நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?

எம்மை நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்ய எத்தனையோ இனக்கலவரங்கள் ஏற்ப்படுத்தப்பட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என நாம் முடிவெடுத்த வேளையில் அது தவறு ஒட்டுமொத்த அடக்குமுறமைக்கு எதிராகா நாம் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனையில் சிங்கள முற்ப்போக்கு சிந்தனையாளரை தன் வசம் ஈர்த்தவர் நாபா.

அப்படி அவரால் ஈர்க்கப்பட்ட சிங்கள தேசத்து பெருமகன் தான் கறாத்தர் தோமஸ் ஜோ செனிவரத்ன. மொரட்டுவை எனும் கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் தனக்கு என ஒரு தனித்துவ மாண்புடன் வாழ்ந்த அந்த பெருமகன் கொழும்பு கேரி கல்லூரியில் ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியராக இருந்தபோது நாட்டின் இன அரசியலை ஏற்க மறுக்கும் அமைப்புடன் தன்னை இணைத்து கொண்டார்.

திரணகம, தயான் ஜயதிலக, புல்சரா லியனகே, திசரணி, சிந்தன் டி சில்வா, பியல், சிறில், முத்து, ராம் மாணிக்கலிங்கம் என பல தோழர்களுடன் அவரை நான் முதன்முதல் கொழும்பில் சந்தித்தேன். நபா   அறிவிக்க சொன்ன செய்தி ஒன்றை பரிமாறவே அவர்களை சந்தித்தேன். இந்தியாவில் அவர்களின் தோழர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஏற்பாடுகள் பூரணம் அடைந்துவிட்டது என்ற செய்தியே அது.

பயிற்சிக்கு என முதலில் இருபது தோழர்களை அனுப்புவதென முடிவாகி அவர்கள் இந்தியாவுக்கு  சுற்றுலா செல்வதுபோல காட்ட தேவையான பொருட்களை வாங்கி விமான நிலையம் வரை சென்று வழி அனுப்புவது வரை ஏற்பாடுகளை செய்யும்படி ஜோ தோழர் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம் அதுவரை ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் தான் உரையாடினோம்.

திடீரென ஜோ தோழர் தமிழில் என்னிடம் தோழர் இரண்டு இரண்டு பேராக பயணிக்கும் ஏற்பாடு செய்யுங்க அப்பதான் சந்தேகம் வராது என்றார். அவரின் அந்த தமிழ் உச்சரிப்பு மலையாளிகள் பேசும் தமிழ் போல இருந்ததால் முத்துவிடம் விசாரிக்க அவர் சொன்ன செய்தி அவரின் முன்னோரின் பூர்வீகம் கேரளா என்பதே. நாங்கள் தமிழ் நாட்டில் இருந்துவந்தது போல அவர்கள் கேரள வரவு என்றார்.

தோழர்களை இந்தியா அனுப்பும் வேளையில் ராம் மாணிக்கலிங்கம் சி ஐ டி இடம் பிடிபட்டதால் ஏனையவர்களும் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அதனால் ஜோவும் இந்தியா சென்று நாபாவுடன் இணைந்து கொண்டார். தயான் அவரது தந்தையார் அனுசரணையில் இந்திய தூதரக உதவியில் டெல்கி சென்றுவிட்டார். ஏனைய தோழர்களுக்கு சிவபுரம் முகாமில் பயிற்சி தொடங்கியது.

யாழ் நிலவரங்கள் பற்றிய செய்தியை நாபாவிடம் நேரில் கூற நான் சென்னை சென்றபோது நாபா ஊர் போய்விட்டதாக கிருபா கூறினார். அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு போவதென்றால் கும்பகோணம் போய்விட்டார் என்று அர்த்தம். அந்த அளவுக்கு எம்மை அரவணைத்த மண். அண்ணன் ஸ்டாலின் அவர்களின் அரவணைப்பில் ஆயுத பட்டறை, சிவபுரத்தில் எமது பயிற்சி முகாம் இருந்தது.

இரவு பயணித்து அதிகாலையில் கும்பகோணம் சென்று சிவபுரம் முகாமில் நான் நாபாவை சந்தித்த வேளை அவருடன் கூடவே உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தார் தோழர் ஜோ. என்னை சுகமா தோழர் என அதே குழையும் தமிழில் கேட்டவர் ஒரு தந்தைக்கு உரிய பரிவுடன் என் முதுகை தடவி கண்டது சந்தோசம் என்றார். ஆனாலும் அவரது குரலில் ஒரு ஏக்கம் இருப்பதை உணர்ந்தேன்.

நாபாவிடம் கூறவேண்டிய விடயங்களை கூறியபின் ஜோ தோழருடன் சிறிது நேரம் பேசுவதற்கும் அவகாசம் கிடைத்தது. எப்படி போகிறது வேலைத்திட்டம் என கேட்க மிகவும் நன்றாக போகிறது என்றவரின் குரலில் அத்தனை உற்சாகம் இல்லை. ஏதோ குறை ஒன்று இருப்பதை உணர்ந்து அதை நாபாவிடம் கூறினேன். சிங்கனுக்கு வீட்டு ஞாபகம் வந்து சற்று சோர்வடைகிறார் என்றார் நாபா.

உண்மைதான் தோழர் நான் திடீர் என்று புறப்பட்டதால் ஒரு ஒழுங்கும் செய்யவில்லை. பாதுகாப்பு காரணமாக அவர்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை அதுதான் கொஞ்சம் வருத்தம் என்றார். தனது மனைவி மற்றும் மகள்களை (இரட்டையர்) பிரிந்த ஒரு தந்தையின் மன நிலையில் அவர் இருந்தார். அவர்களும் கொழும்பை அண்மித்து இருந்ததால் நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன்.

அவரது முகத்தில் தெரிந்த அந்த சந்தோசம் இன்றும் என் மனக்கண்ணில். தோழர் உங்களால் முடியும் என்றால் என் மனைவி கொழும்பு பெரியாஸ்பத்திரியில் தான் வேலை செய்கிறா. அவவை சந்தித்து நான் நலமாக இருப்பதாக கூற முடியுமா என்றார். முடியும் என்றேன். மிகுந்த சந்தோசத்துடன் தனது மனைவி பெயர் எந்த பகுதியில் என்ன வேலை என்ற விபரங்களை கூறினார். நான் கொழும்பு திரும்பினேன்.

அப்போது நான் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்ததால் எனது வேலை நிமித்தம் வழங்கப்பட்ட அடையாள அட்டை எனக்கு மிகுந்த பாதுகாப்பை தந்தது. ஒரு நிறுவன அதிகாரிக்கு கிடைக்கும் மரியாதை நிமித்தம் எவரும் என்னை சந்தேகபார்வைக்கு உட்படுத்துவதில்லை. அதனை பயன்படித்தி பல வேலைகளை என்னால் செய்ய முடிந்தது. ஜோ தோழர் மனைவியை சந்தித்தேன்.

அது ஒரு சுவாரசியமான சந்திப்பு. வைத்தியசாலையில் சக ஊழியரிடம் நான் ஜோவின் மனைவி பெயரை கூறி விசாரித்தபோது அவர்கள் எனக்கு அவர் பணிபுரியும் பகுதிக்கு செல்லும் வழியை கூறினார். இலங்கையின் மிக பெரிய வைத்தியசாலை. அவரது பணி இடத்தை கண்டுபிடித்து அவரிடம் நான் ஜோவின் நண்பன் என கூறியபோது அவர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். நம்பமறுத்தார்.

காரணம் அப்போது மிகவும் மெல்லிய முப்பது வயது கூட நிரம்பாத என்னை எப்படி தனது கணவரின் நண்பன் என்றால் நம்புவார். என்னை சந்தேகத்துடன் பார்க்க நான் அவரிடம் தயான், புல்சரா,சிந்தன் சாந்தன் போலவே நானும் நண்பன் என்றேன். புரிந்துகொண்டவர் கணையாழியுடன் வந்த அனுமானை கண்ட சீதை போல ஜோவின் உடல் நலம் பற்றி கண்கள் பனிக்க விசாரித்தார். நான் நலம் என்றேன்.

திடீரென எனது நலன் பற்றி கேட்டவர் எனது பாதுகாப்பு பற்றி அக்கறையாக கேட்டார். நான் எனது நிறுவன அடையாள அட்டையை காட்டியபோது ஆறுதல் அடைந்தவர் எதற்கும் அவதானமாக இருங்கள் என ஒரு தாயின் அக்கறையுடன் கூறினார். தானும் பிள்ளைகளும் மொரட்டுவையில் நலமாக இருப்பதாகவும் ஜோ பற்றிய கவலைதான் இவ்வளவு காலமும் என கூறி நிம்மதி அடைந்தார்.

சில வாரங்களில் மீண்டும் சென்னை செல்லுமுன் அவரை சந்தித்தேன். ஜோவிடம் கொடுக்கும்படி சில பொருட்களை தந்தார். அவற்றை நான் ஜோவிடம் கொடுத்தபோது அவர் மிகவும் சந்தோசப்பட்டார். அவரின் மனைவி என்னை சந்தேகித்ததை கூறியபோது பெரிய குரலில் சிரித்தார். தன் வயதை கூட மறந்தவராக மச்சான் மிச்சம் பெரிய நன்றியடா என தோழில் தட்டி குரல் தழுதழுத்தார்.

சில மாதங்களின் பின் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஜனநாயக அத்துமீறல் வடக்கு கிழக்கில் எமது பிரசன்னத்தை கேள்வி குறியாக்கி வவுனியால் தோழர் வெற்றி சில தோழர்களுடனும் உகந்தையில் தோழர் ரட்ணம்  சில தோழர்களுடனும் காடுகளில் மறைந்து செயல்பட்ட வேளையில் அவர்களுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தி நாபாவுக்கு தகவல்களை பரிமாறுவதில் மும்மரமாக இருந்த வேளையில்

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு பல நிகழ்வுகளில் பின் நாம் மாகாண சபையை அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டோம். அமைய இருந்த மந்திரிசபை நாபாவின் ஆலோசனைப்படி பல்லின மந்திரி சபையாக அமையவென தயான் ஜயதிலகவை சிங்கள் சமூக பிரதிநிதியாக உள்வாங்கிய போதும் அவர் பிரேமதாசாவின் வெற்றிக்கு பின்பு மந்திரிசபையில் இருந்து தானே விலகிக்கொண்டார்.

நாபாவின் உடனடி தெரிவு தோழர் ஜோ. இந்தியாவில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் குடும்பத்தை பிரிந்து சிரமப்பட்டு பின் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்ப்பட்டதால் நீண்ட காலத்தின் பின்பு குடும்பத்துடன் இணைந்தவர் எந்த மறுப்பும் இன்றி நாபாவின் வேண்டுதலை ஏற்று திருமலைக்கு வந்தார். அவருடன் மனைவியும் இரட்டை பிறவிகளான மகள்களும் இடம் பெயர்ந்து திருமலை வந்தனர்.

தன்னையும் தனது குடும்பத்தையும் மட்டும் கவனத்தில் கொள்ளாது தான் விரும்பி வரித்துக் கொண்ட கொள்கைக்காக, நாபாவுடனான நட்புக்காக எந்த சிரமத்தையும் ஏற்கும் மனநிலையில் தான் அவர் திருமலை வந்தார். அமைச்சராக இருந்த காலத்தில் மிகவும் சாதாரண மனிதனாக அனைவருடனும் பழகியதால் அனைவராலும் நேசிக்கப்படும் விரும்பப்படும் மனிதராக திகழ்ந்தார்.

பிரேமதாசா பிரபாகரன் கூட்டு மீண்டும் நிலையற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்கிய போது தனது குடும்பத்தவரை தென்னிலங்கை அனுப்பிவிட்டு அவர் நாபாவுடன் மீண்டும் இந்தியா செல்லவேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இறுதிவரை நாபாவின் நட்ப்பை விரும்பி இருந்த அவரின் மனஉறுதியை நாபாவின் அகாலமரணம் நிலைகுலைய செய்தது. மரணநிகழ்வில் நடைபிணமாகவே காணப்பட்டார்.

நாபாவுக்கு பின்னான தனி நபர் செயல்ப்பாடுகள் ஈ பி ஆர் எல் எப் ஸ்தாபனத்தை நிலைகுலைய செய்த போது மிகவும் மனம் வருந்தினார். தென்னிலங்கையில் அவர்சார்ந்த அணியினர் பலரும் விலகி சென்ற வேளையில் அவர் சிறிது காலம் மொரட்டுவையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது அவரை தேடிச்சென்று சந்தித்தது தான் நான் அவரை கண்ட கடைசி சந்திப்பு.

அதற்கு பின்பு சிலவாரங்கள் சென்றபின் எந்தவித விசாரணையும் இடம்பெறாது கட்சியில் இருந்து நான் விலக்கப்பட்டதாக வீரகேசரி பத்திரிகையை பார்த்து தெரிந்து கொண்டேன். இடைக்கால செயலாளர் நாயகத்துக்கு என்னை வெளியேற்றும் அதிகாரம் இல்லை என அறிவித்துவிட்டு அன்றில் இருந்து ஈ பி ஆர் எல் எப் உடனானா தொடர்பை நிறுத்திவிட்டேன். ஜோ செனிவரத்ன உட்ப்பட.

1994ம் ஆண்டு ஏற்ப்பட்ட அரசியல் மாற்றம், பல நல்ல நிகழ்வுகளுக்கு அத்திவாரம் இட்டது. சந்திரிகா ஜனாதிபதி ஆனவுடன் தென்னிலங்கையில் ஒரு நல்லிணக்க ஏற்பாட்டை செய்ய வெண்தாமரை இயக்கம், தவளம போன்ற நிகழ்வுகளை அவரின் மந்திரிசபையில் இருந்த அமைச்சர் மங்கள சமரவீர மூலம் முன்னேடுத்த வேளை அதற்க்கு ஜோ செனிவரத்ன தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.

ஈ பி ஆர் எல் எப் அமைப்பில் இருந்த பல தோழர்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் வாவிக்கரை பத்திரிகை, மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், ரூபவாகினி கூட்டுத்தாபனம் போன்றவற்றில் இணைத்துக்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். சந்திரிகா காலத்தில் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்ப்படும் என்று திடமாக நம்பியவர்களில் ஜோ செனிவரட்னவும் ஒருவர்.

அவரது நம்பிக்கை பொய்த்துப் போனபோதும் அவர் தனது இன நல்லுறவு செயல்ப்பாட்டில் இருந்து விலகவில்லை. அவரிடம் இன மேலாண்மை சிந்தனை என்றுமே இருந்ததில்லை. வித்துவ செருக்கோ அதிகார மமதையோ அவரை என்றும் நிலைகுலைய செய்ததில்லை. நாபாவை நேசித்த அவரிடம் நான் கண்டது நாபாவை போன்ற மனித நேய சிந்தனையை மட்டுமே. சென்றுவா தோழா நாபாவை சந்திக்க.

– ராம் –