தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

அதன் தொடர் செயல் போலவே திரு திருநாவுக்கரசு எழுதிய அரசியல் புத்தக ஆய்வு கருத்தரங்கும், அதில் உள்ள விடயங்களை ஆராயாமல், அறைகூவல் விடும் பலப்பரீட்சை களமாக மாறி, சில பேச்சாளர்கள் பேசமுடியாது குறுக்கீடுகளும், சில பேச்சாளருக்கு ஆரவார கைதட்டல்களுமாக, சிந்திக்க வேண்டிய விடயங்களை சிந்தையில் கொள்ளவிடாது, தம் பொருள் விலை போகவேண்டும் என்ற வியாபாரிகள் (அரசியல்) நடத்தும், சந்தைக்களமாக மாறியது. தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? அது சம்மந்தமான அணுகுமுறைகளில் நாம் விட்ட கடந்த கால தவறுகள் என்ன, சிங்கள தலைமைகளின் உண்மையான நிலை என்ன, எமக்கான சர்வதேச ஆதரவின் அளவு கோல் என்பன பற்றி அங்கு ஆராயப்படவில்லை.

திருநாவுக்கரசு டொனமூர் முதல் அண்மைய அரசியல் வரைபு பற்றிய, ஆய்வாக எழுதிய புத்தகம் பற்றிய ஆய்வில், தவறவிட்ட சந்தர்ப்பங்கள் பற்றி ஈபிடிபி தவராசா கூற முற்பட, அவர் தன்கருத்தை முழுமையாக கூறும் முன்பே எழுந்த குரல்களால், அவர் சார்ந்த கட்சியை விமர்சித்து அவரின் பேச்சு தொடரமுடியாமல், அவர் கூறவந்ததை கூறமுடியாமல் குறுக்கீடுகள், மீண்டும் எம்மவரின் ஒருவழி சிந்தனை (பிரபாகரன்) துளிர்விடுவதை, முன்நாள், இந்நாள் அரசியல் ஜாம்பவான்கள் அமர்ந்திருந்த மேடையில், பேச்சாளர்களின் சொந்த கருத்துக்களை செவிமடுங்கள் என்று கலந்து கொண்டோரை கேட்கும் (வன்முறை அற்ற,) ஆளுமை கூட இல்லா அளவிற்கு நிலைமை காணப்பட்டது.

இதற்கான காரணம் எம் அரசியல் தலைமைகளின், வெளிப்படை அற்ற தன்மை என்பதை மறுப்பதற்கு இல்லை. தேர்தல் காலத்தில் மேடைகளில் பகிரங்கமாக, தம் நிகழ்ச்சி நிரல்களை வெளியிடும் எந்த தமிழ் அரசியல் தலைமைகளும், பதவிக்கு வந்த பின் தாம் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றிய தெளிவூட்டலை செய்வதில்லை. வாக்குகளுக்காக மக்களை விழிப்படைய செய்யும் இவர்கள், தாம் மேற்கொள்ளும் நடவடிக்கை விடயங்களில் அவர்களை குருடர்களாகவே இதுவரை வைத்திருந்துள்ளனர். போகும் இடம் எங்கே என கேட்டால் போனபின் சொல்கிறேன் என்பதுபோல், பாதை தெரியாத பயணிகளாக மக்களை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்? பொறுமை காப்பவரும் பொங்கி எழுபவரும் நிறைந்த சமூக கட்டமைப்பில், நீண்ட கால தீரா நோய்க்கான என்ன தீர்வை, நாம் முன்வைத்தோம், அல்லது வைப்போம் என்ற விளக்கத்தை கூறவும் இவர்கள் தயார் இல்லாத நிலைப்பாடு தொடர்கிறது.

இன்று இதுபற்றி சுமந்திரனை சீண்டும் சுரேஸ் பிரேமசந்திரன், அன்று மகிந்த அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றி வினவியபோது, சுமுகமாக போகிறது என்று மட்டுமே கூறினார் என்ற விடயத்தை, அதே மேடையில் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் வி.தேவராஜ். ஆக தான் உடைத்தால் மண்குடம், சுமந்திரன் உடைத்தால் பொன்குடம் என்ற நிலையில், கேட்போர் காது குளிர, உணர்ச்சி பொங்க காசி ஆனந்தன் பேச்சுக்களுக்கு, ஆர்ப்பரித்த காலத்துக்கு மக்களை மீண்டும் அழைத்து சென்று, அடுத்த தேர்தலில் ஆசனம் வெல்லும் சூத்திரம் தவிர வேறு நோக்கம், இவர் போன்றவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் வாக்களித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல் சட்டவாதம் புரிவதுபோல, சாமானியரை நடத்தும் சுமந்திரனின், ‘நான் சொல்லுறன் நீர் கேளும்’ என்ற நிலைப்பாடும் ஏற்புடையதல்ல.

அரசியலில் அனைவரும் தலைவர்களாக முடியாது. தலைமைத்துவ பண்பு என்பது பதவி சார்ந்தது மட்டுமல்ல. மக்கள் நலன் சார்ந்தது. மக்களுக்கு எது நல்லது என்பதை தீர்மானிக்கும் வல்லவர்களாக, தாம் தேர்ந்தெடுத்த தலைமைகளின் செயல்பாடு பற்றி வினவும் உரிமை, மக்களுக்கு நிச்சயம் உண்டு. அதுவும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் தலைமைகள் தவறவிட்ட பல சந்தர்ப்பங்களை, நினைவில் கொள்ளும் மக்களின் மனநிலை எப்போதும் கொதிநிலையில் தான் இருக்கும். முள்ளிவாய்க்கால்வரை சென்றவர்கள் தாம் நந்திக்கடலில் கரைத்த, தொலைத்த எதையும் மறக்க தயாராக இல்லை. தலைமைகளை நம்பி முடிவுகளுக்கு காத்திருந்து ஏமாறிய காலம் மாறிவிட்டது. தீர்வு நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது அறிவுறுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் தினத்துக்கு மட்டும் தேவைப்படும் மக்களை, அடுத்த தேர்தல் வரும்வரை மாக்களாக நடத்தும் வென்ற தலைமைகள், அடுத்த தேர்தலில் வெல்வதற்காக மக்களை ஆயுதமாக்கும் தோற்றுப்போன தலைமைகள் தம்முள் நடத்தும் பலப்பரீட்சை, சிங்களத்துக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் அவர்கள் விரும்பும் தீர்வை, எம்மீது திணிக்கும் சந்தர்ப்பத்தை கொடுக்கும் என்பதை, சகல தமிழ் தலைமைகளும் மனதில் கொள்ளவேண்டும். எமது மக்களின் பிரச்சனை என்பது, எத்தனையோ சக்கடத்தார்கள் ஏறி சறுக்கிய குதிரை. சிங்களத்துடன் மட்டுமல்ல அயல்நாட்டுடனும் பேசி பேசியே, காலத்தை கடத்திய கனவான்கள் ஆடிய களம். இன்று சர்வதேச விளையாட்டு அரங்காக மாறிய பின்பும், எம்முள் மோதலை நிறுத்த எம் தலைமைகள் தயாரில்லை. அதனால் குரங்கின் கை புண் போல் தொடரும் எம் இழிநிலை.

(ராம்)