துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன.

அதேவேளை, இந்நெருக்கடி, தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது.

இவை, பொருளாதார நெருக்கடியின் தெரியாத பக்கங்களையும் மறைக்கப்பட்ட தொடர்புகளையும் அம்பலப்படுத்துகின்றன. இவை, பொருளாதாரக் கட்டமைப்பின் கோலங்களைக் கட்டவிழ்க்கின்றன.
சில வாரங்களுக்கு முன், துருக்கிய உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரிகளை முறையே, 50 சதவீதம், 20 சதவீதமாக அமெரிக்கா இரட்டிப்பாக்கியது.

ஏற்கெனவே, பல மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வரும் துருக்கிய நாணயமான லீராவின் மதிப்பு, இந்நடவடிக்கை காரணமாகத் தடாலடியாக 20 சதவீத வீழ்ச்சி அடைந்ததோடு, பணவீக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

இதேவேளை, துருக்கிய லீராவின் வீழ்ச்சி, இந்திய ரூபாயிலும், பாரிய அதிர்ச்சியை உருவாக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரூபாயில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக இது காணப்படுகிறது.
துருக்கிய நாணயத்தின் சரிவுக்கும் அது, இந்திய நாணயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு, துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா ஏன் விதிக்கிறது? இவை ஆராயப்பட வேண்டிய வினாக்கள்.

துருக்கி மீது, அமெரிக்கா முன்னெடுத்துள்ள பொருளாதார யுத்தம், பல்வேறு முகங்களையும் காரணிகளையும் உடையது.

நீண்டநாட்களாக, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக, துருக்கி இருந்து வந்துள்ளது. குறிப்பாக, சிரியா மீதான யுத்தத்தை அமெரிக்கா தொடங்கியபோது, அதன் பிரதான கூட்டாளி, துருக்கி ஆகும்.
மத்திய கிழக்கில், ஈரானின் ஆதிக்கத்துக்குச் சவாலான ஒரு நாடாக, துருக்கி தன்னை நிலைநிறுத்துகையில், அதற்கான பூரண ஆதரவை, அமெரிக்காவே வழங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் துருக்கியின் முயற்சிகள் கைகூடாத போதும், நேட்டோவில், துருக்கியை அரவணைத்துச் சீராட்டிப் பேணிய நாடு, அமெரிக்கா தான்.

நேட்டோ கூட்டணிக்குள், வேறெந்தவோர் உறுப்பு நாடுகளையும் விட, துருக்கியில் தான், அதிக அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளன.

இப்பின்னணியில், துருக்கியோடு அமெரிக்காவுக்குப் பிரச்சினை என்னவென்றால், துருக்கிய ஜனாதிபதி எர்டோவான், இன்னோர் ஓட்டோமன் பேரரசை உருவாக்குவதற்கான எண்ணத்தைக் கொண்டிருந்தார். தன்னை, ஒரு பேரரசர் போலக் கருதினார் என்பதாகும்.

மக்களிடையே அவருக்குள்ள செல்வாக்கின் காரணமாக, மீண்டும் ஜனாதிபதியாகி, அரசமைப்பை மாற்றியமைத்து, சர்வாதிகாரியாக மாறினார். அதுவும் அமெரிக்காவுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை.

ஆனால், அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருக்க, எர்டோவான் விரும்பவில்லை. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு பேணுவது அவசியம் என்பதை உணர்ந்து, அந்நாடுகளின் உதவியை நாடத் தொடங்கினார்.

இது, சிரியப் போரில் அமெரிக்கத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அமெரிக்கா, இதற்குப் பழிவாங்கும் நோக்கில், துருக்கியில் தனிநாட்டுக்காகப் போராடிவரும் குர்தியர்களுக்கு, ஆயுதமும் நிதியுதவியும் வழங்கியது.

இதனால், துருக்கிய இராணுவத்துக்கு எதிராகப் போராடும் குர்தியர்கள், அமெரிக்க ஆதரவுடன் முன்னேறத் தொடங்கினர். இது, துருக்கிக்குச் சிக்கலானதாக மாறியது.

இதேவேளை, துருக்கியில் ஆட்சிமாற்றம் அவசியம் என்பதை, அமெரிக்கா உணர்ந்தது. அல்லாவிடின், தனது நலன்களுக்கு எதிரானதாக, துருக்கி மாறிவிடும் என அஞ்சியது. இதன் விளைவால் துருக்கிய ஜனாதிபதி எர்டோவானைப் பதவியிலிருந்து தூக்கியெறிய, 2016 ஜூலை மாதம், இராணுவச் சதியொன்றை அரங்கேற்றியது. இதில் 300 பேர் கொல்லப்பட்டதோடு, 2,100 பேர் படுகாயமடைந்தனர். பல்வேறு அரச கட்டடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இறுதியில் சதி தோல்வியடைந்தது.

இச்சதியை நடத்துவதில், அமெரிக்காவின் நேரடிப் பங்கு அறியப்பட்ட நிலையில், அமெரிக்க – துருக்கி உறவுகள் சீரழியத் தொடங்கின. இச்சதியை ஒழுங்கமைத்தவர்களுக்கு, உடந்தையாக இருந்த, ‘எவஞ்சலிக்கல்’ அமெரிக்க மதபோதகர் அன்ட்ரூ புரூன்சன், கைது செய்யப்பட்டுச் சிறையிலிடப்பட்டார். இதை, வன்மையாகக் கண்டித்த அமெரிக்கா, நிபந்தனையின்றி அவரை விடுதலை செய்யுமாறு கோரியது. இக்கோரிக்கையைத் துருக்கி நிராகரித்தது.

இதேவேளை, இச்சதியைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று, துருக்கி குற்றஞ்சாட்டுகிற மதபோதகர், பெதுல்லா குலென் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது ‘குலென் இயக்கம்’, துருக்கியில் செல்வாக்குள்ள அமைப்பாகும்.

இவ்வமைப்பே, சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றியது என்று, துருக்கி அரசாங்கம் சொல்கிறது. குலெனைத் துருக்கிக்கு அனுப்புமாறும், சதியில் அவரின் பாத்திரம் தொடர்பில் விசாரணை நடைபெறவேண்டியுள்ளது என்றும், அமெரிக்காவிடம் துருக்கி கோரியது. இக்கோரிக்கையை, அமெரிக்கா ஏற்க மறுத்தது.

இப்பின்னணியிலேயே, மதபோதகர் புரூசனின் விடுதலையை மய்யப்படுத்தி, துருக்கிக்கெதிரான அமெரிக்க நகர்வுகள் நடக்கின்றன.

துருக்கி மீது தடைவிதிக்கப்பட்ட நிலையில், கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி, “இந்த விடயத்தில், நிர்வாகம் முற்றிலும் உறுதியாக நிற்க இருக்கிறது. மதகுரு புரூன்சனை நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவருவதை, ஜனாதிபதி நூறு சதவீதம் பொறுப்பேற்றுள்ளார். அடுத்த ஒருசில நாட்களில், சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இன்னொரு வகையில், மதபோதகர் புரூன்சன் விடயத்தில், கடும்போக்கைப் பின்பற்றுவதாகக் காட்டுவதன் மூலம், கிறிஸ்தவ வலதுசாரி அடித்தளத்தின் ஆதரவை, ட்ரம்ப் பெற்றுக் கொள்வதோடு, தனது உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இதை வாய்ப்பாக்குகிறார்.

மதபோதகர் விடயத்தைச் சாட்டாகக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளுக்குக் கீழ், துருக்கியப் பொருளாதாரத்தைக் கொண்டு வருவதற்கான முனைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இச்செயலைத் தனித்த விடயமாகப் பார்க்க முடியாது. 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை, அமெரிக்கா தன்னிச்சையாகக் கைவிட்டதை அடுத்து, ஈரானுக்கு எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.அதில், குறிப்பாக ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள், வங்கித்துறை மீதான தடைகள் குறிப்பிடத்தக்கன.

இதேபோல, ரஷ்ய உளவாளி இங்கிலாந்தில் நஞ்சூட்டப்பட்ட ‘ஸ்கிரிப்போல் விவகாரத்தை’ காரணம்காட்டி, ரஷ்யா மீதும், பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

இதேபோலவே, சீனாவின் மீதான வர்த்தகப் போர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்கள் மீதான, அதிகரித்த வரிவிதிப்புகள் என்பனவும் இவ்வாண்டு நடந்தேறியுள்ளன.

இவற்றின் உண்மையான நோக்கம் யாதெனில், வர்த்தகப் போர், பொருளாதாரத் தடைகள், நேரடி இராணுவ மோதல் என, இத்தகைய வழிவகைகள் மூலமாக, அமெரிக்கா தன் எதிரிகள், கூட்டாளிகளின் முதுகில், தன் சொந்த நெருக்கடியைச் சுமத்தும் முயற்சியின் பகுதியே ஆகும்.

அதேபோலவே, உலகிலுள்ள ஒவ்வோர் அரசையும் ‘வோல் ஸ்ட்ரீட்’, அமெரிக்காவை மய்யமாகக் கொண்ட பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு, அடிபணியச் செய்வதற்கான செய்நிரலின் ஒரு பகுதியாகவும் இதை நோக்கவியலும்.

துருக்கி மீதான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு, இன்னொரு முகமுண்டு. துருக்கிய ஏர்டோவான் அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை, மத்திய கிழக்கிலும் இன்னும் பரந்தளவில் யூரேஷியாவிலும் அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களை, குறுக்காக வெட்டியுள்ளது.

துருக்கி, அதன் தெற்கு எல்லையில், தனது நலன்களைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கும் வகையில், சிரியா சம்பந்தமாக, ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் ஓர் ஏற்பாட்டை எட்டியுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணை அமைப்பு முறையைக் கொள்முதல் செய்யும் திட்டங்களை, துருக்கிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

துருக்கியின், எரிசக்தி இறக்குமதிகளின் பிரதான ஆதாரமாக உள்ள ஈரானுக்கு எதிராக, வொஷிங்டன் திணித்து வருகின்ற தன்னிச்சையான தடை ஆணைகளுக்குக் கட்டுப்படும் எந்த எண்ணமும், தனக்கு இல்லை என்பதை, துருக்கி வெளிப்படுத்தியுள்ளது.

“ஈரானுடன் வியாபாரம் செய்யும் எவரொருவரும், அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய முடியாது” என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது டுவிட்டரில், அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்னொரு வகையில், துருக்கியின் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவைப் பெரியளவில் பாதிக்காது. துருக்கி, அமெரிக்கப் பொருட்களுக்கான வெளிநாட்டுச் சந்தைகளில் 28ஆவது இடத்தில் உள்ளது. இந்தாண்டின் முதல் பாதியில், அமெரிக்க ஏற்றுமதிகளில் 0.6 சதவீதம் மட்டுமே துருக்கிக்குரியன.

இந்தாண்டின், முதல் காலாண்டு முடிவில், துருக்கிய கடனில், அமெரிக்க வங்கிகள் 38 பில்லியன் டொலர் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால், இதற்கு முற்றிலும் எதிர்மாறாக ஸ்பானிய, பிரான்ஸ், இத்தாலிய வங்கிகள் முறையே, 83.3 பில்லியன் டொலர், 38.4 பில்லியன் டொலர், 17 பில்லியன் டொலரைத் துருக்கிக்குக் கடனாக வழங்கி உள்ளன.

துருக்கிய நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பரவுவதை, அமெரிக்க விரும்புகிறது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தை, மூலோபாயப் போட்டியாளராகக் காண்கிறது.

இதற்கிடையே, துருக்கிய லீராவின் சரிவானது, ‘பிரிக்ஸ்’ நாடுகள் உள்ளடங்களாக, எங்கிலும் துணைவிளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இருந்து, மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா வரையில், பணப்பெறுமதி இழப்பு உள்ளிட்ட பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கி, பத்தாண்டுகள் முடிவடையும் நிலையில், உலகம் இன்னமும் தீராத பொருளாதார நெருக்கடியிலேயே சிக்கியுள்ளது என்பதை, துருக்கி நிலைவரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், நிகழ்ந்ததைவிட, மோசமான பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள், அதிகளவில் உள்ளன என்பதை எதிர்வுகூறுவது கடினமல்ல; அதை விளங்குவதும் சிரமமல்ல.

இதில, விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில், கடந்த பத்தாண்டில் உலகப் பொருளாதாரத்தின் தன்மை, மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியானது, உற்பத்தி வளர்ச்சி, புதிய முதலீடுகளின் மூலமாக நடைபெறவில்லை. மாறாகப் பணமானது, ஊகவணிக நடவடிக்கை மூலம், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பாய்ந்ததன் மூலமாக நடைபெற்றுள்ளது.

அதற்கேற்ப பணமானது, துருக்கி போன்ற எழுச்சிபெற்று வரும் சந்தைகள் என்று அழைக்கப்படுவதற்கு உள்ளே பாய்ந்துள்ளது, அந்த அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் அமெரிக்க டொலர் அடிப்படையிலான கடன்கள், பிறவெளிநாட்டுச் செலவாணிக் கடன்களை, மிகவும் மலிவான விகிதங்களில் பெற்றுக்கொள்வதிலிருந்து விளைந்த, அதிக வட்டிவிகித இலாபத்துக்கான சாத்தியக்கூறும், வேகமான வளர்ச்சி விகிதமும் விரைவான இலாபங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

சர்வதேச நிதியியலுக்கான அமைப்பு (Institute of International Finance) வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலையானது (indebtedness), 2011ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதமாக இருந்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டு நிறைவில், 211 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது, முன்சொன்ன பணமானது எழுச்சி பெறும் பொருளாதாரங்களுக்கு (emerging economies) பாய்ந்ததன் விளைவாகும். இதன் ஆபத்தான நிலையைப் பணத்தின் அடிப்படையில் நோக்குவோமானால், எழுச்சி பெறும் பொருளாதாரங்களின் கடன்களில், 40 ட்ரில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.

துருக்கி மீதான, அமெரிக்கத் தடையின் உடனடி விளைவாக, தென்னாபிரிக்க நாணயமான ரான்ட், பத்து சதவீதம் சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டொலருக்கு எதிராக, வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டத்துக்கு வீழ்ந்தது.

ஆர்ஜென்டீனிய பெசோவின் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிக்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆர்ஜென்டீனா உதவி கோரியுள்ளது. பிரேஸில், மிகப்பெரிய பொருளாதாரச் சரிவில் உள்ளது.

எழுச்சி பெறும் பொருளாதாரங்களின், பொருளாதார நெருக்கடி நிலையாது, 1997-98 காலப்பகுதியில், ஆசியாவில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை நினைவூட்டுகின்றன.

‘பொருளாதாரப் புலிகள்’ எனப் புகழப்பட்ட நாடுகள், வங்குரோத்தான கதைதான் அக்கதை. இதில், நினைவூட்ட வேண்டியது யாதெனில், அச்சரிவு, தாய்லாந்து நாணயமான பாஹ்த்தின் வீழ்ச்சியிலிருந்தே ஆரம்பமாகியது. அதேபோல, துருக்கியின் லீராவும் இன்னொன்றைத் தொடக்கிவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள். இந்த நெருக்கடி, இத்துடன் முடிவடையாது என்பது தான், இதில் முக்கியமானது.

அமெரிக்கா தனது நெருக்கடியை மற்றவர்களின் தலையில் கட்டுவதன் ஊடு, தப்பிப்பிழைக்க முயல்கிறது. அதற்காக அது, யாருடனும் பகைக்கத் தயாராக இருக்கிறது. அண்மையில், ஜி-7 மாநாட்டில், அமெரிக்க நடத்தை அதைக் காட்டியது.

இன்று, மேற்குலக நாடுகள் தமக்குள் மோதுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஓட்டைப் படகில் இருந்து, குதித்துக் கரையேற, பிரித்தானியா துடிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சிறிய நாடுகள், வலையில் மாட்டிய மீன்கள் போல், எதுவும் செய்யவியலாமல் சின்னாபின்னமாகின்றன.

ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை, ஆதிக்கத்துக்கான போட்டியில் முனைப்பில் உள்ளன. எல்லா நாடுகளுமே தொழிலாளர் வெட்டுகள், வேலையிழப்புகள், சமூக நலத்திட்டக் குறைப்புகள் என்பவற்றின் ஊடு, தம்மைத் தக்கவைக்க முனைகின்றன. உழைக்கும் மக்களே, இதன் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

துருக்கிய நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் ஆபத்தையும் காட்டியுள்ளது. இந்நெருக்கடியின் கோலங்கள் கட்டவிழ்ந்துள்ளன. இனிக் காட்சிகள் கட்டவிழும் அவலத்தை, எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

முரண்நகை யாதெனில், எமது அவலமும் இந்த அவலநாடகத்தின் பகுதியாகும். உண்மையை ஏற்றுக்கொள்வது, கொஞ்சம் கடினமானதுதான்.