பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது’- வரதராஜ பெருமாள்

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்க இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய போதிலும், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் அதற்கு தடையாக செயற்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தான் ஒருபோதும் இந்தியாவை குறைக்கூற போவதில்லை என தெரிவித்த வரதராஜ பெருமாள், வி.பி.சிங் மற்றும் கருணாநிதி ஆகியோரையே தான் குறைக்கூறுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையுடன் ராஜீவ் காந்தி ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு, ராஜீவ் காந்தி வைத்த கையொப்பத்தை, வி.பி.சிங் மதிக்காது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மற்றும் விடுதலைப் புலிகள் இணைவதற்கும் ஆதரவாக செயற்பட்டாரே தவிர, ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் அக்கறையுடன் செயற்படவில்லை என அவர் கூறினார்.

சிங்களத் தலைவர்கள், இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இணைந்து செயற்பட்ட நிலையிலேயே, தனக்கு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை நடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகார பகிர்வு என்ற விடயம் உள்ளடங்களாக தாம் அந்த சந்தர்ப்பத்தில் 19 அம்சக் கோரிக்கைகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்த போதிலும், அவர்கள் அதனை புறக்கணித்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாநிதி மற்றும் சிங்களத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து சரியாக செயற்பட்டிருக்கும் பட்சத்தில், 1990ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு இடம்பெற்ற பாரிய அழிவை தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும் என வரதராஜா பெருமாள் கூறுகின்றார்.

1990ஆம் ஆண்டே தமிழர் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கும் பட்சத்தில், அதிகாரம் மிக்க மாகாண சபை முறைமையை பெற்றிருக்க முடியும் எனவும், பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரதராஜ பெருமாள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றினாரா?
வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைக்கும் நோக்குடன் வரதராஜ பெருமாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் அவரிடம் வினவியது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தான் எதிரானவர் என்ற நிலையில், எவ்வாறு அவர்களின் கொடியை தான் ஏற்றியிருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வமான கொடியாக காணப்படுகின்ற கொடியே, வடக்கு, கிழக்கு மாகாண சபையின் கொடியாக அப்போது காணப்பட்டதாகவும், அந்த கொடியையே தான் ஏற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு கிடையாது.
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் இலங்கை பிரிவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரித்த வரதராஜ பெருமாள், இலங்கை தரப்பினரே இந்தியாவிடம் சென்று பயிற்சிகளை பெற்று வந்ததாகவும் நினைவுட்டினார்.

பிரபாகரன் உயிரிழந்தமையில் பெருமை கிடையாது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் உயிரிழந்து, தன்னுடன் சார்ந்தவர்களையும் பலி கொடுத்து, தமிழ் மக்களின் உயிர்களையும் பலியாக்கி, தமிழர்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்தமையில் எந்தவித பெருமையும் கிடையாது என வராராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த உங்களை மக்கள் எவ்வாறு நம்புவது என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தலைவர் என்பவன் மக்களுக்காக கடமையை பொறுப்பேற்று செய்பவனே தவிர, அதனை தவரவிடுபவன் அல்லவென அவர் கூறினார்.

தான் தமிழ் மக்களுக்காக கையில் எடுத்த பொறுப்பை நிறைவேற்றவே இந்த மண்ணில் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான முயற்சிகளையே தான் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைவதற்கு யார் உதவி வழங்க வேண்டும்?
கிழக்கு மாகாண மக்களின் பெரும்பான்மை விருப்பத்தை வெற்றிக் கொள்ளுவோமாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சாத்தியம் காணப்படுவதாக வரதராஜ பெருமாள் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

வடக்கு, கிழக்கு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

மாகாண சபை அதிகாரங்கள் வெற்றிக் கொள்ளப்பட்டு, மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தினால் அதிகாரங்கள் பெரும்பாலும் கிடைத்து விடும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

அதைவிடுத்து, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரே தடவையில் வெற்றிக் கொள்வது என்பது சிரமமான விடயம் என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கூறுகின்றார்.