ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்

தினகரனின் ஆசிரியர் பதவியை ஆளுமையினாலும் ஆற்றலினாலும் அலங்கரித்தவராக பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் சிவாசுப்பிரமணியத்தை மாத்திரமே குறிப்பிட்டுக் கூற முடியும். பேராசிரியர் கைலாசபதியைப் போன்று பல்கலைக்கழகத்தில் கற்றுத் தேறி பாண்டித்தியம் பெற்ற கல்விமான் அல்ல சிவாசுப்பிரமணியம். ஆனாலும், ஊடகத்துறையில் மாத்திரமன்றி மும்மொழி ஆளுமை, சர்வதேச விவகார அறிவு, நிர்வாகத்திறன், இலக்கியத்துறை ஆற்றல் பேச்சுவன்மை என்றெல்லாம் சிவாசுப்பிரமணியத்தின் தனித்துவத்திறன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

‘சிவா’ என்று நண்பர்களால் நெருக்கமாக அழைக்கப்படும் சிவாசுப்பிரமணியத்தை ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று அவருடன் நட்புக் கொண்ட ஊடகத்துறையினர் சொல்வதுண்டு. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இலக்கண சுத்தமாகவும் சரளமாகவும் மேடையில் பேசக் கூடிய ஆற்றல் மிகுந்தவர் அவர். அதேவேளை மும்மொழியிலும் ஆக்கங்களை இலக்கண சுத்தமாகவும் சவைபடவும் எழுதக் கூடிய வல்லமை மிக்கவராக சிவாசுப்பிரமணியம் திகழ்ந்தார்.

அரசியல் ஆய்வு, இலக்கிய விமர்சனம், சர்வதேச விவகாரம், கவிதை என்று எதுவுமே அவரது பேனாவுக்குக் கட்டுப்படாமல் போனதில்லை. சிவாவின் எழுத்துகளில் ஒரு கிறுக்கலையோ, வெட்டித் திருத்தப்பட்ட இடத்தையோ காண முடியாது. சொல்ல வந்த விடயத்தை இரத்தினச் சுருக்கமாக மணிமணியாக எழுதிக் கொண்டே செல்வார். அன்றைய நாளில் அச்சுக் கோர்ப்பவர்களுக்கோ, இன்றைய நாளில் கணினியில் தட்டச்சு செய்பவர்களுக்கோ சிவாவின் எழுத்துகள் சிரமத்தைக் கொடுத்ததில்லை. சுவை நிறைந்த எழுத்து நடை என்பதற்காக அவரது கைப்பட எழுதிய ஆக்கங்களை தட்டச்சு செய்வதற்கு போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.

சிவா காலமானாரென்ற செய்தி நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்ததும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோர் பலர். ஊடகத்துறையைப் பொறுத்தவரை அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். அவர்களில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என்று பலரும் அடக்கம். சரியாகக் கூறுவதானால் சிங்கள நண்பர்களே சிவாவுக்கு அதிகம். அதற்குக் காரணம் ஊடகத்துறை மாத்திரமல்ல… அதற்குப் அப்பால் தீவிரமான இடதுசாரிப் பின்புலமொன்றை அவர் கொண்டிருந்தார்.

இடதுசாரிக் கொள்கைகள் மீதான நாட்டம் சிவாவுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்டு விட்டதாக அவரது நண்பர்கள் கூறுவதுண்டு. யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி தென்னிலங்கையிலும் அன்றைய இடதுசாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை அவர் இறுதி வரை பேணி வந்துள்ளார்.

சிங்கள நண்பர்களுடன் சிவாசுப்பிரமணியம் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தமைக்கு அவரது மொழியாற்றலும் ஒரு காரணமெனக் கூற முடியும். தினகரனின் இணையாசிரியராக அவர் பதவி வகித்த காலத்திலும், பிரதம ஆசிரியராகவிருந்த வேளையிலும் லேக்ஹவுஸின் சிங்களப் பத்திரிகைகளிலிருந்து சில ஊடகவியலாளர்கள் அவ்வப்போது சிவாவின் அறையினுள் பிரவேசிப்பதைக் காணலாம். அவர்களெல்லாம் சிங்களத்தில் கட்டுரைகளையும் செய்திகளையும் வடிப்பவர்கள். தங்களது ஆக்கங்களில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக உதவி நாடியே அவர்கள் சிவாவிடம் வருவதுண்டு.

சிங்கள ஊடகவியலாளர்களுக்கே பொருத்தமான சொல் எதுவெனக் கூறக் கூடியவர் சிவா என்றால் அதனை விட அவரது சிங்கள மொழிப்புலமைக்கு உதாரணம் தேவையில்லை. சிவாவின் ஆங்கிலத் திறமையும் தமிழ்த் தேர்ச்சியும் கூட இவ்வாறானதுதான். உள்நாட்டு அரசியல் தொடர்பாகவோ அல்லது சர்வதேச விவகாரங்கள் குறித்தோ புதிதாக எதையும் கேட்டறிவதற்கோ, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கோ லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்களுக்கு சிவா என்பவர் ஒரு பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார். எனவேதான் அவரை ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்றார்கள்.

பட்டங்கள் ஆற்றலைக் கொண்டு வருவதில்லை; பட்டங்கள் பதவிகளை அலங்கரிப்பதுவுமில்லை.

இதற்கு உதராணமாக அவரையே காண முடிந்தது. சிவா என்ற மனிதன் மூலமாக தினகரனின் ஆசிரியர் நாற்காலிதான் பெருமை பெற்றுக் கொண்டதென்று கூறுவதே இங்கு மிகவும் பொருத்தம்.

பல்கலைக்கழக ஜாம்பவான்களால் எல்லாம் முடியாதபடி இந்த மனிதரால் எவ்வாறு இத்தனை திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிந்தது எனக் கேட்டால், அவரது தொடர்ச்சியான வாசிப்பும் கேள்வி ஞானமுமே காரணம் எனலாம்.

தனது வீட்டில் ஒரு நூலகத்தையே அவர் பேணி வந்தார். அரசியல், ஊடகம், சர்வதேச விவகாரம், ஆன்மிகம், வானசாஸ்திரம், இலக்கியம் என்றெல்லாம் பல்வேறு துறைகளிலும் அங்கே நூல்கள் அடுக்கப்பட்டிருக்கும். நூல்களை வாங்குவதற்காக அவர் செலவிடுகின்ற பணமும் அதிகம். எந்தவொரு புத்தகத்தையும் சொல்லி வைத்தார் போல தனது நூலகத்திலிருந்து உருவியெடுப்பார்.

வாசிக்கும் வேளையில் குறிப்பு எடுத்துக் கொள்வது அவரது விசேட பழக்கம். ஆக்கமொன்றை எழுத வேண்டுமானால் சில புத்தகங்களை வாசித்து குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமெனக் கூறுவார் சிவா. ஊடகத்துறையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரி இத்தனை நேர்த்தியான பண்புகளைக் கொண்ட ஒரு மனிதனைக் காண்பது மிகவும் அரிது.

திறமைசாலிகள் அனைவருக்கும் பலமும் உண்டு; பலவீனமும் உண்டு. ஆனாலும், பலவீனங்களை முன்லைப்படுத்தாமல் பலங்களை மட்டும் வெளிக்காட்டும் மனிதனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் சிவாசுப்பிரமணியம்.

தினகரன் பத்திரிகையில் அவர் ஆசிரியராகப் பதவி வகித்த காலப் பகுதி அற்புதமானது. இடதுசாரி இயக்கங்களுடனான தொடர்பும், அதன் அரசியல் பின்புலங்களுமே அவர் தினகரனுக்குள் காலடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தன. 1996 ஆகஸ்ட் மாதம் இணையாசிரியராக இணைந்து சில காலத்தின் பின்னர் பிரதம ஆசிரியராகப் பதவியேற்றதும் தினகரனை நேர்த்திமிக்கதாக வடிவமைத்தார்.

அரசாங்க ஊடகங்கள் அனைத்துமே அன்றைய காலப் பகுதியில் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டுக் கிடந்ததால், சுயாதீனமான ஊடகப் பணியை ஆற்றுவதென்பது முடியாத காரியம். எனினும் தினகரனை சட்டகம் ஒன்றுக்குள் கொண்டு வர அவரால் முடிந்தது. “அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக அரச ஊடகங்கள் இருந்தாலும், எங்களால் முடிந்தளவு உச்ச காரியத்தை ஆற்றுவோம்” என்று கூறுவார் அவர்.

இலங்கையின் தமிழ் ஊடகத்துறையைப் பொறுத்தளவில் எந்தவொரு ஊடகவியலாளனுக்கும் ஆசான்கள் என்று சொல்லும்படியாக எவருமே இருந்ததில்லை. கற்றுக் கொள்ள வேண்டுமென்ற மனப்பக்குவம் இல்லாததோ அல்லது கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நன்னோக்கம் இல்லாததோ இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

ஆனாலும், சிவா என்ற மனிதன் தனது ஊடக நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்த விடயங்கள் ஏராளம். கற்றுக் கொள்வதற்கென்று அவரிடம் நிறையவே விடயங்கள் இருந்தன.

மொழியைக் கையாளும் முறை, ஆக்கங்களை வடிவமைக்கும் பாங்கு, இலக்கணச் சுத்தம் என்றெல்லாம் தனக்குக் கீழ் பணியாற்றுவோருக்கு ஆசிரியரைப் போன்று கற்றுத் தருவார் அவர். மொழிச்சுத்தம் பேணுவதில் அவர் போன்ற மனிதரைக் காண்பது அரிது.

2010 ஆண்டின் பிற்பகுதி அவருக்கு நெருக்கடி நிறைந்ததொரு காலப் பகுதி. அன்றைய ஆட்சியாளர்கள் அரச ஊடகங்கள் அத்தனையையுமே தங்களது மனம் போன போக்கில் கையாளத் தொடங்கினர். அரசியல் செல்வாக்குகளே அனைத்து இடங்களிலும் மேலோங்கியிருந்தன. ஆற்றலும் ஆளுமையும் மிகுந்தோரை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருப்பதைப் பார்க்கிலும், அடிவருடித்தனம் கொண்டோரை ஆசனத்தில் வைத்து அழகு பார்க்கும் கலாசாரமொன்று அன்று தலைதூக்கியிருந்தது. அத்தகைய கலாசாரமே தினகரனுக்கும் சோதனைக் காலமாகிப் போனது.

அவ்வேளையில் சிவாசுப்பிரமணியம் தனது பதவிக் காலம் பூர்த்தியடைவதற்கு முன்னதாகவே விலகிச் சென்று விட்டார். கொள்கைகளை ஒருபுறம் வைத்து விட்டு பதவிக்காக ஆசனத்தில் அமர்ந்திருக்க சிவா விரும்பவில்லை. அத்தகையோருக்கு இடத்தை அளித்து விட்டு தன்மானம் மிகுந்தவராக தனது சொந்த ஊரான கோண்டாவிலுக்குப் பயணமானார். கோண்டாவிலில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார் அவர்.

2010 இல் தினகரனை விட்டு நீங்கிய காலம் முதல் இறுதி மூச்சு வரை அவர் எழுதிக் கொண்டேயிருந்தார். இலங்கையின் பல்வேறு தேசியப் பத்திரிகைகளுக்கும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்தார் சிவா.

சில காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். வெளிநாட்டில் வசிக்கும் புதல்விகள் தங்களுடன் வந்து வசிக்குமாறு வற்புறுத்திய போதிலும் அவர் அசையவில்லை. இறுதிக் காலம் வரை தனது மண்ணில் மனைவியுடன் வாழ்ந்தார்.

சொந்தமண் மீதான பற்றுதலும் சிவாவைப் பொறுத்தவரை ஒரு கொள்கைப் பிடிப்புத்தான்.

சிவா காலமானாரென்ற செய்தி தினகரனுடன் இணைந்திருப்போருக்கெல்லாம் நிறையவே வலியைத் தருகிறது. இன்றைய ஊடக சுதந்திர சூழலில் அவர் தினகரனில் இருந்திருப்பின் மேலும் பலம் சேர்த்திருப்பார் என்பதையும் உணர முடிகிறது.

-எஸ்.பி.