தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……

பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட கட்சியினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட தோழர் ஜோ செனிவிரட்ண 60களின் பிற்பகுதியில் அதிலிருந்து வெளியேறி 1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சி காலத்தில் புதிய தேடல்களில் ஈடுபட்டார்.
1970 களின் முற்பகுதியில் இன சமூக ஒற்றுமைக்கு சவாலான நிலைமைகள் உருவான போது இன சமூக நல்லுறவிற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

1977 இன வன்முறை 1979 இன் இறுதி வாக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் இயற்றப்பட்டு இன ரீதியான மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்த காலத்தில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் உருவானது. இன நல்லுறவு ஜனநாயகம் மனித உரிமை என்பன அதன் முக்கிய கருதுகோள்களாக இருந்தன. மறைந்த வண பிதா போல்கஸ்பஸ்- சாளி அபயசேகர, தோழர் பரராஜசிங்கம்- உபாலிகூரே- சுனிலா அபய சேகரா- ஜெயரண்டண மல்லியகொட, பேராசிரியர் சீலன் கதிர்காமர் போன்றவர்களுடனும் பிதா ஜெயசீலன் சுனந்த தேசப்பிரிய ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.

1980களின் நடுப்பகுதி வரை அந்த இருண்ட காலத்தில் இந்த நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
காணாமல் போதல் சிறை சித்திரவதை இனக்கலவரங்களுக்கு எதிராகவும் சமூக ஒற்றுமைக்காகவும் அது தன்னை அர்ப்பணித்திருந்தது.

1980களின் முற்பகுதியில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வண பிதா போல்கஸ்பசின் சத்தியோதய வில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணி தோழர்களுக்கான கருத்தரங்கொன்று தோழர்கள் நாபா முத்துலிங்கம் அகியோரின் ஏற்பாட்டில் கருத்தரங்கொன்று ஏறபாடு செய்யபட்டது. மிக அபாயகரமான கால கட்டத்தில் இந்த கருத்தரங்கிற்கான இடத்தை தனது பிரதான நிலையத்திலேயே வணபிதா போல்கஸ்பஸ்அவர்கள் ஏற்பாடு செய்துதவினார். இத் கருத்தரங்கில் ஈபிஆர்எல்எப் பின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வணபிதா போல்கஸ்பஸ், டயான் ஜெயதிலக, வரதராஜப்பெருமாள் பேராசிரியர் சின்னத்தம்பி ,ஜோசெனிவிரட்ண , பெ.முத்துலிங்கம் என பலதோழர்கள் உரையாற்றினர். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தோழர் பகீரதன் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார்
ஜோ அக்கருத்தரங்கில் இலங்கையின் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு பற்றி உரையாற்றினார். அந்த கருத்தரங்கு மிகவும் ஆர்வமும் மனக்கிளர்ச்சியும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

அதன் பின்னர் பல்வேறு சந்தப்பங்களில் நாம் சந்தித்துக் கொண்டோம். இணைந்து பயணித்தோம். ஜனநாயகம் மனித உரிமைகளுக்கான தெருப்போராட்டங்கள். இன சமூகங்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி அவர் பெருந்தொகையான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

விகல்ப கண்டாயம- மாற்று அமைப்பினரும் ஈபிஆர்எல்எப்பும் இணை அமைப்புக்களாக செயற்பட்டன. தோழர் ஜோ மறைந்த தோழர்களான எச் என் பெர்ணாண்டோ சிறில் காலகே, சாந்த போன்றவர்களும்
சிந்தன் டி சில்வா பியால்- பூரணகே டிசில்வா புல்சறா நயானி லியனகே ராம் மாணிக்கலிங்கம் பெ முத்துலிங்கம் தயாபால திரணகம திசரணி குணசேகர டயான் ஜெயதிலக என பலரும் அங்கத்துவம் வகித்தனர்.
இந்த அமைப்பு ஈபிஆர்எல்எப் பின் சகோதரத்துவ அமைப்பாகவும் திகழ்ந்தது.தோழர் நாபா இதற்கு பெரும்பங்களிப்பு நல்கினார்.

1980 களின் நடுப்பகுதியில் சென்னை குடந்தை என நாம் இன்பதுன்பங்களில் ஒன்றித்து வாழ்ந்தோம்.  வடக்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரிவையில் அவர் அங்கத்துவம் வகித்தார். பின்னர் ஏற்பட்ட நெருக்கடி காலத்தலும் அவர் எம்முடன் பயணித்தார்.
குறுகிய காலதில் கொழுப்பு திரும்பிய தோழர் ஜோ 1990 களின் முற்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக யுக்திய பத்திரிகை குழுவில் பணியாற்றினார்.
அதில் சுனந்த மனோரஞ்சன் லூசியன் சுனிலா என பலரும் பங்களித்தனர்.

17 வருட தொடர் ஜனநாயக விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதில் 1994 ஆட்சி மாற்றத்தில் யுக்திய குறிப்பிடத் தகுந்த பங்களிப்பை வழங்கியது. வடக்கிலும் தெற்கிலும் பெரும் மனித உரிமை மீறல்கள் புதை குழி அரசியல் நடந்த காலத்தில் “பயத்திலிருந்து விடுபட” இயக்கத்தை முன்நின்று நடத்தயவர்களில் தோழர் ஜோ முக்கியமானவர். தொடர்ச்சியாக அவ்வப்போது எமக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் செய்தவர். எமது பாதை செம்மையுறுவதற்கு இடையறாது உதவியவர்.

பிற்கால கட்டத்தில் அவர் ஓசோவின் கருத்துக்கள் பற்றிய தேடல்கள் சிங்கள மொழியில் நூலாக்கமும் செய்துள்ளார். நாடகம் சினிமா கலை இலக்கியம் மொழி என பன்முக ஈடுபாடு கொண்டவர். சரளமாக தமிழில் உரையாடுவார். அவருடைய மனைவியார் கடந்த வருடம் மறைந்ததன் பின்னர் மிகுந்த மன உளைச்சலும் தனிமையும் ஜோவை வாட்டியது. அவருக்கு 2 மகள்களும் ஒரு புத்திரரும். இறுதி நாட்களில் ஜாஎலவில் மகளுடன் வசித்தார்.

யுத்தத்திற்கு பின் யாழ்ப்பாணத்திறிகு ரயில் ஓடத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவர் திரும்பவும் வந்தார். முன்னர் 1981 யாழ் நூல்நிலையம் ஈழநாடு எரியுண்ட நாட்களில் யாழ்ப்பாணத்தில் அரச பயங்கரவாதம் என்ற பிரசுரத்துடன் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தினர் யாழ் வந்தார்கள் . ஒருபிரளயத்தின் பின்னர் தோழர் ஜோ பளைவரையிலான ரயிலில் தனது சகோதரருடன் வந்து ஓரிரு நாட்கள் எம்முடன் தரித்து சென்றார்.
அதன் பின்னர் எமது தோழமை தின நிகழ்விலும் பங்கு பற்றினார்.
மத்தாப்பாய் மின்னி மறைந்து போன காலம்.
தோழர் ஜோவிற்கு எம் பிரியாவிடை!

(தமிழர் சமூக ஜனநாய கட்சி) (SDPT)