நிதீஷை நிம்மதியிழக்க வைத்த சிராக்: முள் கிரீடமாகும் முதல்வர் பதவி!

தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த சிராக், ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக மட்டும் சிலம்பம் சுழற்றத் தொடங்கினார். ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை இறக்கி அக்கட்சியைத் தோற்கடிக்கப் போவதாகவும் கூறினார். அதேசமயம், மாநில அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய அவர், தேசிய அளவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
Powered by Ad.Plus

ஒருபக்கம் பிரதமர் மோடியைப் புகழ்ந்துகொண்டே, மறுபக்கம் பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை விமர்சித்தார். இதன் மூலம் மாநில பாஜக மீது அதிருப்தியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். கூடவே, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்கப்போவதாகப் பேசிவந்த அவர், “பிரதமர் மோடிக்காக வாக்களியுங்கள். இல்லையென்றால் என் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.

இவை அனைத்துமே, பிஹாரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும் பாஜக வகுத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும், அதில் சிராக் ஓர் அங்கம் என்றும் கருதப்பட்டது. அது உண்மையெனில், அந்தத் திட்டம் நிறைவேறியிருக்கிறது என்றே கருதலாம். இந்தத் தேர்தலில், 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது ஐக்கிய ஜனதா தளம். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (75), பாஜக (74) ஆகிய கட்சிகளுக்குப் பின்னே மூன்றாவது இடத்தில் அக்கட்சி இருக்கிறது.

எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டதால் பல தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனதை நிதீஷ் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் கசப்புடன் ஒப்புக்கொள்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 122 இடங்களில் வென்றிருக்கும் நிலையில், நிதீஷ் மீண்டும் முதல்வராவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை முதல்வர் பதவி அவருக்கு முள் கிரீடமாகவே இருக்கப்போகிறது.

கடும் குற்றச்சாட்டுகள்

ஒருவகையில் நிதீஷுக்கு எதிராக வாக்குகள் குவிய முக்கியக் காரணம், ‘ஊழல் கறைபடாதவர்’ என அவர் மீது இருந்த பிம்பத்தை சிராக் தகர்த்ததுதான். 2015-ல் பிஹாரில் மதுவிலக்கை அமல்படுத்த நிதீஷ் முடிவுசெய்தபோது அதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தவர் சிராக். ஆனால், இந்தத் தேர்தலில் அதை வைத்தே நிதீஷ் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். மதுவிலக்கு எனும் பெயரில் மதுபானக் கடத்தல் பிஹாரில் அதிகம் நடக்கிறது என்றும், அதன் மூலம் பலனடைவது நிதீஷ்தான் என்றும் குற்றம் சாட்டினார்.

2.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநில வளர்ச்சிக்காக நிதீஷ் அரசு கொண்டுவந்த ‘சாத் நிஷ்சய்’ (ஏழு தீர்வுகள்) திட்டத்திலும் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய சிராக், “பாஜக துணையுடன் எல்ஜேபி ஆட்சிக்கு வந்தால், இது குறித்து விசாரிக்கப்படும். நிதீஷ் சிறைக்கு அனுப்பப்படுவார்” என்றெல்லாம் மிரட்டினார். நிதீஷின் அரசியல் வாழ்க்கையில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து இத்தனை கடுமையான வார்த்தைகளை யாரும் பயன்படுத்தியதில்லை. அத்துடன், “முதல்வர் பதவியை நிதீஷ் அவ்வளவு சுலபமாக விட்டுத்தர மாட்டார். பதவிக்காக தேஜஸ்வி யாதவ் முன்புகூடக் கைகூப்பி நிற்பார். தேவைப்பட்டால் ராஞ்சி சிறைக்குச் சென்று லாலுவைச் சந்திக்கவும் தயங்க மாட்டார்” என்றும் வாரினார் சிராக்.

2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்த மகா கட்பந்தன் பெரும் வெற்றியைப் பெற்றபோது, எதிர் முகாமிலிருந்து அவரை வாயார வாழ்த்தியவர் சிராக். நிதீஷின் வளர்ச்சிப் பணிகளுக்கான அங்கீகாரம்தான் அந்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வெற்றிக்கு லாலுவை விடவும் நிதீஷின் பங்குதான் அதிகம் என்று பாராட்டிய சிராக், “மிகுந்த நிதானத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை நிதீஷ் மேற்கொண்டார்” என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்தத் தேர்தலில் நிதீஷ் மேடையில் நிதானமிழந்து மக்களிடம் சீற வேண்டிய நிலைக்கு அவரைக் கொண்டு சென்றுவிட்டார்.

‘மோடியின் அனுமன்!’

அதேபோல், சிராக்கின் பேச்சுக்கு மாநில பாஜக தலைவர்கள் மட்டுமே எதிர்வினையாற்றினர். டெல்லி தலைமை பட்டும்படாமலும் இருந்தது. இத்தனைக்கும் மோடியின் படத்தைப் பிரச்சார மேடைகளிலோ, போஸ்டர்களிலோ சிராக் பயன்படுத்தக் கூடாது என்று பாஜக கண்டிப்பாகச் சொல்லிவிட்டது. ஆனால், அதெல்லாம் அவருக்குப் பொருட்டாக இருக்கவில்லை. “போஸ்டர்களில் மோடியின் உருவத்தைக் காட்ட முடியாவிட்டால் என்ன? அவரது உருவத்தை என் நெஞ்சத்துக்குள் வைத்திருக்கிறேன்” என்றார். ‘மோடியின் அனுமன்’ என்று தன்னைத்தானே விளித்துக்கொண்டார்.

கிட்டத்தட்ட பாஜகவுக்காகத் தனது கட்சியையே பலிகொடுக்க வேண்டியிருக்கும் சூழல் என்றாலும் ஒரு கணம் கூட அவர் முகத்தில் கவலை தெரியவில்லை. நிதீஷுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதைவிட அவருக்கு வேறு எந்த விஷயமும் இந்தத் தேர்தலில் முக்கியமாக இருக்கவில்லை. அதனால்தான் 134 இடங்களில் போட்டியிட்டு, 5.66 சதவீத வாக்குகளுடன் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தனது கட்சி வென்றிருந்தாலும் புன்னகை முகத்துடனேயே வலம் வருகிறார் சிராக். தேர்தல் முடிவுகளால் ‘திருப்தி’ அடைந்திருக்கும் அவர், பிஹாரில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்தவும்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதாகச் சொல்லிக்கொள்ளத் தயங்கவில்லை.

சாதிக் கணக்கு

பட்டியலின சமூகத்தினரை வாக்கு வங்கிகளாக மட்டுமே நிதீஷ் கருதுவதாக சிராக் முன்வைத்த குற்றச்சாட்டு இந்தத் தேர்தலில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. 17 சதவீதம் பட்டியலினச் சமூகத்தினர் வசிக்கும் பிஹாரில், சிராக் பாஸ்வான் சார்ந்திருக்கும் துஸாத் சமூகத்தினர் 5 சதவீதம். பட்டியலினத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினரின் கணிசமான ஆதரவும் எல்ஜேபிக்கு உண்டு. ஐக்கிய ஜனதா தளத்தின் பின்னடைவுக்கு இந்தக் காரணிகள் முக்கியமானவை.

அதேசமயம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் பாஜகவுக்கும் மோடிக்கும் பரவலான ஆதரவு உண்டு. உஜ்வாலா திட்டம், ஜன் தன் திட்டம் போன்றவற்றின் மூலம் கிடைத்த ஆதரவு அது. சாதகமான இந்த அம்சமும், மகாதலித் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் நிதீஷ் குமார் எடுத்த முன்னெடுப்பும் ஓரளவு கைகொடுத்திருக்கின்றன.

முந்தைய வரலாறு

ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை, ஆளும் கூட்டணியில் பலவீனமான ‘ஜூனியர் பார்ட்ன’ராக இருப்பது இது முதல் முறையுமல்ல. 2015 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து களம் கண்டார் நிதீஷ். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குப் பின்னர், பிஹாரில் பாஜகவின் கை ஓங்கிவந்த நிலையில் அதைத் தடுக்க அவர் தேர்ந்தெடுத்த வழிமுறைதான் அது. (பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, மதவாதத்துக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதீஷ் வெளியேறியது நினைவிருக்கும்!)

2015 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்தது 71 இடங்கள்தான். ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களில் வென்றிருந்த நிலையில் கூட்டணியில் அக்கட்சியின் ஆதிக்கம்தான் இருந்தது. அப்போது தேஜஸ்வி யாதவுக்குத் துணை முதல்வர் பதவி என்பன போன்ற சமரசங்களைச் செய்ய வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் லாலு குடும்பத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதாகக் கருதிய நிதீஷ், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இறுதியாக மகா கட்பந்தன் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக துணையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.

இன்னொரு சுவாரசிய வரலாறும் உண்டு. 2005 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தத் துணை புரியுமாறு ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அழைப்பு விடுத்த நிதீஷ், முதல்வர் பதவியை அவருக்கு விட்டுத் தரவும் உசிதமாக இருந்தார். ஆனால், ராம் விலாஸ் பாஸ்வான் வைத்த முதல் நிபந்தனை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற வேண்டும் என்பதுதான். நிதீஷ் அப்போது அதற்குத் தயாராக இல்லை. இப்போது நிலைமை எப்படி எப்படியோ மாறிவிட்டது!

இனி என்ன ஆகும்?

பிஹாரின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்துவிட்ட நிலையில், தனியாக அரசியல் களத்தில் காலத்தை ஓட்டுவது சிராக்குக்கும் பெரும் சவால்தான். பாஜகவின் தயவையே அவர் நம்பியிருக்கிறார். மத்திய அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பும் அவருக்கு இருக்கிறது. பட்டியலின சமூகத்தினரின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள சிராக் போன்ற ஒரு தலைவர் அவசியம் என்பது பாஜகவுக்கும் தெரியும். இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எல்ஜேபி திரும்புவது குறித்தும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. எனினும், இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பிஹார் அரசியலைப் பொறுத்தவரை நீண்ட காலத் திட்டத்தில் இருக்கும் பாஜக, இப்போதைக்கு நிதீஷுக்கான ஆதரவைத் தொடரும் என்றே கருதப்படுகிறது. எனவே, அவரே மீண்டும் முதல்வராவதில் சிக்கல் இருக்காது. எனினும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க பாஜக தயங்காது. மறுபுறம், சிராக் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நிதீஷ். ஆனால், மிக பலவீனமான நிலையில் இருக்கும் சூழலில் யாரையும் பகைத்துக்கொள்ள அவர் விரும்ப மாட்டார்.

உண்மையில், சிராக்கின் தாக்குதல் தொடர்பாக ஏதேனும் பேசி பாஜகவைச் சீண்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள், “சிராக்குக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் மறைமுகக் கூட்டணி இருக்கிறது. தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், அரசியல் பிழைப்புக்காகவும் இப்படி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், தேர்தல் முடிவுகளை ஏற்க விரும்பாத ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர்ந்து போராடும் முடிவில் இருக்கின்றன. எனவே, இனி நிதீஷ் நிம்மதியாக இருப்பது கடினம்தான்!