நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு

அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் கையாள்வார்கள். அதுவும், ‘பேத, தண்ட’ முறைகளில் அதிக ஈடுபாடுள்ள ராஜபக்‌ஷர்கள், எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கும், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களே பெரிய சாட்சி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, வெள்ளிக்கிழமை (08) இரவோடு இரவாக, அதுவும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, பல்கலைக்கழக நிர்வாகம் திருட்டுத்தனமாக இடித்து அழித்திருக்கின்றது.

இந்தப் பேடித்தனத்துக்கு எதிராக, தமிழ்த் தேசிய பரப்பும் வெளிநாடுகளும் ஒரே குரலில் நின்று கோசம் எழுப்ப ஆரம்பித்தன. நிலைமை கையை மீறிச் சென்றுவிட்ட நிலையில், இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல், திங்கட்கிழமை (11) மீண்டும் நாட்டப்பட்டிருக்கின்றது. அதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, பொலிஸாருடனான உரையாடலொன்றில் தெளிவாகவே கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, உரிய அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டதான வாதமொன்று, துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரசாங்கம் என்கிற அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், வடக்கு, கிழக்கு பூராவும் அமைக்கப்பட்டு இருக்கின்ற இராணுவ நினைவுச் சின்னங்கள், போர் வெற்றிக் கட்டுமானங்களுக்கான அனுமதியை, யார் வழங்கியது என்கிற கேள்வி எழுகின்றது. அரச காணியாக இருந்தாலும், பொது இடத்தில் கட்டுமானமொன்றை எழுப்புவதற்கான அனுமதியை, அந்தத்தப் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் வழங்க வேண்டும். போர் முடிந்த கையோடு எழுப்பப்பட்ட இந்தக் கட்டுமானங்களுக்கான அனுமதியை, இராணுவம் யாரிடத்தில் இருந்து பெற்றது என்கிற கேள்வி எழுகின்றது.

இன முரண்பாடுகளை விதைக்கும் எந்தவொரு நினைவுச் சின்னங்களும், கட்டுமானங்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்கிற வாதத்தை முன்வைக்கும் தென் இலங்கையும் அவர்களின் முகவர்களும், இராணுவத்தினரின் வெற்றிச் சின்னங்களையும் கட்டுமானங்களையும் எந்த நிலைப்பாட்டோடு அணுகுகிறார்கள்? அவை, இன, மத இணக்கப்பாட்டின் அடையாளங்களா? இராணுவ வெற்றி அடையாளங்கள் எழுந்து நிற்கும் இடங்களில், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் யாரும் கொல்லப்படவில்லையா?

போர்க் காலத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்கான முனைப்புகளையே, இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நிலைப்பாடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அந்த மக்கள் கொல்லப்பட்ட இடங்களில் எழுப்பப்பட்டிருக்கின்ற இந்தக் கட்டுமானங்களை என்ன பெயர்களால் அழைப்பார்கள்?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஒரு கட்டத்தில், தனி ஈழம் என்கிற நிலையை அடைந்தது. அதற்காக ஆயிரமாயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தனி ஈழத்துக்கான ஏற்பாடு, ஒரே நாளில் ஆரம்பித்துவிடவில்லை. அது, இணக்கமான வழிகளில் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான கட்டங்கள், தென் இலங்கையால் மறுதலிக்கப்பட்ட நிலைகளில், அஹிம்சைப் போராட்டங்களும் தோற்றுப்போன புள்ளிகளில் உருவானதாகும்.

தனி ஈழக் கோரிக்கை எழுந்ததன் பின்னாலான, தார்மீக அடிப்படையொன்று இருந்தது. இன்றைக்கு இருக்கும் நிலைப்பாடுகளில் வழியில் தமிழ் மக்கள் தனி ஈழம் என்கிற நிலைப்பாட்டில் இருந்தும் இறங்கிவிட்டார்கள். ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள்.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணியோ (ஜே.வி.பி), வர்க்க ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்து, ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றுவதற்கான வன்முறைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்களின் அடையாளங்களைப் பேணுவதற்கு, இந்த நாட்டில் எந்தத் தடையும் இல்லை. பல்கலைக்கழகங்களில், ஜே.வி.பி நினைவுச் சின்னங்கள் இன்னமும் உண்டு. அவர்களின் மறைந்த தலைவர் ரோஹண விஜயவீரவை நினைவேந்தும் நிகழ்வுகள், இலட்சக்கணக்கான மக்களின் பங்களிப்போடு வருடாந்தம் நடத்தப்படுகின்றன. அவையெல்லாம், தென் இலங்கைக்குப் பிரச்சினைக்கு உரியவை அல்ல

ஆனால், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவது, தென் இலங்கைக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது அடிப்படையில், போரினால் உயிரிழந்த அனைத்துத் தரப்பினரையும் அடையாளப்படுத்தும் ஒன்றுதான்.

இறந்துவிட்ட பின்னர், எதிரியும் இல்லை; துரோகியும் இல்லை; எல்லோரும் மரணித்தவர்கள். அவர்களை அஞ்சலிக்க யாருக்கும் உரிமை உண்டு. அதனை அனுமதிப்பதுதான் மனிதம். அந்த மனிதத்தை ஆக்கிரமிப்பாளர்களும் பேரினவாதிகளும் அவர்களின் முகவர்களும் மறந்து செயற்படலாம். ஆனால், புலமைச் சொத்தாகத் தன்னை வெளிப்படுத்தும் பல்கலைக்கழகமொன்று, அதை நிராகரிப்பதும் நினைவுத்தூபியை இடித்து அழிப்பதும் என்ன வகையிலான தார்மீகம் என்று தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் போர்க் காலத்தில், யாழ். பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் அவர்களின் உறவினர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பல்கலைக்கழக வளாகத்தில் தூபி அமைத்து நினைவேந்துவது, எந்த அடிப்படையில் அற மீறலாகும்?

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றும் போர் வெற்றிச் சின்னமல்ல. அது, பேரழிவின் நினைவுச் சின்னம். இன்னொரு தடவை இவ்வாறான பேரழிவொன்று யாருக்கும் எந்தவொரு தருணத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்கான அடையாளம். நினைவேந்தல் என்பது, நினைவுகளின் வழியாக மாண்டவர்களை, அஞ்சலிப்பதற்கான தருணம் மாத்திரமல்ல; கடந்த காலத்து அழிவுகளை மீள நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கான பாடமும் கூட! நினைவுத்தூபிகள் உலகம் பூராவும் பேணப்படுவது, இதன் போக்கில்தான்.

அப்படியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த காலங்களில் குரல் எழுப்பி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் யாழ். பல்கலைக்கழகம், நினைவுத்தூபி விடயத்தை எவ்வளவு நிதானமாகவும் ஆக்கபூர்வமாகவும் கையாண்டிருக்க வேண்டும்?

அரசின் அழுத்தத்தால் அதை அகற்றும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பதற்கு முன்னராவது, அந்தத் தூபியின் நியாயப்பாடுகளைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமா? நினைவுத்தூபியை இன முரண்பாடுகளுக்கான அடையாளம் போன்று சித்திரித்தது, தென் இலங்கை மாத்திரமல்ல; ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமும் செய்ததாகவே, நடந்த நிகழ்வுகளைக் காணும் போது தோன்றுகின்றது.

மீண்டும் அமைக்கப்படவுள்ள தூபி, ‘சமாதானத்துக்கான தூபி’ என்று துணைவேந்தர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்திருக்கின்றார். தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் தரப்புகளின் கவலைகளையும் துக்கங்களையும் நிராகரித்துக் கொண்டு ஆரம்பிக்கும் எந்தச் செயற்பாட்டில் இருந்தாவது சமாதானம் பிறக்குமா? கவலைகளையும் துக்கங்களையும் ஆற்றுப்படுத்துவதற்கான வெளிகளையே நிராகரித்துக் கொண்டு, சமாதானம் பற்றி எந்தவொரு தரப்பினாலும் பேச முடியாது.

தென் இலங்கையின் சமாதான உரையாடல்கள், கடந்த காலத்தில் எப்படி பொய்யாக நிகழ்ந்தனவோ, அதேமாதிரியான தோரணையொன்றை ‘சமாதானத்தூபி’ என்கிற பெயரில், துணைவேந்தர் செய்ய நினைக்கின்றார். பல்கலைக்கழக நிர்வாகமும், துணைவேந்தரும் நடந்துவிட்ட தவறுகளைத் திருத்த வேண்டுமாயின், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அதே இடத்தில், அதே வடிவத்தில் மீள நிர்மானிப்பதன் ஊடாகவே சாத்தியப்படுத்த முடியும்.

இந்த இடத்தில், யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட புலமைத்தரப்பிடம் சொல்லிக் கொள்ள இருக்கும் விடயம், மாணவர்களுக்கு பாடவிதானங்களைக் கற்பிப்பது மாத்திரம் உங்களது வேலையல்ல. அதையும் தாண்டி, புலமையாளர்களாக நீங்கள் சமூகத்தில் அங்கிகாரம் பெற வேண்டுமானால், மாணவர்களை சரியான வழிகளில், துணிச்சலாக வழிநடத்துங்கள். பிரச்சினைகளின் போது, அதன் தன்மைகளைப் புரிந்து கொண்டு, மாணவர்களை வழிநடத்துங்கள். ‘நமக்கு ஏன் வம்பு, வேண்டாத வேலை’ என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டு, பிறிதொரு தருணத்தில் அறம் போதிக்காதீர்கள்.

நினைவுத்தூபி விடயத்தில், அதை முறையான அனுமதியோடு அமைக்கும் பணிகளை, கடந்த காலத்தில் மாணவர்களிடத்திலும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் சரியான வழிகளில் உரையாடிச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு அனுமதியற்ற கட்டுமானங்களை நீக்குவோம், என்கிற வாதங்களை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது.

புலமைச் சமூகமாக எழுவது என்பது, சுயநல கட்டங்களையும் தாண்டியதாகும். ஆனால், அதை யாழ். பல்கலைக்கழக சமூகம், கடந்த சில காலங்களாக நிரூபிக்கத் தவறி வருகின்றது. நினைவுத்தூபி அழிப்பு விடயத்திலும் வெளிப்பட்டிருப்பது அதுதான்.