புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்

தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.

எழுத்தாளரும் நண்பருமான இமையம் கருணாநிதியின் ரசிகர். பெரியார் – அண்ணா – கருணாநிதி மூவரிடையேயான உறவு தொடர்பில் பேசும்போது குறிப்பிட்டார்: “பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியைக் கண்டடைந்ததல்ல விசேஷம். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள திருக்குவளை மாதிரி ஒரு சின்ன கிராமத்திலிருந்து – அதுவும் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அத்தனை கீழிருந்த ஒரு குடும்பத்திலிருந்து – வந்த ஒரு பதின்பருவ இளைஞர், இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி ஏதும் இல்லாத அந்தக் காலகட்டத்தில், தன் தலைவர்கள் என்று பெரியாரையும் அண்ணாவையும் கண்டடைந்தார் பாருங்கள், அதுதான் விசேஷம்!”

அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப் பட்டு, அரசியலை நோக்கிக் காலடி எடுத்துவைத்தபோது கருணாநிதிக்கு 14 வயது. கொஞ்ச காலத்திலேயே ‘மாணவ நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கிவிட்டார். 1942-ல் அண்ணா ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கிய காலகட்டத்தில் கருணாநிதி ‘முரசொலி’யின் பயணத்தைத் தொடங்கினார். ‘திராவிட நாடு’ வெளியான ஆரம்ப நாட்களிலேயே தன்னுடைய முதல் கட்டுரையை அதற்கு அனுப்பிவிட்டார் கருணாநிதி. சில மாதங்கள் கழித்து தஞ்சாவூர் பக்கம் வந்தபோது, தன் முன்னே நின்ற இளைஞர் கருணாநிதியை முதல் முறையாகப் பார்த்தபோது அண்ணா திகைத்திருக்கிறார்!

ஒரு அரசியல்வாதியாகத் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டவர் கருணாநிதி. அது அடுக்குமொழிப் பேச்சோ, கருப்புக் கண்ணாடியோ; தன்னுடைய அரசியலின் தனித்த ஒரு அடையாளமாகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் அவருடைய முயற்சியின் நீட்சியே எல்லாமும். கருணாநிதியின் பேச்சுகள் – எழுத்துகளில் தவறுகள் இருக்கலாம்; அவருடைய நடை – உடை – பாவனைகள், கொள்கைகள், முடிவுகளில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அவை கருணாநிதியின் அசலான வெளிப்பாடுகள். அவருடைய இயல்பிலிருந்தும் விருப்பங்களிலிருந்தும் வெளிப்பட்டவை அல்லது அவராக உருவாக்கிக்கொண்டவை. கருணாநிதி மட்டும் அல்ல; நேற்றைய யுகத்தின் அத்தனை பிரதிநிதிகளும் அப்படியே உருவாகிவந்தார்கள். தங்களுடைய அரசியலைக் கொண்டுசெல்ல தங்களைச் சுற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதை மக்கள் மத்தியில் வெற்றிகரமாகக் கொண்டுசென்றார்களே தவிர, வெற்றிகரமான அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதன்வழி மக்களை ஏமாற்ற முற்படவில்லை.

இது புது யுகம். இதுவரை நிபுணர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்ட காலம் போய், இப்போது நிபுணர்கள் அரசியல்வாதிகளைக் கையாளத் தொடங்கும் யுகத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். அதாவது, மறைமுகமாக நிபுணர்கள் வடிவில் பின்னிருந்து அரசியல்வாதிகளை இயக்கும் ‘நிழல் அதிகார மைய’ங்களின் யுகத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். இந்தப் புதிய யுகத்தில் அரசியல்வாதிகள் வெறும் கதாபாத்திரமாகிவருகின்றனர். எதை உடுத்தினால் எடுப்பாக இருக்கும்? எதைப் பேசினால் எடுபடும்? எதை அறிவித்தால் ஓட்டுகளை அள்ளலாம்? எந்த அதிர்ச்சி நடவடிக்கையை எடுத்தால் மக்களின் கவனத்தை நம் மீதான விமர்சனங்களிலிருந்து வேறொன்றை நோக்கித் திருப்பலாம்? இவை ஒவ்வொன்றையும் தீர்மானிக்கத் தொழில்முறை நிபுணர்கள் உள்ளே வந்தாயிற்று. அதாவது, என்னுடைய கை, கால்களுக்குக் கொஞ்சம் பூச்சு அடித்துப் பளபளப்பாக்கி மக்களிடம் நான் செல்வாக்கு பெற்ற காலம் போய், மக்களிடம் செல்வாக்குள்ள பளபளப்பான கைகள், கால்களை வாங்கி நான் பொருத்திக்கொள்ளும் நிலை இது. அப்படியென்றால், என்னுடைய இயக்கத்தைத் தீர்மானிக்கும் மூளை எது? சுயமாக அப்படி ஒன்று செயல்பட முடியுமா?

அபாயகரமான போக்கு இது. கட்சிகளைக் கடந்து நீள்கிறது. 2014 பொதுத் தேர்தலில் மோடியின் பிம்பம் அடைந்த வெற்றி வரலாற்றை அதற்குப் பின்னிருந்த கைலாஷ்நாதன்கள், பிரஷாந்த் கிஷோர்களைப் பிரித்துவிட்டு எழுத முடியுமா? ஸ்டாலினின் இன்றைய அறிக்கைகளை எழுதுபவர் யார்? ‘நமக்கு நாமே’ தேர்தல் பயணத்தைத் திட்டமிட்டது எந்தக் குழு? அன்புமணி ராமதாஸின் தேர்தல் மேடைகள் உருவாக்கத்திலும் அவருடைய பிரச்சார வடிவமைப்பிலும் பின்னிருந்தது எந்த நிறுவனம்? இந்த நிறுவனங்களின் மூளையை ஏன் வெளியிலிருந்து சிலர் தீர்மானிக்கக் கூடாது? ஏனென்றால், அரசியல்வாதிகள் பேசும் முறையை மட்டும் அல்ல; அவர்களின் பேசுபொருளையும் வெளியாட்கள் தீர்மானிக்கிறார்கள்.

நாட்டிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டதும் ஏழைகளைக் கொண்டதுமான உத்தர பிரதேசத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஜார்டிங்குக்கும் இடையே உருவாகியுள்ள உறவை இங்கு குறிப்பிடலாம். யார் இந்த ஸ்டீவ் ஜார்டிங்?அமெரிக்கர். அவர் அளிக்கும் புகழ்பெற்ற பயிற்சியின் பெயர் என்ன? ‘அரசியல்வாதிகளை உருவாக்குதல்!’ வெற்றிகரமான அரசியல்வாதியாக ஒருவரை உருமாற்ற ஒருவருக்கு நடை உடை பாவனைகளைக் கற்றுத் தரும் பயிற்சி இது. எப்படிப் பேசுவது, எப்படிப் பேட்டிகளுக்குப் பதில் அளிப்பது, எப்படிப் பொதுவெளியில் உடல்மொழியை வெளிப்படுத்துவது, எந்தெந்த அரசியல் சூழலில் எப்படி முடிவெடுப்பது என்று எல்லாவற்றுக்கும் பயிற்சி. தவிர, பயிற்சிக்குப் பிறகு, அவ்வப்போதைய அரசியல் முடிவுகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார் ஸ்டீவ். ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்று கண்டம் விட்டுக் கண்டம் சுற்றும் ஸ்டீவின் சமீபத்திய வாடிக்கையாளர் அகிலேஷ். உத்தர பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களுக்குள் நடந்திருக்கும் முக்கியமான அரசியல் மாறுதல்கள், அகிலேஷின் குடும்பத்தில் நடந்திருக்கும் பிளவுகள் தொடர்பில் ஸ்டீவுக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆக, உத்தர பிரதேச மக்கள் வாழ்க்கையை மறைவில் ஒரு அமெரிக்கரும் தீர்மானிக்கிறார். நாளை அமெரிக்காவும் தீர்மானிக்கலாம்.

இந்தப் புதிய யுகத்தின் மிக வெற்றிகரமான நடிகர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் ஒரு சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், நமக்கு எப்படி அந்த வேடமிட்டு நடித்த சிவாஜி கணேசனின் முகமே நினைவுக்கு வருமோ அப்படி கதாபாத்திரத்தையே தானாக மாற்றிவிடும் வல்லமை மிக்கவர் மோடி. நிழல் அதிகார மையமான ஆர்எஸ்எஸ்ஸின் முகமூடி அவர் என்பதை அவருடைய சொந்த கட்சியினரையே மெய்மறக்கச் செய்துவிடும் ஆற்றல் மோடியிடம் உண்டு. அகிலேஷ், ஸ்டாலின், அன்புமணி போன்றவர்கள் இயக்கத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் இடையிலான எல்லை எது என்று தெரியாமல் குழம்பியவாரே இரண்டையும் நியாயப்படுத்த முயல்கிறார்கள். சசிகலா இவர்கள் அவ்வளவு பேரையும் ஏப்பம் விட்டு செரிக்க முயல்கிறார்.

பேராசை வேட்கையின் உச்சத்தில் நிழல் அதிகார மையமே சகலத்திலும் நிஜமாக முற்படும் சாகசம் இது. அதாவது, ஒரு இயக்குநர் தானே கதாபாத்திரமாக மாறுவதோடு, சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வேடமிட்டுக்கொண்டு ஊரையும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று அழைக்கச் சொல்லும் முயற்சி இது. நம் முன் இருக்கும் பெரும் சவால் இந்த ஒரு சசிகலா மட்டும் அல்ல; இன்னும் இன்னும் இப்படிப் பல சசிகலாக்களாக மாறத் துடிக்கும் நிழல் அதிகார மையங்களும் எல்லா இடங்களிலும் நிழல் அதிகார மையங்களோடு கூட்டு சேர்ந்திருக்கும் மூலதனமும். இந்திய மக்களாகிய நாம் மிகச் சவாலான ஒரு காலகட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்!

(சமஸ்)