தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)

இந்த போராட்டம் தொடங்கியபோது அச்சுவேலியிலும் சில இளைஞர்கள் தொடங்க ஆவலாக நின்றனர்.அவரகள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.அச்சுவேலி தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் வாழும் பிரதேசம்.பொருளாதார வளம் நிறைந்த மக்கள்.ஆனாலும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க துணியவில்லை.ஆனாலும் ஒரு சிலர் சேர்ந்து குழுவாக இயங்கினர்.அதில் எனது உறவினர் அரியண்ணை என்று நாங்கள் அழைக்கும் அரியரத்தினம் சந்தர்.

வர் அச்சுவேலி பிள்ளையார் கோவில் திறப்புக்காக தன் நண்பர்களுடன் போராடினார்.ஒரு தடவை தவராசன் இனி கோவிலடிப் பக்கம் கண்டால் கொல்லுவேன் என சவால் விட்டு அனுப்பினான்.இவர் கோவிலை சுற்றிவந்து நான் இங்கே நிற்கிறேன் வா என அவனுக்கு தகவல் அனுப்பினார்.

இவர்களுக்கு ஊர் ஆதரவு தர தயங்கியதால் போராட முடியவில்லை.இவரகள் தாங்களே ஒரு முடிவை எடுத்தனர்.கைக்குண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் அரியரத்தினம் இறந்துவிட்டார்.இதை அடுத்து அச்சுவேலி இளைஞர்கள் போராட்டத்தை விட்டுவிட்டனர்.

இதே காலகட்டத்தில் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் அ.பொ.செல்லையா என்பவர் கொண்டுவந்த பாவாடை தாவணி எதிர்ப்பு சண்டை,சரஸ்வதி பூசைப் போராட்டம் ஆகியவற்றில் எமது ஊர் மாணவரகளோடு கைகோர்த்து பெரும்பலமாக நின்ற மட்டுவில் வடக்கு மானாவளை பகுதி மக்கள் எங்களுக்கு தமது தார்மீக ஆதரவு தந்தார்கள்.முழுமையான ஆதரவு அவர்கள் மூலமாக கிடைத்தது.இது நமது ஊர் போராளிகளுக்கு பலத்த உத்வேகம் தந்தது.

இந்த வேகத்தில் கல்வயல் பகுதியில் இருந்து இருவர் ஆர்வம் காட்டினார்கள்.அவரகளில் ஒருவர் காசிப்பிள்ளை.அப்போது அவருக்கு 20 வயது இருக்கும்.மிக மெல்லியவர். மிக துணிவானவர்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)