பயிரை மேய்ந்த வேலிகள்…(14)


இந்த சம்பவத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் பிடிபட்ட ஒரு இளைஞனின் நிலையில் இருந்து நான் எழுதவேண்டியதை கற்பனை செய்து பார்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது. என்னால் தொடர்ந்து எழுதவே முடியவில்லை. இந்த நிமிடம் வரை மனசுக்குள் வலிக்கின்றது. பொதுவாக இலகுவில் உணர்சிவசமாகத நான் இதை எழுத தொடங்கியபோது பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து யோசித்ததில் இருந்து மனச் சோர்வுடன் இதுவரை இருக்கின்றேன்.

(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளைமாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.
புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் வீடுகளுக்கு அனுப்பபட்டமையால் புலிகளிடம் பிடிபட்டால் மரணம் நிச்சயம் என்கின்ற நிலை இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் பயத்தை ஏற்படுத்த தொடங்கியிருந்தது. அவர்களுக்கும் வாழ்வா சாவா என்கின்ற நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்தனர்.

மக்கள் சற்று துணிந்த நிலையில் பிடித்துச் சென்று சில நாட்களுக்குள்ளேயே தங்கள் பிள்ளைகள் உடல் சிதறிபோவதால் ஆத்திரம் அடைந்து இறந்த உடலை கொடுக்க வருபவர்களை தாக்கவும் ஆரம்பித்தனர்.

அதுவரை புலிகளாலும் அவர்களின் மாவீரர் பணிமனையினராலும் வழங்கப்பட்ட உடல்கள் இப்போது சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டு புலிகளாக்கப்பட்ட புதியவர்களாலேயே இறந்து போனவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்குமாறு கூறப்பட்டது. அதாவது இறந்து போன உடல்களை கொண்டுசெல்பவர்களுக்கு மக்கள் அடிக்கதொடங்யிருந்த நிலையில் தாங்கள் செல்வதற்கு பதிலாக தங்களால் பிடித்து செல்லப்பட்ட புதியவர்களை புலிகள் மாற்றாக பயன்படுத்த தொடங்கியிருந்தனர். பிடித்துச் செல்லப்பட்ட மக்களின் பிள்ளைளை மக்களாலேயே தாக்கப்படும் நிலையை புலிகள் உருவாக்கிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தனர்.
சராசரியாக நாள்தோறும் ஓவ்வொரு கிராமங்களிலும் மூன்று நான்காக இருந்த வீரச்சாவுகளாகள் ஏழு எட்டு என அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாவுகள் இடம் பெற தொடங்கியிருந்ததால் கிராமங்களில் சிவப்பு மஞ்சள் தோரணங்களை அகற்ற வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. எங்கும் சாவு. திரும்பிய திசைகளில் எல்லாம் அவல ஓலங்களும், ஒப்பாரிகளும் இடைவிடாது ஒலிக்க தொடங்கியிருந்தன.

ஆனால் கிளிநொச்சி கரடிப்போக்கில் இருந்த மாவட்ட அரசியல் துறையினர் ஆட் கடத்தலில் ஈடுபடுகின்ற அதே நேரத்தில் போரில் உடல்சிதறி இறந்து போகும் இவர்களுக்காக ஒலி பெருக்கியில் சோககீதம் ஒலிபரப்புவதிலும் சலைக்காமல் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மறுபுறத்தில் காயமடைந்த பிள்ளைகளை தேடிதிரிந்த பெற்ரோர், பிடித்துக் கொண்டுச் சென்ற நாள் முதல் தங்கள் பிள்ளைகளை பற்றிய எந்த தகவலும் தெரியாமல் அலை மோதியவர்கள் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் அவலங்களின் உச்சமாக மாறத்தொடங்கியிருதன.

ஆனால் புலிகள் இயக்கத்தினரோ சற்றும் மனம் தளராது மீண்டும் மீண்டும் கட்டாயமாக ஆட்களை கடத்திச் செல்வதில் இரவு பகலாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தொடரும்..

(Rajh Selvapathi)