நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும்.

(சஞ்ஜீவ பட்டுவத்த – தமிழில் மனோறஞ்சன்)

கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.