பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)

பற்குணம் 1972 நடுப்பகுதி வரை குச்சவெளி டி.ஆர்.ஓ வாக இருந்தார்.பின்னர் அன்றைய அரசினால் ஒரு சில பிரதேசங்கள் உதவி அரசாங்க அதிபர் தரத்துக்கு உயர்தப்பட்டன.அதில் தம்பலகாமம் பிரதேசமும் ஒன்று.இந்த பிரதேசத்துக்கு பற்குணம் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.இது மூதூர் தொகுதியில் உள்ள பிரதேசம் ஆகும்.இது இரட்டை அங்கத்தவர் கொண்ட தொகுதியாக இருந்தது.

இதில் முதலாவது பிரதிநிதியாக மஜீத் அவர்களும்,இரண்டாவது பிரதிநிதியாக தங்கத்துரை அவர்களும் இருந்தனர்.அன்றைய காலத்தில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்த மாவட்ட அரசியல் அதிகாரி நியமனத்தை அன்றைய அரசு அறிமுகப்படுத்தியது.இதனால் மூதூர் மஜீத் மாவட்ட அரசியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே நிர்வாகத்தில் அநாவசியமான குறுக்கீடுகள் செய்தவர்.இது மேலும் அவருக்கு வசதியைப் கொடுத்தது.ஆனால் அன்றைய அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா மிக செல்வாக்கு மிக்கவராக இருந்ததால் மஜீத்தால் அத்துமீற முடியவில்லை .

பற்குணம் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டது பிடிக்கவில்லை.ஏற்கனவே சபீதா உம்மா என்ற பெண்ணை வேலையிலிருந்து நீக்கியது தொடர்பாக மஜீத் ஆத்திரமாக இருந்தார்.இதேவேளை அவரது ஊரான கிண்ணியாவில் குணராசா (செங்கை ஆழியான்)டி.ஆர்.ஓ வாக பணிபுரிந்தார் .அவரும் மஜீத்துடன் முரண்பட்டு கொண்டிருந்தார்.மஜீத்தால் பற்குணத்தின் வரவை தடுக்க முடியவில்லை.

மஜீத் அமைச்சர் பிரதிநிதி என்ற முறையில் பற்குணம் தன்னைக் காணவருவார் என எதிர்பார்த்தார்.பற்குணம் போகவில்லை.இதேவேளை தங்கத்துரை தானாகவே வந்து பற்குணத்தை சந்தித்து வரவேற்றார்.இது மஜீத்திற்கு மேலும் கோபம் ஊட்டியது.அங்குள்ள தமிழ் கிராம சேவையாளரை இடம் மாற்றினார்.அதற்குப் பற்குணம் தனக்கு நெருக்கமான லத்தீப் என்ற கிராம சேவையாளரை நியமித்தார்.

மஜீத் அளவுக்கு அதிகமான சேவைகளை கிண்ணியாவுக்கு செய்தவர்.ஆனால் எல்லோரையும் அடிமைகள்போல நடத்த முற்பட்டார்.இதுவே அவர் பலரைப் பகைக்க காரணமாக இருந்தது.இது பற்குணம் குணராசா போன்றவரகளிடம் எடுபடவில்லை .இப்படியான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பற்குணம் தம்பலகாமம் உதவி அரச அதிபராக பணிபுரிந்தார் .அத்துடன் தனக்கு நம்பிக்கையான மயில்வாகனம் அவர்களை தன்னுடன் கூடவே வைத்திருந்தார்.

முரண்பாடுகள் காரணமாக பற்குணத்தை இடம் மாற்றுவதாக மஜீத் மீண்டும் சவால் விட்டார்.அரச அதிபர் ஆதரவு காரணமாக அவரின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.இதனிடையே குணராசாவை இடம் மாற்றினார்.மஜீத் மீதான கோபம் காரணமாக கிண்ணியா இஸ்லாமிய மக்களை கிண்டல்பண்ணி கொக்கரக்கோ என்ற கவிதையை பத்திரிகைகளில் எழுதினார்.இதில் பற்குணம் தன் அதிருப்தியை குணராசாவிடம் சொன்னதாக கூறினார்.

குணராசாவின் இடத்துக்கு பதிலாக பற்குணமே கிண்ணியாவின் பொறுப்பையும் ஏற்றார்.இது மஜீத் அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது.மஜீத் அவர்களின் தலையீடு ,காரணமற்ற எதிர்புக்களை இலகுவாக சமாளித்து தன் சேவைகளை தொடர்ந்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)