தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 10)

18 மாசி 1968 அன்று இரத்தினம் கொல்லப்பட்டார்

இந்த தினத்தில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொலை வழக்கின் ஆரம்ப விசாரணைக்கு எல்லோரும் போக வேண்டும,.இந்த அன்று இரத்தினம் போகப் புறப்படும்போது எனது அம்மாவின் சிறிய தகப்பன் கனகச்சாமி என்பவர் தன் தங்கையுடன் காலையில் இரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.இவருக்கு கண் தெரியாது.இவருக்கு இரத்தினத்தின் சாதகபலன்கள் அறிந்தவர்.இரத்தினம் பொதுவாக பெரியவர்களிடத்தில் மரியாதையானவர்.

அவர் சொன்னார்.இன்று ஒருநாள் மட்டும் போகாதே.இந்த நாளைத் கடந்தால் உன்னை அறுபது வயதுவரை எவனும் வீழ்த்த முடியாது.அவரும் சிரித்துவிட்டு இது கட்டாயம் போகவேண்டும்.அவரது மனைவியும் வாக்குவாதப்பட அதை மீறி இரத்தினம் புறப்பட்டார்.இந்த வாக்குவாதங்களால் கைத்துப்பாக்கி மறந்துவிட்டார்.

இரத்தினத்துக்கு பரமன் என்ற நண்பர் கண்டிவீதி புத்தூர்சந்தியில் இருந்தார். அவரும் நளவர் சமூகம்தான்.இந்த வழக்குக்காக பலரும் சாவகச்சேரி சென்றனர்.

இக்கால கட்டங்களில் எமது ஊரவர்கள் போக்குவரத்துக்கள் எதிரிகள் இருப்பிடங்கள் வழியாகவே செல்வதால் மிகவும் எச்சரிக்கையுடன் சிறு சிறு குழுக்களாக முன் பின்னால் செல்வார்கள்.அடி கொடுத்தாலும்,அடி வாங்கினாலும் அதில் பங்கேற்க இன்றுவரை தயங்கியதில்லை.

இந்த வழக்கு முடிந்த பின்னர் எல்லோருமாக சாவகச்சேரி பருத்தித்துறை பஸ் மூலமாக 754 இலக்க பஸ்சில் ஏறி ரிக்கட்டுகளும் எடுத்துவிட்டனர்.இந்த பஸ் மட்டுவில்,கனகன்புளியடி ஊடாக எமது ஊருக்கூடாக செல்லும்.இரத்தினமும் இவர்களோடு ஏறிவிட்டார்.பஸ் புறப்பட தயாரானபோது எங்கிருந்தோ பனியன் ராசன் வந்தான்.பனியன் ராசன் இந்த பஸ் செல்லும்வழியிலேயே அவன் வீடு.ஆனால் அவன் இரத்தினத்தை இறங்குமாறு வற்புறுத்தவே அவரும் இறங்கிவிட்டார்.பெடியள் எல்லாம் இரத்தினத்தை வருமாறு கோர பனியன் ராசன் அவருக்காக நாங்கள் பரமனைப் பாரத்துவிட்டு வருகிறோம் என சொன்னான்.

இருவருமாக புத்தூர்சந்தி வந்து பரமன் வீட்டில் சைக்கிள் எடுத்துக்கொண்டு எமது ஊர் வரத்தொடங்கினர் .அந்த வீதியின் முதல் வளைவு அரை மைல் தூரத்தில் உள்ளது. அதில் இரண்டு புறம் இருந்தும் ஒழுங்கைகள் வருகின்றன.ஒரு புற ஒழுங்கையில் வீடுகள் உள்ளன்.மறுபுற ஒழுங்கையின் இரு புறமும் பனை வடலிகள் நிறைந்த காணி.

ஒருவர் தூரத்தில் நின்று பார்க்க கொலையாளிகள் கும்பலாக ஒழுங்கையின் உள்ளே கொஞ்சம் தொலைவாக நின்றனர்.அவரகளுக்கு இரத்தினத்தின் முன்னெச்சரிக்கை பார்வைகள் தெரியும்.பனியன் ராசன் ஓட இரத்தினம் பின்னிருந்து வந்தார்.அந்த வளைவை தாண்டி 50 யார் தூரம் சைக்கிள் செல்ல வெடி விழுந்தது.குறி தவறிவிட்டது.இரத்தினம் ஓடியிருந்தால் தப்பி இருக்க முடியும் அவர் ஓடவில்லை. வெடி விழுந்த இடம் நோக்கி பனியன் ராசனுடன் சைக்கிளை உருட்டி கவனமாக வர பனியன் ராசன் மெல்ல நழுவினான்.இரண்டு ஒழுங்கைகுள் இருந்தும் சுமார் 50 பேர்வரை வாள்,கத்தி கோடாலிகளுடன் சூழ்ந்து கொண்டனர்.

பனியன். ராசன் எதிரிகள் வந்த ஒழங்கைக்குள்ளால் ஓடினான்.எதிரிகள் அவனை எதுவும் செய்யவில்லை .இரத்தினம் சைக்கிளை வைத்தே நின்று போராடினார்.அவரது சைக்கிள் வீச்சில் ஒரு வாள் சிக்கி கீழே விழ அதை எடுக்க முயற்சிக்கும் போது ஒருவனின் கோடாலி அவர் கழுத்தில் விழ அவர் வீழ்ந்தார்.இச்சம்பவத்தில் இருவரை கொலையாளிகள் தூக்கிக் கொண்டோடியதாக சிலர் கூறினர்.இரத்தினம் கடுமையாக போராடியே இறந்ததாக பின்னாளில் நேரில் பார்த்த அயலவர் கூறினார்.

இரத்தினம் கொல்லப்பட்ட செய்தியை பனியன் ராசன் துரை என்ற சிறுவனிடம் சொல்லி ஊருக்குள் சொல்லும்படி அனுப்பினான்.அவன் எனது நாலாவது சகோதர்ர் ஒரொவரிடம் தகவல் கொடுக்க என் சகோதர்ர் வீட்டுக்கு வந்து தெருவில் சத்தமாக செய்தியை சொல்லி விட்டு அந்த இடத்துக்கு போய்விட்டார்.அவர் போகும் போது ஊர் எல்லையில் துப்பாக்கி ஒன்றுடன் பனியன் ராசன் நின்றான்.என் சகோதர்ர், அங்கு போனபோது அவர், பிணமாக கிடந்தார்.அது எதிரிகளின் சொந்த இடம் என் சகோதர்ர் வயது அப்போது 18.அந்த வழியால் பள்ளிக்கூடம் விட்டு புலிகளால் கொல்லப்பட்ட இராசதுரை வந்தார்.இருவரும் ஒன்றாக இரத்தினத்தின் உடல் அருகே நின்றனர்.இதன் பின் இரத்தினத்தின் சகோதரி,மனைவி என பெண்கள் செல்ல முன் எச்சரிக்கையுடன் ஆண்களும் சென்றனர்.

இதேநேரம் பஸ் வழியாக வந்தவர்கள் தகவல்தரவே பனியன் ராசனின் சதி என விளங்கிவிட்டது. பனியன் ராசன் தப்பி ஓடிவிட்டான்.

இரத்தினம் இறந்த தகவல் பரவ வி.என்.நவரத்தினம்மும் அங்கே வந்தார்.ஆனால் எதுவும் சொல்லாமல் உடனே கிளம்பிவிட்டார்.இந்த தகவல் எஸ.பி. சுந்தரலிங்கம் அவர்களுக்கு சாவகச்சேரி பொலிஸ் அறிவிக்க அவர் திருப்பி பதிலளித்தாராம் இவனால்தான் ஊர் அமைதி கெட்டது. நல்ல விசயம் என்றாராம்.இதை அப்படியே அங்கே விசாரணைக்கு வந்த சாஜன்ட் கூறினானாம்.

இரத்தினத்தின் மரண ஊர்வலம் பல ஊர்களில் இருந்தும் சிறுபான்மைத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.இந்த கொலை தொடர்பாக பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

எல்லோரையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் பொறுமையாக வைத்திருந்த இரத்தினம் கொல்லப்பட்டதால் எதிரிகள் துள்ளிக் குதித்தாலும் உரிமை பாராட்டவில்லை.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)