகள். தமிழ் மக்களிடையே ஒன்றுகூடல் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.
தமிழர்களின் வயல்நிலங்களில் தொழிலாளர்களாக அநேகமாக முஸ்லிம் மக்கள் தொழிலாற்றினர்.
முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியில் தமிழ் மக்கள் அளவிட முடியா பணியாற்றினர். எவ்வித வேறுபாடுகளுமின்றி தமது தொழிலை ஆற்றினர். இன்றும் அவ்வாறு பணியாற்றியவர்களை முஸ்லிம் மக்கள் நினைவுகூருவது அவதானிக்க முடிகிறது.
கிண்ணியா பிரதேசம் இது சிறந்த எடுத்துக்காட்டாகும். கிண்ணியா துறையடியில் இருக்கும் ஊற்றடிப் பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில் தமிழ் மக்களே செறிந்து வாழ்ந்தார்கள். அங்கு வாழ்ந்த முருகுப்பிள்ளை வாத்தியார் என்றழைக்கப்பட்ட அமரர் தம்பர் காசிநாதர் அவர்களே கிண்ணியாவின் முதலாவது ஆசிரியர் ஆவார். 
1930 ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்ற அவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகி 1945 இல் பதவி உயர்வுபெற்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி தற்போது உள்ள இடத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் கலவன் வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகள் அதிபராக பணியாற்றினார். இப்பாடசாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் பாடசாலையாகவும் பெண்கள் பாடசாலையாகவும் இயங்கின. பெண்கள் பாடசாலைக்கு அவரது துணைவியார் அமரர் இரட்ணபூபதி செல்லம்மா அவர்கள் அதிபராகவும் பணியாற்றினார்.
அக்காலத்தில் கிண்ணியாவில் கல்வி மட்டம் குறைந்திருந்தது. இவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இங்குள்ள மாணவர்களுக்கு எப்படியாவது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டி கற்க வைக்க வேண்டும் என்பதில் மிகவும் தியாகத்தோடு பணியாற்றினர். கல்வி கற்க கூடிய வயதுள்ள மாணவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை அழைத்து வந்து கற்பித்தனர்.
வறுமை காரணமாக பலர் அக்காலத்தில் கல்வியை தொடரமுடியாது இடையில் கைவிட்டனர். எப்படியாவது அவர்களும் கல்வியினைப் பெற்றுவிட வேண்டும் எனும் நோக்கில் முருகுப்பிள்ளை வாத்தியார் தனது சொந்தப் பணத்தில் உணவு வழங்கி மாணவர்ளைக் கற்க வைத்தார். இவரது தோளில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதனுள் “வாட்டு ரொட்டி, ரஸ்க், பல்லி மிட்டாய்” போன்ற உணவுப் பொருட்கள் இருக்கும். மாணவர் நிலையறிந்து அவற்றை அவர்களுக்கு அவர் கொடுத்து மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவந்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்டன. ஐக்கியமான உறவுகள் பலமாக இருந்தமையினால் யாருமே மதமாற்றத்திலும் ஈடுபடவில்லை. அதற்கான தேவையுமிருக்கவில்லை. 
திருக்கோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை தோப்பூர் பிரதேசங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்திலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு யார் தமிழர் யார் முஸ்லிம் என பிரித்தறியா முடியா நிலையில் இருந்தன. இப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களது பேச்சு மொழிநடை தமிழ் மக்கள் போன்றே இருந்தன. தற்போதும் புல்மோட்டை முஸ்லிம் மக்களில் அதனைக் காணலாம்.
இவ்வாறு பலமான உறவுகளால் கட்டிக்காக்கப்பட்டு பேணப்பட்டு வந்த உறவுகளே தற்காலத்தில் இரு சமூகத்திலுமுள்ள குறிப்பாக இளைஞர்களால் விரோதிகளாகப் பார்க்கப்படுகின்ற நிலையிலும் இரு சமூகங்களில் செயற்பாடுகளில் ஒருவரையொருவர் ஐயத்துடன் நோக்குகின்ற நிலையும் காணப்படுகின்றது.
(அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப்படையின் திட்டமிட்ட செயல்கள் எவ்வாறு இரு சமூகங்களையும் துண்டாடின எனப் பார்க்கலாம்)