பற்குணம் (பதிவு 5)

1956 ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் அரசு பதவி ஏற்றது.அரசு நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்டன. தாய் மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் எங்களைத் போன்ற ஏழைக்குடும்பங்கள் வாழ்வுக்கு நம்பிக்கை வளர்ந்தது. இதே பண்டாரநாயக்கா எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபையின் கோரிக்கையை ஏற்று பல சட்டங்கள் இயற்றினார். ஆலயங்கள்,பொது இடங்களில் தீண்டாமை தடை செய்யப்பட்டது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு பாடசாலைகள் கட்டிக் கொடுக்கவும் வேலை வாய்ப்புகள் வழங்கவும் உறுதியளித்தார். ஆனால் பண்டாரநாக்கா வைத்த கோரிக்கை ஒன்றை செயற்படுத்த எம்.சி.சுப்பிரமணியம் தயங்கிவிட்டார்.

அவர் சிறுபான்மைத் தமிழர்களை நீங்கள் சம்மதித்தால் தனி தேசிய இனமாக அங்கீகாரம் வழங்குவேன் என்றார். ஏனோ எம்.சி. பின்வாங்கிவிட்டார். இந்த தவறால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வு பின் தள்ளப்பட்டது உண்மை. பண்டாரநாயக்காவின் செயற்பாடுகள், கல்வித்துறையில் காலடி எடுத்து வைத்த எங்கள் குடும்பத்துக்கு நம்பிக்கை தந்தன. அய்யா எம்.சி. யின் நண்பர் என்பதாலும் மகாசபை உறுப்பினர் என்பதாலும் எங்கள் பெரிய அண்ணனுக்கு வேலை கிடைக்கும் என நம்பினார். நம்பியதுபோலவே பள்ளிக்கூடங்கள் கட்டி வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டம் செயல் வடிவம் பெற தொடங்கியது.

எமது ஊரில் மதம் மாறி ஆசிரியரான நடராசா வேசம் கலைத்தார். பழையபடி சைவம் ஆனார். அவர் தமிழரசு கட்சி ஆதரவாளராக மாறியபோதும் தன் தேவைக்காக சின்னத்துரை என்பவர் மூலமாக எம்.சி. சுப்பிரமணியத்துடன் உறவை வளரத்தார். எமது ஊரைச் சுற்றிய அயலூரவர்களுக்கு தன்னை எம்.சி. யின் நண்பராக காண்பித்தார். ஆயினும் 1959 ம் பண்டாரநாக்கா கொலையைத் தொடர்ந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை நம்பிக்கை இழந்தது. அதன் தாக்கம் எங்கள் குடும்பத்திலும் இருந்தது.

எங்கள் பெரிய அண்ணன் தொடர்ந்தும் வேலை தேடிக் கொண்டிருந்தார். அண்ணன் பற்குணம் பத்தாவது பரீட்சையில் சித்தியடைந்தார். அவருடைய நண்பன் கணேசபிள்ளை கூட சித்தியடைந்தார். அய்யா. அம்மா மிகவும் சந்தோசப்பட்டனர். ஆனால, குடும்ப சுமை காரணமாக பற்குணம் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை. ஏற்கனவே பெரிய அண்ணனும் வேலையின்றி இருந்தார். அவர் எந்த வேலையும் செய்யும் மனநிலையில் இல்லை. பற்குணம் எல்லாக் களத்துக்கும் தயாரானார். அவர் படிப்பை மட்டும் நம்பிய மனிதர் அல்ல.

ஆனால் அய்யா நொடர்ந்து படிக்க வற்புறுத்தினார். அவரின் நண்பர் கணேசபிள்ளையும் சாஸ்திர சாதக பலன்கள் சொல்லி தன்னோடு படிக்க வருமாறு வற்புறுத்தினார். இந்த இழுபறி நிலை கொஞ்சம் நீடித்தது.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)