பற்குணம் A.F.C (பகுதி 79 )

பற்குணம் சுயவிருப்பத்தின் பெயரில் யாழ்ப்பாணம். இடமாற்றம் பெற்று பதவியை பொறுப்பேற்றார்.அவர் யாழ்ப்பாணம் வருவதை பல உயர்சாதியினர் விரும்பாதபோதிலும் சூழ்நிலை காரணமாக அவரின் வரவை நிறுத்த முடியவில்லை.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலிழந்த காலம்.ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டம் இருந்தது.

அப்போது பஞ்சலிங்கம் அரசாங்க அதிபராக இருந்தார்.அரசோடும் புலிகளோடும் நட்பானவர்.பச்சோந்தி எனலாம்.1984 இல் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது மகளையும் வேறு சிலமாணவர்களையும் பாதுகாப்பாக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பரீட்சை எழுத அனுப்பி வைத்தவர்.புலிகளின் யோகி குடும்பத்துடன் உறவு என்ற தகவலும் உண்டு.

பற்குணம் பொறுப்பேற்றபோது குடாநாடு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.இராணுவ நடமாட்டம் முடக்கப்பட்ட காலம்.மிகவும் கவனமாகவே செயற்படவேண்டி இருந்தது.ஆனால் நெருக்கடியான சூழலில் மிக சந்தோசமாக சவாலாகவே பதவியைப் பொறுப்பேற்றார்.

பற்குணம் பொறுப்பேற்ற பின் முதலில் புலிகள் கடத்திக்கொண்டு போனார்கள்.அப்போது வாகனத்தில் துப்பாக்கி முனையில் ஏற்றப்பட்ட பின்னர் உள்ளே இருந்து ஆமி யாராவது பின் தொடர்கிறார்களா எனக் கேட்டார்.அதற்கு அவர்கள் இல்லை என்றனர்.அப்போது ஏன் என்னை கடத்துகிறீர்கள்.சும்மா கேட்டால் நான் மட்டுமல்ல எவரும் ஏறிவருவார்கள் என்றார்.அவர்கள் சிரித்துவிட்டு பதில் சொல்லமுடியாமல் மௌனமானார்கள்.

அதன்பின்பு அவர்களின் இடத்துக்கு அழைத்துசென்று இங்கே இடமாற்றம் கேட்டுவந்த காரணம் என்ன என சந்தேகத்துடன் கேட்டார்கள்.என் மீது சந்தேகம் என்றால் நான் பணிபுரிந்த மாவட்டங்களில் உள்ள உங்கள் உறுப்பினர்களை கேளுங்கள் என்றார்.மன்னார் விக்டரை கேட்கலாம்.அவர் என் மூலம் பல உதவிகளைப் பெற்றவர் என்றார்.அதன் பின் அவரை கொண்டுவந்து விட்டனர்.அப்போது துப்பாக்கிகளுடன் வராதீர்கள் என்றார்.அவரகளும் அப்படியே செய்தனர்.

அடுத்து ஈ.பி.ஆர. எல் எப் கடத்த முயன்றபோது தம்பி நானே வருகிறேன் கடத்தல் நாடகம் வேண்டாம் என்றார்.இவரகள் மட்டுமே இவரின் பணி தொடர்பான தகவல்கள்,மற்றும் உணவு கையிருப்புகள் பற்றி விசாரித்தனர்.

இதுபோலவே ரெலோ சிறி சபாரத்தினம் வந்தபோது அவரை சந்திக்க வைக்க அழைத்துச் சென்றனர்.

இவ்வாறான பல சம்பவங்கள் நடந்தபோதும் அதைப் பற்றி யாருடனும் பகிர்ந்தது இல்லை.தன்னுடைய சுயவிளம்பரம் மக்களுக்கான சேவையை பாதிக்கும் என்பதால் பல விசயங்களையும் தனக்குள்ளேயே வைத்திருந்தார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)