பயிரை மேய்ந்த வேலிகள்..(15)

(இறந்த பிள்ளையை பர்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.

இராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.

சிதைந்து போன உடல்களுக்கு பதில் மரக்குற்றியை வைத்து சீல்வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சீல் செய்யப்பட்ட சவபெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை பார்க்க முயன்று அந்த பெட்டிகளை உடைத்த பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
இவ்வாறான ஒரு துயர சம்பவம் முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பில் நடந்தேறியது. பிடித்து செல்லப்பட்டு 41வது நாள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று கூறி சீல் செய்யப்பட்ட பெட்டியை அவரது வீட்டிற்கு புலிகள் அனுப்பி வைத்தனர். வழமைபோல் அடுத்தவனின் பிள்ளையை பிடித்துச்சென்று அவரின் கொலைசெய்துவிட்டோம் என்கின்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒலிபெருக்கிகள் குறித்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கூடவே பெட்டியை உடைத்து இறந்துபோன தனது பிள்ளையை பார்க்க முயல்பவர்களை நையப்புடைக்கவென சில குண்டர்களும் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்றே உறவினர்கள் பெட்டியை உடைக்க முயன்றபோது அவர்களை புலிகள் தடுக்க முயன்றிருந்தனர். இருந்தும் உறவினர்கள் அவர்களையும் மீறி சவப்பெட்டியை திறந்துவிட்டனர்.
சீல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இறந்து போனதாக கூறப்பட்ட இளைஞனின் உடலுக்கு பதிலாக இரண்டு மரக்குற்றிகளும், வேறு சில தசைத்துண்டுகளும் போடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்த புலிகளையும், அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்த புலிகளையும் சரமாரியாக தாக்க தொடங்கினர். உடனேயே வந்தவர்கள் அந்த சவப்பெட்டியுடன்அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

சற்று நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் , தங்களை தாக்கியவர்களை அடித்து உதைத்து இழுத்துச்சென்றனர். இவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களில் கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு போர்க்களத்தில் விடப்பட்ட அந்த 21வயது இளைஞனின் தாயாரும் அவருடைய மூன்று தாய் மாமன்களும் இருந்தனர். சில நாட்களில் ஒரு தாய்மாமன் போர்க்களத்தில்பங்கர்வெட்டும்போது கொல்லப்பட்டுவிட்டார் என்று அவருடைய வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. ஏனையோருக்கு என்ன நடந்தது என்று அவர்களின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களால் கடைசிவரை அறியமுடியாமலேயே இருந்தது.

தங்களை எதிர்ப்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மூலம் மக்கள் தங்களை எதிர்க்காத சூழ்நிலையில் வைத்துக்கொள்ள புலிகள் தம்மால் இயன்ற அத்தனை வழிகளையும் அப்போது கையாண்டனர்.
தொடரும்..

(Rajh Selvapathi)