தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்

எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே!

ஆக்கிரமித்து வெற்றி பெற்றவர்களை விட, ஆக்கிரமிப்புகளை வெற்றி கொண்டவர்கள் இன்னமும் தலை நிமிர்ந்து தங்கள் வரலாறுகளை அடுத்த தலைமுறைகளுக்காய் எழுதிச் செல்வார்கள்.

ஆனால் தோல்வியடைந்தவர்கள் தங்கள் அழிவுகளிலிருந்து மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளோடு, தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரியான முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், மீண்டும் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த காலங்களிலிருந்து கற்றுக் கொள்ளாதவர்கள் மீண்டும் அதே தவறுகளை விட நேரிடும் என்ற ஜோர்ஜ் சந்தாயனாவின் வாக்கியத்தை ஊரில் உள்ள ஆய்வாளர்கள் எல்லாருமே சொல்லியிருக்கிறார்கள்.

இராணுவத் தோல்வி என்பதாக மட்டும் இருந்தால், அது பற்றிய ஆராய்ச்சி அரசியல்வாதிகளுக்கும் இராணுவ நிபுணர்களுக்குமானது. ஆனால் சமூகம் தோல்வி அடைந்தால் அந்த சமூகம் தனது தோல்விக்கான அடிமுடிகளைத் தேடாமல் ஒரு சமூகமாக வாழ முடியாது.

வெறுமனே பீனிக்ஸ் போல மீண்டும் எழுவோம் என்று மேடைகளில் முழங்குவதாலோ, மீண்டும் புலிகள் எழுந்து வருவர், ஈழம் மலரும் என்று உண்மைப் பெயர் சொல்லப் பயந்து, பொய்ப் பெயர்களில் முகப்புத்தகத்தில் புலம்புவதாலோ ஒரு சமூகம் தலை நிமிர முடியாது.

ஜப்பானும் ஜேர்மனியும் யுத்தத்தின் அழிவின் பின்னும் அடைந்த வளர்ச்சி, தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டதிலிருந்தே ஆரம்பிக்கிறது. முன்னைய தலைமுறை கண்ணை மூடிக் கொண்டு சர்வாதிகாரிகளை ஆதரித்தது என்பதற்காக, அடுத்த தலைமுறைகள் மந்தைக் கூட்டமாய் பின் தொடரவில்லை. அந்த மந்தைச் சிந்தனையை முழுமையாக நிராகரித்து, அந்த நேரத்திய உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டதால் தான் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி, சமூகமாகவும் உயர்ச்சி பெற்றிருக்கின்றன. ஹிட்லரின் ஆரிய மேலாதிக்க சிந்தனையும், ஜப்பானின் சக்கரவர்த்தி மீதான சூரிய தேவ வழிபாடும் கைவிடப்பட்டு, இன்றைக்கு ஹிட்லரின் சிந்தனையைத் தொடருதல் குற்றமாகவும், ஜப்பானியச் சக்கரவர்த்தி வெறும் பெயரளவிலும் இருக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் அரசியல் மட்டங்களிலோ, சமூக மட்டங்களிலோ எங்கள் தோல்விக்கான காரணங்கள் பகிரங்கமாக ஆராயப்படவில்லை. வேலி அடைத்து பொட்டுக்கேடுகளை மறைக்கும் பாரம்பரியம் கொண்ட சமூகம், தனக்கு முழுமையாகத் தெரிந்த உண்மையைப் பகிரங்கமாக விவாதத்திற்கு விடத் தயாராகவில்லை.

தேசியத் தலைவர் விட்டுச் சென்ற போராட்டத்தை புலன் பெயர்ந்தவர்கள் தொடர்கிறார்கள் என்றும், புலிகளுக்கு பின்னால் மந்தைகளைப் போல போனதைப் போல, ஈழத்தை சம்பந்தன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி பின்தொடர்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்களே அன்றி, சமூகம் தனது தோல்வி பற்றிய காரணத்தைக் கண்டறிவதற்கான விவாதத்திற்கு தயாராக இல்லை.

இன்று வரைக்கும் ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் கருத்துத் தெரிவிப்போர் பலரும் புலிகளின் முள்ளிவாய்க்கால் தோல்விக்கான காரணங்கள் என்று சொல்லும் விடயங்கள், மீசையில் மண் படவில்லை என்பதை வரலாறாக்க எடுக்கப்படும் முயற்சிகளே!

இன்று வரைக்கும் தோல்விக்கான காரணங்களாக சொல்லப்படுபவை என்ன?

22 (அல்லது 37) நாடுகள் சதி செய்து அழித்து விட்டன.

அமெரிக்கா கப்பல் அனுப்புவோம் என்று ஏமாற்றி விட்டது.

இந்தியா சதி செய்து அழித்து விட்டது. (ராஜீவின் கொலைக்குப் பழிவாங்கலாக சோனியாவின் சதி, இந்திய செய்மதிகள் மூலமாக கப்பல் நடமாட்டத்தை இலங்கைக்கு தெரியப்படுத்தியது.)

நோர்வேயின் (எரிக் சொல்கெய்ம்) துரோகம்.

ஐ.நா சதி செய்து விட்டது.

ஐரோப்பிய சமூகம், கனடா புலிகளைத் தடை செய்து துரோகம் இழைத்தன.

கருணா என்ற துரோகியால் தான் அழிவு வந்தது. (விரும்பினால் டக்ளஸையும் சேர்த்துக் கொள்ளலாம்!)

கே.பி காட்டிக் கொடுத்து ஆயுதக் கப்பல்கள் பிடிபட்டதால் தோல்வி வந்தது.

கருணாநிதியின் துரோகம்.

இதைவிட, தமிழுலகில் மலிந்த அரசியல் நோக்கர்களிடம் இருந்து விழுங்கியதை கக்குபவர்களுக்கு அகாசி முதல் அசின் வரைக்கும் துரோகம் இழைத்தவர்கள் உண்டு.

இந்தக் குற்றச்சாட்டுகளின் நோக்கங்களில் எதிரிக்கு தங்களை வெற்றி கொண்டதற்கான பெருமை கிடைக்கக் கூடாது என்பதும் ஒரு காரணம்.

எங்களுடைய புனிதப் போராளிகளை இலங்கை கூலிப்படைகள் சர்வதேச உதவியின்றி வென்றிருக்க முடியாது என்பது தான் இவர்கள் சொல்ல விரும்பும் விடயம். ‘உலகத்தில் அதி கூர்ப்படைந்த மூளையைக் கொண்ட படித்த யாழ்ப்பாணத்தின் தலைமையை மோட்டுச் சிங்களவனால் வெற்றி கொண்டிருக்க முடியாது’ என்பது தான் இவர்கள் நம்ப விரும்புகின்ற விடயம்.

இதில் புனிதப் போராளிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தாய்மாரின் பிடியிலிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு பலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாமலும் இல்லை.

மறுபக்கத்தில் தங்களுக்கு மட்டும் இனமான உணர்வு இருப்பதாகவும், சிங்களவர் எவருக்கும் நாட்டுப் பற்றில்லை என்பதும் அவர்கள் எல்லாருமே கூலிப்படைகள் என்பதுமே இவர்களின் தீர்மானமான முடிவு.

ஆனால் அந்தக் காரணத்தை விட மிக முக்கியமான நோக்கம், தங்கள் தவறை தாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், அதற்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துதல்.

அவ்வப்போது தலைமை தவறுகள் இழைத்து விட்டது என்றும் தலைமையைச் சுற்றியிருந்தவர்களால் தான் அழிவு வந்தது என்றும் ஒப்புக்காகச் சொல்வதும், அதைச் சொல்லப் போய் தங்கள் ஆட்களிடமேயே வாங்கிக் கட்டி துரோகிப் பட்டம் வாங்கி, பிறகு அதையே மூடி மறைப்பதுமாகத் தான் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.

தாங்கள் தீர்க்கதரிசி என்று கொண்டாடிய ஒரு மனிதன் வெள்ளைக் கொடியோடு போய் சொதப்பிப் போட்டுப் போன உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஒரு தன்னம்பிக்கை இல்லாத கொலைகாரப் போர்வெறியனை நம்பிய தங்கள் மனக் கோட்டைகள் சரிந்து போன வெட்கத்தை ஒத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் தங்களைத் தேற்றிக் கொள்ள, மற்றவர்களை மடையர்கள் என்று நினைத்துச் சொல்லும் கதைகள் தான் இவை.

தலைவர் தீர்க்கதரிசி, துரோகத்திற்கு அவர் கொடுத்த மரண தண்டனைகள் மட்டுமே ஈழத்தைப் பெறப் போதுமானது என்று நம்பிக் கொண்டிருந்த இவர்களுக்கு, இராணுவத்தை உள்ளே வர விடாமல் சமாந்தரமாக நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த தமிழீழ அரசுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற ஏன் அந்த தீர்க்கதரிசித் தேசியத்தலைவருக்கு சிந்தனை உதிக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

தன்னம்பிக்கை இல்லாமல் தன்னிடம் துப்பாக்கி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ‘இருண்டதெல்லாம் பிசாசு’ என்று நினைத்துப் போட்டுத் தள்ளிய ஒரு மனிதனும், அங்கே யுத்தம் நடந்தால் தான் தங்களுக்கு வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்கும் என்று நம்பிய புலன் பெயர்ந்த கூட்டமும் தான் இந்தத் தோல்விக்கான காரணம் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இவர்களுக்குத் தெரியும்.

நீங்கள் அவரைத் தேசியத் தலைவர், தீர்க்கதரிசி, அவருடைய யுத்த நிபுணத்துவத்தைப் பார்த்து உலகமே திணறிக் கொண்டிருக்கிறது என்று புகழ்ந்து பப்பா மரத்தில் ஏற்றியபடியால் அதெல்லாம் உண்மையாகி விட முடியாது.

உலகத்தையே திணறடித்து ஈழத்தைப் பெற்றுத் தருவார் (கையோடு துரோகிகளையும் அழித்து!) என்று சொன்ன நீங்களே, உலகமே சேர்ந்து அழித்து விட்டது, துரோகிகள் சதி செய்து போராட்டத்தை அழித்தார்கள் என்று சொல்வது உங்களுக்கே முரணாக தென்படவில்லையா?

மாற்று இயக்கத்தினரை மட்டுமன்றி, மாத்தயா தொடங்கி கருணா வரைக்கும் தன் காலடியில் கிடந்தவர்களையே தன்னை அழிக்க சதி செய்கிறார்கள் என துரோகிகளாகக் கண்டறிந்து போட்டுத் தள்ளிய அந்த தீர்க்கதரிசிக்கு இப்படி எல்லாருமே சேர்ந்து சதி செய்து துரோகம் இழைப்பார்கள் என்ற ஞானதிருஷ்டி தெரியவில்லையா?

காரணங்களைத் தேடிப் பிடிக்கும் நீங்கள் உங்கள் அடிமடிக்குள்ளேயே, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல, இந்தப் பெரிய வேலையைச் செய்து முடிக்கக் கூடிய அறிவும் திறமையும் இல்லாததால் தலைவர் தோல்வியடைந்திருப்பார் என்ற உண்மை இருந்தும் அதை வெளியே சொல்லப் பயப்படுகிறீர்கள்.

ஆங்கிலத்தில் சொல்லப்படுவதைப் போல, அறைக்குள் எல்லோரையும் மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கும் யானையைப் பற்றி பேசுவதைத் தந்திரமாகத் தவிர்த்துக் கொண்டு, யார் யாரோ தலையில் எல்லாம் பழியைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

முஸ்லிம்கள் வெளியேற்றம்… தலைவரின் முடிவு அல்லவாம்! கருணா காரணமாம் என்கிறது ஒரு தரப்பு. முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டார்களாம் என்று வக்காலத்து வாங்குகிறது இன்னொரு கூட்டம். முன்பு கரிகாலன் தான் காரணம் என்று ஒருவர் நமக்குச் சொன்னார்.

கடைசி நேரம் காஸ்ட்ரோ தான் எல்லாமாம்!

அப்படியாயின், தலைவரை மிஞ்சி எதுவுமே நடக்காது என்றும் தலைவர் எல்லாருக்கும் வேலையைக் குடுத்து ஈழம் எடுப்பார் என்றும் நீங்கள் சொல்லி வந்ததும், மேசையில் உலகப்படத்தை வைத்து ‘தலைவர் தளபதிகளுடன் வியூகம் வகுக்கிறார்’ என்று றீல் விட்டதும் பொய்யாகத் தான் இருக்க வேண்டும்.

அல்லது இறுதிக்கால எம்.ஜி.ஆர் மாதிரி, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் தலைவர் இருந்தார் என்றாவது நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

பங்கருக்குள்ள கிடந்த தலைவருக்கு ஊருலகத்தில என்ன நடந்தது என்று தெரியாது என்று சொல்ல வேண்டும்.

யுத்தத்தின் தோல்விக்கும் சமூகத்தின் அழிவுக்குமான காரணங்களை ஆராயும் அளவுக்கு உங்களுக்;கு அறிவு வளர்ச்சி இருப்பதாக யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் மற்றவர்களும் உங்கள் மட்டத்து அறிவு வளர்ச்சியில் தான் இருப்பார்கள் என்று, கேட்பவர்கள் கேனயர்கள் என்ற துணிவில் நீங்கள் சும்மா ஏரோப்பிளேன் ஓடக்கூடாது.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் மட்டும் தனியாக இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த நேரத்தில் யாரை எதிர்க்க வேண்டுமோ, அவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதும், உங்கள் தலைவர் மீது பழி விழுந்தாலும் என்ற எண்ணத்தில் விழுந்தடித்துக் கொண்டு காரணங்களை கற்பனை பண்ணுவதும், உங்கள் தவறுகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதும் உங்கள் முட்டாள் தனத்தையே காட்டுகிறது.

இவர்கள் துரோகம் செய்யாவிட்டால் தலைவர் ஈழம் எடுத்திருப்பார் என்கிறீர்கள். துரோகிகளுக்கு தீர்க்கதரிசனமாக மரண தண்டனையும் சாப்பாட்டில் நஞ்சு வைத்தும் கொன்ற உங்களுக்கு, இன்றைக்கு எரிக் சொல்கெய்ம் துரோகி என்றால் ஞானதிருஷ்டியால் அறிந்து அன்றைக்கு வன்னியிலேயே நஞ்சு வைத்துக் கொன்று வெளியே தெரியாமல் புதைத்திருக்கலாமே.

அதையும் விட, தலைவரைப் பாதுகாக்க நீங்கள் விடும் கற்பனை றீல்கள் இருக்கின்றனவே, சொல்லி மாளாது. தலைவர் வெள்ளைக் கொடியோடு போய் சரணடைந்தார் என்று தகவல் வந்ததும், வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு என்று ‘தலைவரைப் பிடிக்க முடியாமல் விசவாயு அடித்துத் தான் தலைவரைப் பிடித்தார்கள்’ என்று முகப்புத்தகத்தில் கதை புனைந்தவர்கள் உங்களுக்குள்ளே தான் இருக்கிறார்கள்.

தலைவர் எல்லாம் வல்லவர் என்றால், மற்றவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று புலம்பக் கூடாது.

மற்றவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று குமுறினால், தலைவர் தீர்க்கதரிசி, யுத்த நிபுணர், அது இது என்று கதை விடக் கூடாது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்கிற மாதிரி, தலைவர் தவறே விட மாட்டார் என்றெல்லாம் புலுடா விடக் கூடாது.

அல்லது நீங்கள் எல்லாரும் பேசிப் பறைஞ்சு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, புலிகள் திருப்பித் திருப்பிப் பொய் சொல்லி உண்மை ஆக்கியது போல, அதை நீங்கள் எல்லாருமே திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க வேண்டும்.

சும்மா ஆளாளுக்கு ஒரு கதையைக் கிளப்பி, மற்றவர்களை முட்டாள்கள் என்று நினைக்கக் கூடாது.

தோல்விக்கு காரணம் என்ன என்று யாரும் கேட்காமலேயே,

நீங்கள் கண்டபடி ஒரு புழுகை அவிழ்த்து விட, நாங்களும் சும்மா இருக்க மாட்டாமல்… அப்படியென்றால் இந்தக் காரணத்தைச் சொல்கிறார்களே என்றால்…

ஓம், அது தான் காரணம் என்ற மாதிரி…

‘இது தாண்ணே அது’ என்று சொல்வதற்கு இதென்ன செந்திலின் வாழைப்பழமா?

(முஸ்லிம்கள் வெளியேற்றம் தலைவருக்கு தெரியாமல் நடந்ததாம், காஸ்ட்ரோ தான் எல்லாமாம் என்று வாசித்த கடுப்பில்…!)

(தாயகம்)