பற்குணம் A.F.C (பகுதி 102 )

மாகாண சபை தேர்தலை நடாத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஆர்வம் காட்டின.தேர்தலுக்கு முன்பாகவே ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாண சபைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அந்த மாகாணசபையில் இணைந்து பணியாற்ற பலர் விரும்பியபோதும் புலிகள் மீதான பயம் காரணமாக ஒழிந்துகொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா பற்குணத்துடன் ஏற்கனவே அறிமுகமானவர்.அவருக்கு பற்குணத்தை தெரியும் .இதன் காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் பற்குணத்தை அணுகி மாகாண சபையில் இணைந்து பணியாற்ற அழைத்தனர்.பற்குணம் பின்வாங்கவே அவர்கள் நிலமையை தெளிவுபடுத்தி கூறினார்கள்.பலர் புலிகள் மீதான பயம் காரணமாக மறுப்பதாக விளங்கப்படுத்தினர்.அதைக் கேட்ட பற்குணம் அப்படியானால் நான் வரத் தயார் என்று கூறினார்.இதை செய்தியாக போடலாமா என அனுமதி கேட்டனர்.அவரும் சம்மதிக்கவே இது செய்தியாக பத்திரிகைகளில் வந்தது.

இதை அறிந்த எமது ஊர் புலிகளின் பொறுப்பாளர் ஆஞ்சநேயர் என்பவன்
(இளம்பரிதி பின்னாள் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர்)
எமது சகோதரர் ஒருவரை கண்டு பற்குணம் அந்த மாகாண சபையில், சேர்ந்தால் சுட்டுக் கொல்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.இதைக் கேட்டு பதட்டமடைந்த அவர் பற்குணத்தை தேடிவந்து விசயத்தை கூறினார்.

அவர் நிதானமாகவே நீ அவனிடம் போய் சொல்லு நான் மாகாணசபையில் சேர்வது உறுதி.முடிந்தால் சுடச் சொல்லு என்று கூறினார்.இதைக் கேட்ட எனக்கும் பற்குணத்தின் பதில் முட்டாள்தனமாக பட அண்ணை வேண்டாம் என்றேன்.அதற்கு அவர் இவர்களின் ஒழுங்குக்கு அமைய நாங்கள் பணிபுரிய முடியாது.பணியவும் முடியாது.நேற்று மக்பூலை சுட்டார்கள்.இப்போது என்னைமிரட்டுகிறார்கள் என்றார்.இப்படியே பயந்தால் யாரும் கடமையை செய்ய முடியாது என்றார்.

உண்மையில் ஆஞ்சநேயர் அந்தமிரட்டலை செய்யாதிருந்தால் பற்குணம் மாகாண சபையில் சேர்வதை தவிர்த்தே இருப்பார்.

நான் அடுத்த சில நாட்களில் பற்குணம் வீட்டை விட்டு வெளியேறி கொழும்பில் தனியார் விடுதியில் பணியாற்றினேன்.பற்குணம் மன்னாருக்கு A.F.C ஆக மீண்டும் இடம் மாறினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)