பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய இருவர் பேரூந்தில் எனது முன் ஆசனத்தில் இருந்து பேசிய விடயம் என் காதுவரை கேட்டது. கன காலத்துக்கு பின் இப்போதுதான் சொந்த மண்ணுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது பற்றி ஒரு நிமிடம் மட்டும் பேசியவர்கள் ஓவியா பக்கம் பாதை மாறினார்கள். அந்த பிள்ளை போனபின் பிக்பொஸ் சூடு தணிஞ்சு போச்சு என்றார் ஒருவர். மற்றவரோ எண்டாலும் சுஜா அவரை ஈடு செய்வார் என்றார். பதினைந்து நிமிட பயணத்தில் பதின்நான்கு நிமிடங்களும் பிக்பொஸ் பற்றிய பேச்சுத்தான் தொடர்ந்தது. தாயக பயணம் பற்றிய பேச்சை பாதை மாற்றியது பிக்பொஸ்.

நீண்ட நெடிய யுத்தம் பலரை விரும்பியோ விரும்பாமலோ புலம் பெயர வைத்தது. அதிலும் பலருக்கு நீண்ட நெடிய காலம் தாயகம் சென்று வரும் வாய்ப்பை கொடுக்கவில்லை. அப்படி சென்று வந்த சிலர் தம் மன ஆதங்கங்களை முகநூலில் பதிவதும், அல்லது நீண்ட இடைவெளிக்கு பின்பு தாம் சந்தித்த தமக்கு உதவிய அல்லது பழகியவர் பற்றிய பதிவிடல், அல்லது யுத்த பாதிப்பால் சிதிலமடைந்த எம் பாரம்பரிய வீடுகள் கோவில்கள் பாடசாலைகள் வாசிகசாலைகள் பற்றிய காட்சி படங்களை பதிவிடுவது என தொடரும் வேளையில் பிக்பொஸ் பற்றிய நீண்ட உரையாடல் என்னை யோசிக்க வைத்தது.

எல்லா வசதிகளுடனும் அமைக்கப்பட்ட மிகப்பெரிய வீடு. நீந்தி விளையாட நீச்சல் தடாகம். உடல் பயிற்சிக்கு வேண்டிய சாதனங்கள். லக்சரி பஜட் மூலம் கிடைக்கும் சமையலுக்கு வேண்டிய உணவு பொருட்கள். குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசு மெத்தையில் போர்த்திப்படுக்கும் வசதி. வகை வகையான அழகுசாதன பொருட்கள். தினம் ஒரு ஆடை என விரும்பி உடுக்கும் அளவு இரண்டு சூட்கேஸ் நிறைய கொண்டுவந்த ஆடைகள். மேற்குலக நாடுகளுக்கு இணையான குளியல் அறைகள் மலசல கூடங்கள். கூடவே காட்சிப்படுத்தாத புகைத்தல் வசதிக்கான தனி அறை.

இத்தனை வசதிகளுடன் நூறு நாட்கள் தங்கினால் மிக பெரிய தொகை பரிசு. இடையில் வெளியேற வேண்டி வந்தாலும் இருந்த நாளுக்கான கொடுப்பனவு என உத்தரவாதமும் உண்டு. ஒரே ஒரு விடயம் இரண்டு இடங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அறுபது கமெராக்கள் இருபத்து நாலு நேரமும் கவனிப்பில் இருக்கும். இத்தனை சொகுசும் வசதியும் இருந்தும் இரண்டாவது நாளில் இருந்து நான் வீடு போகவேண்டும் என்ற முக்கல் முனல்கள் தொடங்கிவிட்டது. அலைபேசி இல்லை, டிவி இல்லை  வீட்டாரை தொடர்புகொள்ள முடியவில்லை என பல்வேறு காரணங்கள் கூடவே உள்குத்துகள்.

இங்குதான் அன்று ஆழியவளை கரையில் வேதாரணியம் போக படகுக்காக காத்திருந்த அந்த நாள் ஞாபகம் என் மனதில் நிழலாடியது. மட்டக்களப்பு பிராந்தியத்துக்கு என கையளிக்கப்பட்ட புதிய படகின் கன்னிப்பயணம். ஓட்டி மாமா தலைமையில் யசீர் (லோங்ஸ்ரன்) உட்பட பன்னிரண்டு பேருடனான பயணம். என் வாழ்வில் அதுதான் பாக்குநீரிணையை கடக்கும் முதல் பயணம். அதற்க்கு முன் சிறுசிறு பயணங்கள் திருமலை மட்டக்களப்பு பூநகரி கடலில் மீனவர்களுடன் அமைதியான பயணம் செய்த எனக்கு ஆரம்பத்தில் இந்த பயணத்தின் அபாயம் தெரியவில்லை.

அதுவரை பதினைந்து குதிரைவலு இயந்திர படகில் சென்ற நான் இன்று இரண்டு முப்பத்தைந்து குதிரைவலு பூட்டிய இயந்திர படகில் பயணிப்பது அதன் வேகம் பற்றி அறியாத நிலையில் ஆரம்பத்தில் குசியாக இருந்தது. கூடவே பாடவும் மனம் விளைந்தது. ஈரமான ரோசாவே என்னை பார்த்து மூடாதே என்ற பாடலை பலரும் என்னை தொடர்ந்து கோரசாக பாடத்தொடங்கினார். சிறிது நேரத்தில் படகு வேகம் எடுக்க எதிர் அலைகள் பளார் பளார் என்று முகத்தில் அறையத் தொடங்கியது. முகத்தை திருப்பினால் பிடரியில் விழும் அறை. கண் எரியும். காது மந்தமாகும். உடல் விறைக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியால பயணத்தில் இடையில் கடலில் குத்தித்து விடலாமா எனும் அளவுக்கு என் மனநிலை இருந்தது. காதலியின் தாலி பாக்கியம் தான் என்னை வேதாரணியம் கரையில் கால் பதிக்க வைத்தது என்பதை இன்றுவரை அவளுடன் வாழும் நிலை உறுதி செய்கிறது. காரணம் அதற்கு முன் பல அமைப்புகளின் படகுகள் எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி இளையவர் பலர் கடலில் வீர காவியம் ஆனார்கள். அவர்களின் உடலங்கள் கூட கரை ஒதுங்காத சோக சம்மவங்களும் பல உண்டு. இந்த நிலையில் தொப்பமாக நனைந்து நடுங்கியபடி கரைப் பொறுப்பாளரின் முகாம் சென்றடைந்தேம்.

அங்கு பிக்பொஸ் வீட்டில் இருப்பது போல் தினம் தினம் பாவிக்க ஆளுக்கொரு துவாய் எமக்கு தரப்படவில்லை. எல்லா தோழர்களும் இரண்டு துவாயில் துவட்டிக்கொண்டோம். அனைவரும்  நனைந்த உடுப்புகளை களைந்து காயப்போட்டோம். காரணம் நாளை அது காய்ந்தால் தான் எமக்கு அது மாற்று துணி. இது தான் எமது உடை நிலவரம். கடல் பயணம் அகோரபசி தந்தது. சமையல் இடத்தில் அனைவரும் வரிசையாக நிலத்தில் அமர்ந்தோம். எமக்கு அலுமினிய தட்டில் மதியம் சமைத்த சோறும் மீன் குழம்பும் பரிமாறப்பட்டது. தோழர்களின் சமையல் அல்லாவா? உப்பு காரம் எப்படி இருக்கும்?

ஆனாலும் மிச்சம் விடாமல் உண்டோம். பசி ருசி அறியாது. காலை அனைவரும் கும்பகோணம் நோக்கி ஒரு மகேந்திரா ஜீப்பில் அடைந்தபடி பயணித்தோம். பிக்பொஸ் வீட்டுக்கு விளையாட வந்தவர்கள் ஆடம்பர வாகனத்தில் வந்து இறங்கினார்கள். போராட புறப்பட்ட நாங்களோ பேரூந்தில் பயணிக்க கூட பணம் இன்றி ஒருவர் தோளை ஒருவர் இடித்தபடி நெருக்கியடித்து பயணித்தோம். அதுதான் தோழமை. எமக்கு ஒழுங்கான ஆடை இல்லை. ருசியான உணவில்லை. சொகுசான பயணம் இல்லை. போராடினால் கொடுப்பனவு என்ற நிலையம் இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இருந்தும் எவருமே வீட்டுக்கு போகவேண்டும் என்று முக்கவில்லை முனகவில்லை. பயணப்பாதை குண்டும் குழியுமாக இருந்தும் கடும் வெயிலில் வேர்த்து விறு விறுத்தும் நாம் சலிப்படையவில்லை. நாம் சிவபுரம் முகாம் அடைந்த வேளை வாவ் என அவர்கள் வாய் பிளந்த பிக்பொஸ் வீடுபோல் அது இருக்கவில்லை. பெரிய பெரிய தென்னோலை வேய்ந்த கொட்டில்கள் தான் இருந்தன. ஆனால் அதுவே எங்களுக்கு பிடித்தமானதாக இருந்தது. மண்தரையில் பாய் விரித்து கையை தலையணையாக வைத்து தூங்கும் ஏற்ப்பாடு. இதுதானே எங்கள் கிராமத்து திண்ணை வாழக்கை என்ற மகிழ்ச்சி எமக்கு.

அதிகாலையே பயிற்சி ஆரம்பமாகி விட்டது. தங்கும் கொட்டில்களின் மத்தியில் இருந்த மைதானத்தை சுற்றி சுற்றி முதலில் ஓடவேண்டும். பின் கைகளை உயர்த்திபிடித்து அதில் பொல்லுகள் தாங்கியபடி ஓடி பின்பு நிலத்தில் படுத்து கைகளால் தவழ்ந்து இலக்கு நோக்கி செல்லவேண்டும். இங்கு தலையை நிமிர்த்தினால் மேலே இருக்கும் முள்கம்பி வலை பதம்பார்க்கும். இதை குறக்கடையில் மூவ்  ( Crocodile Move ) என அழைத்து இராணுவ முகாம் வேலிகளுள் புகுந்து செல்வது உட்பட பலவையான இராணுவ நடவடிக்கை பயிற்சிகளில் அதுவும் ஒன்று. பயிற்சிகள் முடித்த பின் கடலை தான் காலை உணவு.

பிக்பொஸ் வீட்டில் ரம்சானுக்கு வந்த புரியாணியோ அல்லது டாஸ்க் முடித்தபின் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் அனுப்பும் பரிசோ எமது போராளிகளுக்கு கிடைக்கவில்லை. மதியம் தூங்கினால் குலைக்கும் நாய் ஒலியும் இருக்கவில்லை. காரணம் எதுவும் செய்யாமல் வேண்டியதை சமைத்து வேண்டிய நேரமெல்லாம் உண்பவருக்கே கண் அயரும். இங்கு மக்களுக்காக போராட புறப்பட்டவன் தன்னை புடம் போடும் பலவாறான பயிற்சியில் பகல் மதியம் மாலை இரவு என நேரகாலம் இல்லாமல் ஈடுபடும் வேளையில் இன விடியல் எனும் எண்ணத்தில் அவனுக்கு எப்படி துயில்வரும்.

நான் ஒரு ஆயுத போராளி அல்ல. எனக்கு தரப்பட்ட அடிப்படை பயிற்சி தகவல் அறிதல் பரிமாறல்  தற்காப்பு மட்டுமே. அதனால் பயிற்சிகளின் வலி உடல்ரீதியாக எனக்கு தெரியாது. ஆனால் அதில் ஈடுபட்டவர்களின் இரத்தம் வேர்வையாக வழியும் போது அதன் உக்கிரம் எனக்கு புரிந்தது. உறவுகளை பிரிந்து நெடும் தூரம் வந்த அவர்களின் பிரிவு துயர் சில நேரங்களில் அவர்கள் விழி ஓரம் கசியும் நீரில் தெரியும். சொல்லிவிட்டு வந்தவர்களை விட சொல்லாமல் வந்தவர்கள் வேதனை இரு பக்கமும் உண்டு. புறப்பட்ட வள்ளத்தில் நண்பனை கண்டதும் ஓடிச்சென்று தானும் ஏறிய இளையவர் பலர்.

அவர்களை ஒவ்வொரு இயக்க முகாங்களிலும் தேடி அலைந்த உறவுகளும் பல. எந்த இயக்கத்தில் என் பிள்ளை இருக்கிறான் என்பதை அறிவதற்கு அலைந்த பெற்றவர்கள் நிலை பரிதாபம். தம்பி ராசா என்ர பிள்ளை உங்களோடையே இருக்கிறான் என்று கேட்கும் தாயிடம் அம்மா படம் இருந்தா தாருங்கோ பெயரையும் பின்னால எழுதுங்கோ பொறுப்பாளருக்கு அனுப்பி விசாரிக்கிறம் என்பார் முகாம் வாசலில் நிற்கும் சென்றி. பிள்ளையோ இந்திய பயிற்சி முகாமில் தான் இருப்பதை தாய்க்கு கூற வேண்டாம் என்பான். காரணம் உறவுகளுக்கு மேலாக அவன் மக்கள் விடுதலையை நேசித்தான்.

தெரிந்தால் அம்மா உங்களுக்கு அடிக்கடி கரைச்சல் தருவா என தன் இருப்பை மறைப்பான் தனயன். அவளோ விடாது முகாம் முகாமாக தேடி அலைவாள். அது தாய் பாசம். இவனோ வீட்டு சொகுசுகளை மறந்து பயிற்சி கஷ்டங்கள் பலதையும் தாங்கி பயிற்சி முடித்து படகேற காத்திருப்பான். அது தன் மக்கள் மீதும் தாய் மண்ணின் மீதும் அவன் கொண்ட பற்று. ஓவியாவுக்கு மனநிலை சரியில்லை என்றால் மருத்துவர் வருவார். காயத்திரிக்கு கல்சிய அளவு சீராக இருக்கிறதா என அறிய இரத்த  பரிசோதனை. ஜூலி வயிற்றை பிடித்து கொண்டு கத்தினால் சினேகன் தூக்கிக்கொண்டு ஓடுவார்.

இங்கு நான் சந்தித்த சோக சம்பவம் ஒன்று. பயிற்சி முடித்தவர்களுக்கு முகாம் தாக்குதல் என்ற ஒரு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். புதியவர்கள் தங்கி இருக்கும் முகாமை திடீரென தாக்க அதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஏற்பாடுகள் முடிந்து அப்போது முகாம் மற்றும் இராணுவ பொறுப்பாளராக இருந்த தேவா தலைமையில் அணி புறப்பட்டது. நட்பின் அடிப்படையில் தேவா என்னையும் கூட்டி சென்றார். எனது கையில் ஒரு எஸ் எம் ஜி யை தந்து மரத்தின் பின் மறைந்து நிற்க சொன்னார். கும் இருட்டு. சிறிது நேரத்தில் அந்த சோக சம்பவம் நடந்தது.

புதியவர் முகாமில் ஆட்கள் கைகலப்பில் ஈடுபட்டது போல சத்தம் கேட்டது. திடீரென இரண்டு வெடி சத்தம். ஐயோ அம்மா என்ற அலறல். அந்த திசை நோக்கி ஓடினேன். விளக்குகள் கொளுத்தப்பட்டு டோர்ச் லயிட் வெளிச்சத்தில் பார்த்தபோது இரண்டு புதியவர்கள் இரத்த வெள்ளத்தில். தங்கமகேந்திரன் மற்றும் திருமலை கமலன் தான் மண்ணுக்கடியில் ஜெலிக்னைற் குச்சிகளை புதைத்து வைத்து கண்ணிவெடி வைக்கும் பொறுப்பை எடுத்திருந்தனர். சிறிதளவு வைத்தால் சேதாரம் இராது. அவர்கள் தவறுதலாக பெரிய குச்சிகளை வைக்க அதன் மீது கால்வைத்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதலுக்கு சென்ற நாம் வாகனத்தை தூரத்தில் விட்டு சென்றதால் அவர்களை வாகனம் இருந்த இடம்வரை கொண்டு செல்ல தங்கள் மாட்டு வண்டிலை கொண்டுவந்தனர் ஊரவர். வாகனம் தஞ்சாவூர் வைத்தியசாலை நோக்கி பயணித்தது. காயப்பட்டவர் ஒருவர் பலாலி மற்றவர் செங்கலடி. பலாலி தோழர் கவிதைகளின் காதலன். அவர் வைத்திருந்த கொப்பியில் அவர் எழுதிய விடுதலை கவிதைகள் அத்தனையும் இதயத்தை பிழிபவை. அந்த தோழன் பெயரை என்னால் நினைவு மீட்ட முடியவில்லை. அடுத்தவர் இளங்கோ. வைத்தியசாலை அடையும் வரை விடுதலை கீதங்களை வலி மறக்க பாடினான்.

மனித உருவில் தெய்வங்களாக வைத்தியர்கள். துரிதமாக செயல்பட்டார்கள். இருந்தும் பலன் இன்றி பலாலி தோழன் உயிர் பிரிந்தது. அவன் தலை மயிரை தடவி தன் வேதனையை கட்டுப்படுத்தினார் அந்த பெண் வைத்தியர். இளங்கோ ஒரு காலை இழந்து உயிர் பிழைத்தான். பின்பு அவனை எபிக் பொறுப்பாளராக சந்தித்தேன். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் நாபா தோழருடன் செங்கலடி சென்ற வேளை அவனது அக்கா வீட்டில் எமக்கு உணவை அன்பாக பரிமாறினான். இப்படி இரத்தமும் சதையுமாய் எந்த எதிர்பார்க்கையும் இல்லாத உன்னதமான போராளிகள் எல்லா அமைப்பிலும் இணைந்து மக்களுக்காக மறைந்தனர்.

அவர்கள் எந்த இயக்கத்தில் இருந்தார்களோ அதுபற்றி கவலை இல்லை. அவர்கள் பற்றிய நினைப்பும் இல்லை. நாம் வாழ்ந்த மண் சீரழிவது பற்றி சிந்தனை இல்லை. வாள்வெட்டுகள் கூட்டு வன்புணர்வு பற்றி அக்கறை இல்லை. நாம் வளமான நாட்டுக்கு வந்துவிட்டோம். கிடைக்கும் போது போய் பார்ப்போம். கடன் அட்டையில் சோ காட்டுவோம். ஸ்கூட்டி, சுமாட் போன், பல்சர் பைக் கிழடுகளுக்கு பராமரிப்பு நிலையம். முடிந்தது எங்கள் கடமை. இப்போது எங்கள் தலையை குடையும் பிரச்சனை ஓவியா பிக்பொஸ் வீட்டுக்கு திரும்பவும் வருவாவா? ஆரவ் மீண்டும் மருத்துவ முத்தம் கொடுப்பாரா?

(ராம்)