தமிழ்- முஸ்லிம் விரிசலுக்கு அரைவேக்காடு அரசியல்வாதிகளே காரணம்

மறுப்பவர்கள் விட்டுவிட வேண்டியதுதான்” என்று சமகாலப் போக்குகளையிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மூதறிஞரும் நாடறிந்த எழுத்தாளரும் சமாதான ஆர்வலருமான ஓட்டமாவடி எஸ்.எல்.எம். ஹனீபா.

தற்போது 77 வயதை எட்டிப் பிடித்திருக்கும் மூதறிஞர் ஹனீபா, இன நல்லிணக்க சமாதான சௌஜன்ய சகவாழ்வுக்கான தனது ஆதங்கங்களை ‘தமிழ்மிரர்’ வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்.

“நான் தமிழ்-முஸ்லிம் உறவை, உயிர்ப்பூட்டி வளர்த்தில் வாழும் சாட்சியமாக இருந்து கொண்டிருக்கின்றேன். அது எனக்கு மன நிறைவைத் தருகிறது. நாங்கள் தாய் வழியாலும் தாய் மொழியாலும் தமிழர்கள்தான். அதனால் நாம் அடித்துக் கொள்வது அறிவற்ற செயல். தமிழ்-முஸ்லிம் உறவு என்பது, எனது பள்ளிக் கூட வகுப்பறையிலிருந்து ஆரம்பமாகின்றது.

“நான் படித்த பாடசாலை, அது முஸ்லிம் ஊருக்குள் நடுவில் இருந்த போதிலும் ‘சௌந்தரராஜா வாத்தியார்’தான் எனது தலைமை ஆசிரியர். வகுப்பு முதல் நாளே, சரணவன் என்ற சக மாணவன்தான் எனக்கு கூட்டாளி. அப்பொழுதெல்லாம், எங்களுக்குத் தமிழ்-முஸ்லிம் உறவுபற்றிப் போதிக்கவில்லை. அது இயல்பாக வளர்ந்த ஒன்று.

“1952 காலப்பகுதி, ஓட்டமாவடி அரசினர் வித்தியாலயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவாக எங்களது பாடசாலைக் காலம் முப்பரிமாணம் எடுக்கின்றது. செந்தமிழும் சிங்களமும் சேர்ந்து, எங்களது பாடசாலை வாழ்க்கையை கலகலப்பாக்கியது. அதனால் வன்மம் இருக்கவில்லை. சில சிறுசிறு சம்பவங்கள் இயல்பாக ஏற்படும்.

அப்பொழுதெல்லாம், ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி, சண்டை பிடித்த இரண்டு பேரையும் தோப்புக் கரணம் போட வைத்து, சமாதானம் செய்து வைப்பார்கள். அது வன்மமாக வளர்ந்து வர வாய்ப்பளிக்கவில்லை. கன்னத்தில் ஆளுக்கோர் அறை விட்டு, ‘குழப்பம் உண்டாக்குகிறீர்களா’ என்று கடிந்து கொள்வார்கள். அதோடு தலையைச் சொறிந்துகொண்டு, கந்தசாமியும் ஹனிபாவும் கைகோர்த்துக் கொண்டு போய் விடுவார்கள். பகையை யாரும் ஊட்டி வளர்த்ததில்லை. உடலில் ஓர் அங்கமாகத்தான் சமூக உறவு இருந்தது. இது அன்றைய பெரியவர்கள் செய்த நற்காரியம்.

“பாடசாலையில் தொடங்கிய உறவு ஒரு புறம் இருக்க, பின்னாள்களில் பல கலவரங்களைப் பார்த்திருக்கிறோம். கோழிச் சண்டையில் தொடங்கி, கொலைக்களம் வரை கலகங்கள் நடந்திருக்கின்றன.

“1985 இனக்கலவரம்தான் மிக மோசமான சமூகப் பிளவாக இருந்தது. அது மூதூரில் தொடங்கி பொத்துவிலில் போய் முடிந்தது. மாதக்கணக்கில் நீடித்தது. அதன் பின்னணியில் அரசியல்தான் இருந்தது. விடுதலைப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள். பொருளாதாரத்தை அழித்தொழித்தார்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகள் தொழிற்றுறைகள் துவம்சம் செய்யப்பட்டன.

“இவற்றையெல்லாம் ஜீரணித்துக் கொண்டு நான், தமிழ்-முஸ்லிம் உறவுக்காக பகீரதப் பிரயத்தனம் எடுத்து வந்திருக்கின்றேன். அது என் எழுத்துலகப் பணிக்கூடாக நடந்திருக்கின்றது. எனது கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் எனும் அரசாங்க உத்தியோகத்திற்கூடாக நடந்திருக்கின்றது. எனது சமூக சேவைச் செயற்பாடுகளுக்கூடாக நடந்திருக்கின்றது. நான் பயணித்த அரசியல் அதிகாரத்திற்கூடாக இந்த விடயத்தில் கரிசனை கொண்டு பணிபுரிந்திருக்கின்றேன்.

“எந்தச் சமூகத்தைச் சேர்ந்த எவரொருவர் தவறு செய்தாலும், எவருக்கும் அஞ்சாமல் உண்மையை இடித்துரைப்பேன். கலவரம் நடக்கும்போது, சமாதான சகவாழ்வை வலியுறுத்தும் செயற்பாடுகளில் எனது உயிரைத் துச்சமென மதித்து, கலவர பூமியிலே நின்றிருக்கின்றேன்.

“அரசியல்வாதிகளே தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கலகம் ஏற்படுவதற்கு அன்றும் இன்றும் காரணமாக இருந்துள்ளார்கள். அவர்கள் தங்களுடைய நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக இதனைச் செய்கிறார்கள்.

“ஓர் இனக் கலவரத்துக்குப் பின்னர், வாழைச்சேனையிலிருந்த ஈஸ்வரி தியேட்டரில் கூட்டம் போடப்பட்டது. அதில், யாழ்ப்பாணத் தமிழர்களும் வந்திருந்தார்கள். தமிழ்-முஸ்லிம் சமூக ஐக்கியத்தை வலியுறுத்தி வை. அஹமட் உரையாற்றினார். அது புகழ் பெற்ற உரை. அன்றிலிருந்துதான் மீண்டும் தமிழ்-முஸ்லிம் உறவு மலர்கிறது.

“முன்னாள் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் வை. அஹமட், அவர், என்னை விட கொஞ்சம் கூடுதலாக, ஆக்கபூர்வமாகச் சிந்திப்பார். தமிழ்-முஸ்லிம் உறவுக்கு அவர் ஒரு பாலமாக இருந்தார். ஆனால், பின்னாள்களில் அவரையும் குண்டு வைத்துப் படுகொலை செய்து விட்டார்கள்.

“சமீபத்தில் தமிழ்- முஸ்லிம் இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் சமாதான சகவாழ்வு விரும்பிகளும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், இன நல்லுறவு பற்றிப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு என்னையும் பேராசிரியர் மௌனகுருவையும் அழைத்திருந்தார்கள்.

“அங்கு நாங்கள் இன உறவின் அழகையும் பிரிவின் துயரத்தையும் பற்றிப் பேசியபொழுது, மனம் நெகிழ்ந்து நானும் கண்கலங்கி விட்டேன். அந்தக் கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்-முஸ்லிம் இளைஞர் யுவதிகளும் இளகிய நெஞ்சங் கொண்டவர்களும் அழுது விட்டார்கள். அப்படித்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.

“எங்களுக்குத் தாய்வழியும் தாய் மொழியும் தமிழாக இருப்பதால், தமிழ் முஸ்லிம் உறவு வாலாயமாகவே சிறப்புற அமைந்து விட்டிருக்கிறது. அன்றும் இன்றும் நான் சொல்வது ஒன்றுதான். அதாவது, தமிழர்களைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம்களோ, முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு தமிழர்களோ வாழக் கூடாது; வாழவும் முடியாது. இந்த எண்ணம் இப்பொழுது முஸ்லிம்களிடம் மேலோங்கி இருக்கின்றது. அது எனக்கு நிம்மதியைத் தருகின்றது. இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி.

“அடாவடிகளுக்கு மத்தியில், எங்களைப் போன்ற அஹிம்சைவாதிகளின் கருத்துகள் உடனடியாக எடுபடாமல் போனாலும், பின்னாள்களில் அது உதவும்; உதவியிருக்கிறது. கலவரம் நடக்கும்போது, தமிழ் – முஸ்லிம் இன ஐக்கியத்துக்காக ஒன்றுபடுங்கள் என்று நேரடியாக அரசியல்வாதிகளிடத்திலும் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

“அதேபோல, புலிகள் இயக்கம் அன்று அதிகாரத்தில் இருந்தபோது, அவர்களிடம் நேரடியாகச் சென்று கெஞ்சிக் கேட்டிருக்கின்றேன். ‘தம்பிமாரே நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கரித்துண்டினால் எழுதி கண்டிப்பான அறிவித்தல் போடுங்கள்; தமிழ்- முஸ்லிம் உறவு தானாக வரும்’ என்று; ஆனால், அவர்களும் அப்படிப்பட்ட உறவை விரும்பியிருக்கவில்லை என்பது தெரியவந்தபொழுது மனம் கனத்தது.

“எங்களுடைய தலைமுறைக்குப் பிறகு, இன உறவு பற்றிப் பேசுவதற்கோ எழுவதற்கோ யாரும் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற ஆதங்கமும் ஏக்கமும் என்னை வாட்டிக் கொண்டிருக்கின்றது.

“நான் எவ்வாறு தமிழ்- முஸ்லிம் சமூக ஒற்றுமையை நடைமுறையில் கட்டி வளர்த்தேனோ, அப்படியே எனது பிள்ளைகளும் இருக்கிறார்கள். தமிழ்- முஸ்லிம் உறவுக்காக பாடபோதனை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர் நடைமுறையில் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுது பிள்ளைகள் தானாக ஐக்கியத்தை விரும்பி, ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்குவார்கள்.

“எனவே, இந்தத் தேசத்தில் வாழ்வதாக இருந்தால், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு சிறு விசயத்திலாவது இணங்கிப் போய், ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழர்களும் முஸ்லிம்களும் அண்ணன், தம்பி; அக்கா, தங்கையாக வாழ்பவர்கள்; வாழவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நாங்கள் அடிபட்டு, அலைக்கழிந்து, அல்லல்பட வேண்டி வரும். அந்தப் பயமும் அச்சமும்தான் என்னைக் கிலி கொள்ள வைக்கின்றது.

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் ஏற்கெனவே இழந்து விட்டோமே! ஒற்றுமைப்படாவிட்டால் சிறுபான்மைகளை பேரினவாதப் பூதம் விழுங்கி ஏப்பம் விட்டு விடும். இது சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வந்துள்ள பிரித்தாளும், அரை வேக்காட்டு அரசியல்வாதிகளுக்குப் புரியாது.

“பாடசாலைகளிலிருந்து இந்த உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில், இன ஒற்றுமை இல்லாதபட்சத்தில் எந்தவோர் அபிவிருத்தியும் இடம்பெறாது.

“என் கடமையில் இனவாதம் இருந்திருக்கவில்லை. தமிழ் கால்நடைகள், சிங்களக் கால்நடைகள், முஸ்லிம் கால்நடைகள் என்று எதுவுமில்லை.

“எழுத்துத் துறைக்கூடாக என்னுடைய கதைகளில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைதான் கருப்பொருளாளாக இருக்கும். என் கதைகளுக்கு முன்னுரையும் சிறப்புரையும் சொற்பொழிவும் தமிழ் சமூகப் பெரியார்கள்தான் செய்திருப்பர். எனது ஆக்கங்கள், ‘காலச்சுவடு’, ‘கணையாளி’ போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் இலங்கையில் தேசிய பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

“தமிழர்கள் அரசியல் அபிவிருத்திகளில் ஈடுபடக் கூடாது என்ற மறைமுக சிக்கலுக்குள் இருந்த காலகட்டத்தில்தான் நான் அரசியலுக்குள் புகுந்தேன். அதனால் தமிழ் மக்களுக்கும் சேர்த்துத்தான் நான் சேவை செய்தேன். முதலாவது, வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையில் நான் ஓர் உறுப்பினர். என்னோடு சபையில் கூட இருந்த தமிழ் உறுப்பினர்களும் என்னை அதிகமாக நேசித்தார்கள். அதனால் என்னை மாகாண சபையின் உப தவிசாளராக நியமித்தார்கள்.

“இனரீதியான பிரிப்புகள் வேண்டாம். இனரீதியான பாடசாலைகள் இனி வேண்டாம். இனங்கள் இணைந்த பாடசாலைகள் வேண்டும். கல்விக்கூடாகத்தான் இன உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும்” என்றார் மனநெகிழ்வுடன்.