பேராசிரியர் ஹஸ்புல்லா

பேராசிரியர் ஹஸ்புல்லா இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவு “எல்லாரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு” என வழ்ந்தவர். மெல்லிதயம் கொண்ட மனிதர். வன்மம் பகை உணர்வுகளுக்கு இடமளியாமல் வடக்கு முஸ்லீம்களின் பாடுகளை தொடர்ச்சியாக வெளிபடுத்திவந்ததோடல்லாமல் அவர்களுக்கு கண்ணியமான இருப்பை ஏற்படுத்த பாடுபட்டவர். வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காகவும் சமூகங்களிடையே புரிதலுக்காகவும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர்.

உலகறிந்த கல்வியாளரான ஹஸ்புல்லா சமூகப்பிரக்ஞை கொண்ட அபூர்வமான மனிதர். இத்தகைய மனிதர்கள் சமூகத்தில் அரிதிலும் அரிது, இவர்களைப் புரிந்துகொள்ள முடியாத பிரக்ஞையற்ற அவலம் எமது காலத்தில்.திருகு தாள பேர்வழிகள் கண்டுகொள்ளபடும் அளவிற்கு இதகைய மனிதர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை. அந்தளவிற்கு சமுக வெளி செல்லரித்து போய்க்கிடக்கிறது. இந்திய சுதந்திர இயக்கத்தில் கான் அப்துல் கபார்கான் என்றொரு மனிதர் இருந்தார். எல்லைகாந்தி என்று அழைப்பார்கள்.இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடு பட்டவர் இச்சிறு குறிப்பை எழுதும் போது அவரின் ஞாபகம் .

திரு ஹஸ்புல்லா மாகாணங்களின் எல்லை நிர்ணய குழுவில் அங்கத்தவராக இருந்தவர். அந்த எல்லை நிர்ணயம் பாராளுமன்றத்தில் மரணித நாளில் அவரும் மரணித்தார். ஏனோ அவரின் மரணச் செய்தி மிக தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். அதுவும் அவலம் தான். திரு ஹஸ்புல்லா அவர்களின் மறைவு இன நல்லுறவு தொடர்பில் இன சமூகங்கள் ஆழமாக பிழவுண்டுள்ள நிலையில் ஒரு இக்கட்டான காலகடத்தில் ஒரு பாரிய வெற்றிடமே. அவரின் இன உறவுகள் தொடர்பான அணுகுமுறை முன் உதாரணமானது. அத்தகைய வழிமுறையை பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் அர்த்தமுள்ள அஞ்சலியாகும்.