கண்டுகொள்ளப்படாத மானிடப் பேரவலம்

நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிற
கேப்பாபிலவின் நிலகேள்விப் போராட்டக் களத்தில்,
தங்களைத் தாங்களே உளஆற்றுகைப்படுத்தி கற்றலைக் கற்றுக்கொண்ட எம் பிள்ளைகள்.

– ஆடல், பாடல், அரங்க ஆற்றுகைகளுக்கு வாத்திய சகிதம் வருகை தந்து இசைப்பொழுதுகளை நிகழ்த்தித்தந்த அண்ணன்களுக்கும்,

– ஆரம்ப பிரிவு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களோடு ஆதரவு தந்த அண்ணன்,

– தொலைவிலிருந்து தனது கல்வி வலயத்தின் கற்பித்தல் துணைஏடுகளை அனுப்பி வைத்த
ஆசிரிய ஆலோசகர்
ஆகிய நல்லுள்ளங்களுக்கு இன்றைய மாலையின் நன்றிகள் கிட்டட்டும்.

இடரினும் தளரினும்,
இறும்பூதொடு கற்கின்றனர் எம்மிளவல்கள்!
சிறுசுகள் கண்டிக்க ஆளில்லாத முழுச்சுதந்திரத்தில் ஆடித்திரியினும்-
‘கற்காதிருத்தல்’, தம் பெற்றோரது போராட்டக் கூர்மையை குறைக்கும் என்பதை
நன்கே புரிந்திருக்கின்றனர், வளர்ந்த பிள்ளைகள்.
சுப்பிரமணிய பாரதியின்,

“மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்…” பாடலை பொருளுணர்ந்து நயத்தனர்.
“எங்கள் மண் கேப்பாபிலவு” என்று தொடங்கும்
தானே இசையமைத்து – பாடுகிற, தனியிசைக்கு உரித்தான
பிரியங்கனினதும் – தோழர்களினதும் கண்களால் தெறிக்கின்ற நம்பிக்கைஒளிக்கு நிகரில்லை!
என் மக்கள் தோற்றிடல் கூடாதென்ற ஏக்கம்,
குரல்வளையில் மிடறுகின்றது?

(Aathavan Gnana)